ஆதரவுக் கரம்: இப்போது இல்லையென்றால், எப்போது உதவப் போகிறோம்?

By செய்திப்பிரிவு

ச. கோபாலகிருஷ்ணன்

கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட வர்களையும் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடிய வர்களையும் மனிதத்தன்மையற்ற வகையில் நடத்தும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் அதிகரித்துவருகின்றன. உறவினர்களும் நண்பர்களும்கூட கரோனா தொற்றுள்ளவர்களையும் தொற்று இருக்கக்கூடும் என்று அஞ்சப்படு பவர்களையும் இப்படி நடத்தும் நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் தனிமனித இடைவெளி பராமரிப்பு, இது போன்ற செயல்களை நியாயப்படுத்தவும் வசதியாக உள்ளது. நம்முடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது நம் கடமை. அதேநேரம் அந்தப் பாதுகாப்புணர்வு மற்றவர்களை எவ்வகையிலும் புண்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஒருநாள் என் நெருங்கிய நண்பன் குமாருக்கு* லேசான காய்ச்சலும் சளியும் இருந்தது. தன் வீட்டின் தனிஅறையில் அன்றைக்கே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

அடுத்த நாள் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்து உட்கொண்டு மூன்று நாட்களில் குணமாகவில்லை என்றால், கரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ளச் சொல்லி மருத்துவர் எழுதிக்கொடுத்திருக்கிறார். மூன்று நாட்களில் குமாருக்குக் காய்ச்சல், சளி குணமாகிவிட்டது. இருந்தாலும் வீட்டில் கைக்குழந்தையும் மூப்படைந்த பெற்றோரும் இருப்பதால் ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொண்டான். ‘நெகடிவ்’ முடிவுதான் வரும் என்று அவனும் நண்பர்களும் உறுதியாக நம்பினோம்.

அதிர்ச்சி தந்த முடிவு

ஆனால், சனிக்கிழமை காலை குமாருக்குக் கரோனா தொற்று இருக்கிறது என்று தெரியவந்தது. எங்கள் நண்பர்கள் குழுவில் அண்ணனாக மதிக்கப்படும் ரமேஷ்தான் இந்த தகவலைக் கூறினார். வீட்டில் கைக் குழந்தை இருப்பதால் குமார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றாக வேண்டிய நிலை. பத்திரிகையாளன் என்பதால் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்க உதவமுடியுமா என்று ரமேஷ் என்னிடம் கேட்டார். தனியார் மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு குமாருக்குக் கரோனா தொற்று உறுதியாகி இருந்ததே காரணம்.

எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு பைக்கை எடுத்துக் கொண்டு, குமாரின் வீட்டுக்குச் சென்றேன். வெளியிலிருந்தபடி குமாரிடம் கைபேசியில் பேசினேன். மருத்துவமனைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தவன் பற்பசை, சோப்பு, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவரச் சொன்னான். திடீரென்று அவன் அம்மாவிடம் அவனுடைய தாய்மொழியில் ஏதோ உரக்கப் பேசினான். தகவல் வந்ததிலிருந்து அவனுடைய அம்மாவும் மனைவியும் அழுதுகொண்டே இருந்திருக்கிறார்கள். வெளிக்கதவுக்கு அருகில் சென்று அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் நானும் பேசினேன். பிறகு குமார் வாங்கிவரச் சொன்ன பொருட்களை வாங்கிவந்தேன்.

ஆறுதலும் அச்சமும்

திரும்பிவருவதற்குள் எனக்குத் தகவல் சொன்ன ரமேஷும் அவருடைய மனைவியும் குமார் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களும் வாசலில் நின்றபடி குமாரின் அம்மாவுக்கும் மனைவிக்கும் தைரியமளிக்கும் வகையில் பேசினார்கள். குமாருக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தது, அவர்களை சமாதானப்படுத்த உதவியது. அதேநேரம் அந்த வீட்டில் கைக்குழந்தையும், இதய அறுவைசிகிச்சை செய்துகொண்ட குமாரின் தந்தையும் இருந்தார்கள். அதனால் குமாரைத் தனிமைப்படுத்துவதுதான் சரி என்று எங்களுக்குத் தோன்றியது. குமார் அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டான். நானும் பின்தொடர்ந்து சென்றேன்.

காத்திருப்பு

கரோனா பரிசோதனை, சிகிச்சைக்கென அங்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. வாகனம் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் காத்திருந்தேன். குமாருக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கக் கைபேசியில் அழைத்தபோது, ‘இங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். நீ வீட்டுக்குப் புறப்படு' என்றான். இருந்தாலும் நிலவரத்தை தெரிந்துகொள்வதற்காக, அங்கு ஒரு மணி நேரம் காத்திருந்தேன். பிறகு வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு குமாருக்கு தண்ணீர் பாட்டில், உணவு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன்.

எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. என ஒவ்வொன்றுக்கும் குமார் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது. சாப்பாடு கொடுக்க உள்ளே வரவா என்று கேட்டபோது “இங்கு பல நோயாளிகள் இருக்கிறார்கள். நீ உள்ளே வந்துவிடாதே” என்று மறுத்துவிட்டான். அங்கிருந்து புறப்பட வலியுறுத்தினான். என் வீட்டிலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையும் முதியவர்களும் இருக்கிறார்கள் என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. ஆனாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. அங்கேயே காத்திருந்தேன். மாலை நான்கு மணிக்கு மேல் வெளியே வந்த குமார், வண்டி நிறுத்திமிடப் பகுதியிலேயே சற்று தள்ளி நின்று சாப்பிட்டுவிட்டு, மற்ற பரிசோதனை களுக்காக மருத்துவமனை வளாகத்தின் வேறொரு கட்டடத்துக்குச் சென்றான்.

மருத்துவமனையில் காத்திருந்தபோது குமாரின் குடும்பத்தினருக்கு பணம் எடுத்துக் கொடுப்பதற்காக அவனிடமிருந்து ஏ.டி.எம். அட்டையைப் பெற்று ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றேன். கையுறைகளை வாங்கி அணிந்து கொண்டு, பணம் எடுத்துக்கொண்டு வந்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று குமாருக்கும் கையுறைகளை வாங்கிச் சென்றேன்.

பதற்றம் தணித்த செயல்கள்

குமார் வீட்டு வாசலில், அந்த வீட்டில் இருந்தவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப் பட்டதை அடையாளப்படுத்தும் ஸ்டிக்கரை மாநகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை ஒட்டினார்கள். வீட்டு வாயிலை மறைக்கும்படியாக தட்டிகளை வைத்தார்கள். இப்படி நடக்கும்போது வீட்டில் இருப்பவர்கள் சங்கடமாக நினைக்கலாம் என்பதால், அங்கு செல்ல முடியுமா என்று தயக்கத்துடன் குமார் என்னிடம் கேட்டான். நான் சென்று வெளியே நின்றபடி, மாநகராட்சி ஊழியர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதை, அவனுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கி அவர்களுடைய சந்தேகங்களைப் போக்க உதவினேன். வீட்டிலிருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டுமா என்று மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, அறிகுறி தென்பட்டால் சோதனை செய்யச் சொன்னார்கள்.

நம்பிக்கை அளித்த நட்புச் சூழல்

நோய் அறிகுறி எதுவும் இல்லாததால், சில நாட்களில் குமார் பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டான். பராமரிப்பு மையத்தில் பத்து நாட்களுக்குக் குமார் இருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் நானும் சில நண்பர் களும் தேவைப்பட்டபோதெல்லாம் அவனு டைய குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்று வாயிலில் வைத்துவிட்டு வந்தோம். இடையில் குமாரின் அம்மாவுக்கு மருத்துவ உதவி தேவைப் பட்டபோதும் நான் உடன் சென்றுவந்தேன்.

ஒவ்வொரு முறை குமார் வீட்டுக்கு சென்றபோதும் முகக்கவசம் அணிவது., சானிடைசரை வைத்து கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது, வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிடுவது ஆகிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை வழிமுறைகளை நண்பர்கள் அனைவரும் பின்பற்றினோம். எங்கள் பாதுகாப்பை உரிய வகையில் உறுதி செய்துகொண்டே எதிர்பாராத இன்னலைச் சந்தித்த குமார் குடும்பத்துக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மேற்கொண்டோம். இதன் காரணமாக குமாரும் பெரிய மனக்கவலை இல்லாமல், சிகிச்சை பெற்றுத் திரும்ப முடிந்தது.

அதைவிட முக்கியமாகக் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும் தொற்று ஏற்படக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கும் நம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டே நேரடியாக உதவ முடியும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொள்ள முடிந்தது. நாளை எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டால் குமாரும் மற்ற நண்பர்களும் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் வலுவாக மனதில் தோன்றியது.

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

கட்டுரையாளர் தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்