கரோனா தடுப்பூசி: பிறக்கிறது நம்பிக்கை ஒளி!

By செய்திப்பிரிவு

த.வி. வெங்கடேஸ்வரன்

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அச்சுறுத்தல் செய்திகளையே தந்துவரும் கரோனா வைரஸ் குறித்து, நம்பிக்கை அளிக்கும் செய்தி வந்துள்ளது.

நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோவேக் நிறுவனத்தின் கரோனாவேக், கேன்சினோ நிறுவனத்தின் ad5, இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் AZD1222 ஆகிய மூன்று தடுப்பு மருந்துகள்-முதல் இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவ ஆய்வுக்கு முன்னேறியுள்ளன.

இந்தத் தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட ஆய்விலும் வெற்றியடைந்தால், அம்மை நோயை ஒழித்துக்கட்டியதுபோல் தடுப்பூசி மூலம் உலகை ஆட்டிப்படைத்த நாவல் கரோனா வைரஸ் தொற்றை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான ‘லான்செட்’டில் இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வெளியானது.

அறிவியல் பரிசோதனை உறுதி

தடுப்பூசி ஆய்வுகள் எப்படி நடைபெறுகின்றன? காக்கை உட்கார பனம்பழம் விழுந்தால் காக்கை உட்கார்ந்ததுதான் காரணம்; பணம் பழம் விழுந்தது காரியம் என முடிவுசெய்வது அபத்தமாகிவிடும். அதுபோல் குறிப்பிட்ட மருந்தை உட்கொண்டவர் குணமடைந்தால், அந்த மருந்து மட்டுமே அந்த நோயைக் குணப்படுத்தியது எனக் கருத முடியாது. தற்செயலாக வேறு காரணங்களால் குணமடைந்திருக்கலாம். எனவேதான் மருந்து ஆராய்ச்சி உட்பட பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் பரிசோதனைக் குழுவுடன் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்டக் குழு (control group) என்ற ஒன்றை உருவாக்கி ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டாகப் பரிசோதனையில் பங்குபெறும் தன்னார்வலர்களில் பாதி பேருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்றவர்களுக்குப் பிளாசிபோ எனும் பாசாங்கு மருந்தும் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். மருந்து தரப்பட்டவர்கள் கூடுதலாகக் குணமானால் மருந்துக்குப் பயன் உள்ளது என அறியலாம். ஆய்வுக் காலம் முடிந்த பின்னர் தரவுகள் தொகுக்கப்பட்டு ஒப்பிடப்படும். எடுத்துக்காட்டாக இரண்டு குழுவிலும் சற்றேறக்குறைய சமமான சதவிகித நபர்களுக்குத் தலைவலி ஏற்பட்டால், அது தடுப்பூசியால் ஏற்பட்டதல்ல எனக் கருதலாம். ஆனால் தடுப்பூசி தரப்பட்டவர்களுகக் கூடுதலாகக் காய்ச்சல் ஏற்பட்டால், தடுப்பூசியின் பக்கவிளைவு என்ற முடிவுக்கு வரலாம்.

தன்னுணர்வுத் தகராறு

ஆய்வு செய்பவர்களின் இச்சையும் ஆய்வின் தரவுகளை பாதிக்கக்கூடும். தடுப்பூசி கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்யும்போது, அதன் பலன் அதிகரிக்க வேண்டும், பக்கவிளைவு குறைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இடையிடையே பரிசோதிக்கும் மருத்துவர், தடுப்பூசி தந்தவர்களை ஒருமாதிரியாகவும் மற்றவர்களை வேறுவிதமாகவும் நடத்தக்கூடும். தனக்குத்தான் பரிசோதனைத் தடுப்பூசி தரப்பட்டுள்ளது எனத் தெரிந்தால் அந்த நபர் கூடுதல் தன்னுணர்வு பெற்று, தனக்கு ஏற்பட்ட விளைவை கூட்டியும் குறைத்தும் சொல்லலாம். இவையெல்லாம் ஆய்வுக்குக் களங்கம் ஏற்படுத்துபவை.

எனவேதான், எந்தத் தன்னர்வலருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, எவருக்கு பாசாங்கு மருந்து தரப்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களுக்கும் தன்னர்வலர்களுக்கும் தெரியாதபடி கணினி வழியே சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையில் (Random Process) யாருக்கு உண்மையான தடுப்பூசி தரப்படும், யாருக்குப் பாசாங்கு மருந்து தரப்படும் என்பது தேர்வுசெய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் எண்கள் இட்டுத் தடுப்பூசி மருந்துப் புட்டிகள் தயார் செய்யப்படுகின்றன. கணினிப் பட்டியல்படி தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்தப்படும். எனவேதான், செலுத்தும் மருத்துவர், தன்னார்வலர் இருவருக்குமே யாருக்கு உண்மையான தடுப்பு மருந்து தரப்பட்டது, யாருக்கு பாசாங்கு மருந்து தரப்பட்டது என்பது தெரியாது.

பரிசோதனைக் காலத்தில் இடையிடையே ரத்தம் எடுத்து வைரஸுக்கு எதிராக எதிரணுவைப் (ஆன்டிபாடி) போன்று தடுப்பாற்றல் மண்டலம் சுரக்கும் ‘பி’ செல், ‘டி’ செல் வினை பொருள்கள் உள்ளனவா எனப் பரிசோதனை செய்வார்கள். அத்துடன் தன்னார்வலர்களுக்கு ஏற்படும் தலைவலி தொடங்கி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் குறித்துத் தகவல் சேகரிக்கப்படும். ஆய்வுக் காலம் முடிந்த பின்னர் கணினியில் யாருக்கு தடுப்பூசி தரப்பட்டுள்ளது, யாருக்கு பாசாங்கு மருந்து அளிக்கப்பட்டது என்ற விவரத்தைத் திரட்டி ஆய்வுத் தரவுகளுடன் பொருத்திப் பார்க்கப்படும். உள்ளபடியே தடுப்பூசித் திறனுடன் உள்ளதா என மதிப்பீடு செய்யப்படும்.

மூன்று கட்டப் பரிசோதனை

சமவாய்ப்புள்ள இரட்டை மறைவு கட்டுப் படுத்தப்பட்ட சோதனை (randomised double-blind control trial) எனும் இந்த ஆய்வுமுறையில்தான் மனச்சாய்வின்றி, இந்த மூன்று தடுப்பூசி பரிசோதனைகளின் இரண்டு கட்ட ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. தடுப்பூசியால் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா, ஓரளவாவது தடுப்பாற்றல் தூண்டப்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்வது முதல் கட்ட மருத்துவ பரிசோதனை. தடுப்பூசியின் பயன் குறித்து இரண்டாம் கட்டம் கவனம் செலுத்தும்.

வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் இயல்பாக வெளிப்படுத்தும் ‘பி’ செல், ‘டி’ செல் விளைவுகளைத் தடுப்பூசி ஏற்படுத்துகிறதா என மதிப்பீடுசெய்யப்படும். இதே கட்டத்தில் எந்த அளவு தடுப்பூசி தரவேண்டும், ஊக்கப்படுத்தும் டோஸ் தேவையா, எவ்வளவு நாட்கள் இடைவெளியில் ஊக்கப்படுத்தும் டோஸ் தரவேண்டும் என்பது போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில் பல ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு எல்லா வயதினரிடமும் பல்வேறு உடல்நல நிலைகளுடன் காணப்படு பவர்களிடமும் தடுப்பூசியின் செயல்திறன் உறுதி செய்யப்படும்.

மூன்றாம் கட்ட ஆய்வில் கரோனாவேக்

சீனாவின் ‘சினோவேக் பயோடெக்’ நிறுவனம் செயலிழந்த வைரஸை கொண்டு உருவாக்கப்பட்ட கரோனா வேக் (CoronaVac) தடுப்பூசியில் முதல், இரண்டாம் கட்ட சோதனைகள் முடிந்துள்ளன. மொத்தம் 743 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க அபாயகரமான பக்கவிளைவுகள் ஏதுமில்லை. எதிர்பார்த்தபடி மனிதர்களின் உடலில் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றலை தடுப்பூசி தூண்டுகிறது எனவும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மூன்றாம் கட்டத்தில் ஆயிரம் தன்னார்வலர் களை ஈடுபடுத்தி, அவர்களில் சரி பாதி பேருக்குத் தடுப்பூசி தரப்படும். மற்றவர்களுக்குப் பிளாசிபோ எனப்படும் பாசாங்கு மருந்து தரப்படும். தடுப்பூசித் திறனுடன் வேலை செய்கிறது என்றால், தடுப்பூசி தரப்பட்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது. ஆனால், பிளாசிபோ மருந்துத் தரப்பட்டவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் தூண்டுதல் ஏற்பட்டு இருக்காது என்பதால் நோய் தொற்று ஏற்படும். இரண்டு குழுக்களிலும் எவ்வளவு பேருக்கு இயல்பில் கரோனா தொற்று ஏற்படுகிறது எனக் கண்காணித்து, தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பீடு செய்வார்கள். கரோனா தொற்று காட்டுதீ போல் பரவி வருவதால் ஐம்பது சதவீத நபர்களுக்குத் தடுப்பாற்றல் ஏற்பட்டாலும், தற்காலிக அனுமதி அளிக்கலாம் என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

சீனாவில் கரோனா தொற்று கணிசமாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கே பரிசோதனை நடத்துவது கடினம். எனவே, பல்வேறு தரப்பினரிடம் பரிசோதனை நடத்தி தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகப் பிரேசிலின் சுகாதாரக் கட்டுப்பாடு மையமான ‘அன்விசா’வுடன் (Anvisa) சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த மூன்றாம் கட்ட ஆய்வு ஜூன் 29 அன்று தொடங்கியுள்ளது.

நவீனத் தடுப்பூசிகள்

விரும்பிப் பார்க்கும் திரைப்படத்தின் நடுவே விளம்பரங்களை இணைத்துத் தொலைக்காட்சி யில் ஒளிபரப்புவது ஓர் உத்தி. அதேபோல், சாதாரண சளிக்காய்ச்சல் ஏற்படுத்தும் அடினோ வைரஸ் மரபணுத் தொகுதியின் ஊடே கரோனா வைரஸின் ஈட்டிமுனைப் புரதம் தயார்செய்யும் மரபணுவைப் புகுத்தி, மரபணு மாற்றத் தடுப்பூசி தயாரிக்கலாம். சீனாவின் ‘கேன்சினோ பயலாஜிகல்’ நிறுவனம் தயாரித்துள்ள Ad5 தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள AZD1222 என்ற தடுப்பூசியும் அடினோவைரஸை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட மரபணு மாற்றத் தடுப்பூசிகள்தாம்.

முதல் கட்ட மருத்துவ ஆய்வில் 108 பேரிடம் Ad5 தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவு மார்ச் 2020 வெளியிடப்பட்டது. பின்னர் 8 வயது முதல் 83 வயதுடைய 508 பேரிடம் இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. சடுதியில் ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக முதல் இரண்டு கட்டங்களை இணைந்து ஒரேடியாக 1,077 பேரிடம் இங்கிலாந்தின் AZD1222 தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 18 வயது முதல் 55 வயதுடைய நபர்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர். இறப்பு விகிதத் தரவுகளின்படி மூப்படைந்தவர்களே கரோனாவால் அதிகம் இறந்துள்ளனர்.

இரண்டு தடுப்பூசிகளும் சுமார் 85-90% பேரிடம் ‘டி’ செல், ‘பி’ செல் நோய்த் தடுப்பாற்றல் வினையைத் தூண்டி, எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. இரண்டு தடுப்பூசிகளிலும் ஆபத்தான பக்கவிளைவுகள் இல்லை. முதல் முறை செலுத்திய பின்னர், சில நாள் கடந்து ஊக்கப்படுத்தும் டோஸ் கொடுத்தால், தூண்டப்படும் தடுப்பாற்றல் மேலும் வலுவடைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் அடுத்த கட்ட ஆய்வுக்கு வெகுவிரைவில் செல்லும்.

அடுத்த கட்டம்

அனைத்து வயதினரிடமும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தை தடுப்பூசிகள் கணிசமான அளவுக்கு உருவாக்குகின்றனவா? அப்படி உருவாக்கும் பட்சத்தில் நோய் தடுப்பாற்றல் எவ்வளவு காலம் நீடிக்கிறது? தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாவது பலன் தருமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு. அதனால் மூன்றாம் கட்டப் பரிசோதனையைக் குறைந்தபட்சம் 5000-த்துக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு வெளிவர மூன்று, நான்கு மாதம் ஆகும். அதன் பின்னர் பரவலாக விநியோகிக்கப் பெருமளவில் உற்பத்திசெய்ய வேண்டும். எனவே, இந்தத் தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் 10 முதல் 12 மாதங்கள் ஆகலாம்.

கட்டுரையாளர், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவன விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்