டாக்டர் கு. தங்கவேல்
பொது முடக்கத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன?
நோய் பரவும் வேகத்தை பொது முடக்கம், சமூகக் கட்டுப்பாடுகள் குறைக் கின்றன என்பதால், தொற்றுநோயை எதிர்கொள்வ தற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அதுவே நோயை முற்றிலும் ஒழித்துவிடாது. நம்மைப் போன்ற நாடுகள் நீண்ட காலத்துக்கு முடக்கப்பட்ட நிலையில் இருக்க முடியாது. ஏனென்றால், நீண்டகாலப் பொது முடக்கம் மக்களின் ஆரோக்கியம், பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அது கோவிட்-19 ஏற்படுத்தும் பாதிப்பைவிடக் கடுமையாகவும் நீண்ட நாட்களுக்கும் நீடிக்கும்.
அதிக வெப்பம் கோவிட்-19 லிருந்து நம்மைப் பாதுகாக்குமா?
தொடக்க நிலையில் பலரும் இதைக் கூறினார்கள். வேடிக்கை என்னவென்றால், குளிர் நாடுகளில் வசிக்கும் மக்கள் அதிகக் குளிரால் வைரஸ் பரவாது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்ததுதான். இவை, இரண்டுமே அறிவியல் உண்மையல்ல (அக்னி நட்சத்திரம் என்ற பாரம்பரிய நம்பிக்கையின்படி, வெப்பம் மிக அதிகமாக இருந்த காலத்தில்தான் தமிழ்நாட்டில் அதிக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்). வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை ஓரளவுக்குப் பாதிக்கும் என்றாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நோயின் பரவலைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகளாக அவை இருப்பதில்லை.
உண்மையில் குளிர், கோடை மாதங்களை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது நோய்ப் பரவலை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று மட்டுமே. குளிர் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதை பெரும்பாலும் விரும்பு வதால், நோய்த் தொற்றும் சாத்தியம் அதிகம். ஏனென்றால், ஒரே அறையில் குடும்பத்தினர் அதிக நேரம் இருக்கும்போது, வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு சாத்தியம் அதிகரிக்கிறது. கோடைக் காலத்தில் இந்தியர்கள், குறிப்பாக ஆண்கள் திறந்தவெளி (அ) பாதி திறந்தவெளியில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதால், இது நோய் பரவும் சாத்தியத்தைக் குறைக்கலாம்.
இந்தியர்களுக்கு உள்ளார்ந்த நோய்த் தடுப் பாற்றல் (Innate Immunity) அதிகம் என்று நம்பப்படுவதால், கோவிட்-19லிருந்து அது நம்மைப் பாதுகாத்துவிடுமா?
இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது, நமக்கு உள்ளார்ந்த நோய்த் தடுப்பாற்றல் அதிகம். அதனால் கோவிட்-19க்கு பயப்படவேண்டாம் எனக் கூறப்பட்டது. இந்தியர்கள் பிறந்ததிலிருந்து ஏராளமான தொற்றுநோய்களால் (காச நோய், மலேரியா) பாதிக்கப்படுவதால், கோவிட்-19க்கு எதிரான நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றிருப்பார்கள் என்றே நம்பப்பட்டது.
ஆனால், இந்த வாதம் தவறு என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது; நோய்த்தொற்றுகளைப் பொறுத்தவரை நாம் தனித்தன்மை கொண்டவர்கள் அல்ல, நாமும் உலகின் மற்ற நாட்டு மக்களைப் போன்றவர்கள்தாம் என்பதே உண்மை. உள்ளார்ந்த நோய்த் தடுப்பாற்றல் இருப்பது ஒரு வேளை உண்மையென்றால், அதையும் தாண்டிப் பல்வேறு தொற்றுநோய்களை நம் நாட்டினர் இன்னமும் சந்தித்துக்கொண்டிருப்பது, நாட்டின் மோசமான பொது சுகாதார நிலைமையை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவே உள்ளது.
பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இல்லையே?
இந்த வைரஸ் முதியவர்களிடையே, அதிலும் தீர்க்கமுடியாத - நாட்பட்ட நோய்களைக் கொண்டுள்ளவர்களுக்குக் தீவிர நோய்நிலையையும், அவர்களில் சிலருக்கு மரணத்தையும் ஏற்படுத்துகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கோவிட்-19 இறப்பு விகிதம் 3.28 சதவீதம். அதாவது, 65 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் பாதிக்கபட்டால் சராசரியாக 3-லிருந்து 4 நபர்கள் மரணிப்பார்கள். இதுவே 80-90 வயதுக்கு உட்பட்டவர் என்றால் 15%, 90 வயதுக்கு மேலுள்ளவர் என்றால் 25% என அதிகரிக்கும்.
இந்தியா மிகவும் இளமையான நாடு. நம் மக்கள்தொகையில் 30 வயதுக்குக் குறைந்தவர்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் (70 கோடி பேர்). சுமார் 8 சதவீதம் (10 கோடி பேர்) மட்டுமே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். எனவே, நம்முடன் ஒப்பிடும்போது வெளிநாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், நாடுகளுக்கு உள்ளேயும் நாடுகளுக்கு இடையேயும் காணப்படும் அதிக விமானப் போக்குவரத்து, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வைரஸ் விரைந்து பரவுவதற்குக் காரணமானது. பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விமானப் போக்குவரத்து குறைவு.
மேலும், நோயின் தொடக்கக்கட்டத்திலேயே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில், வளர்ச்சியடையாத பல மாவட்டங்களுக்கு நோய்த்தொற்று இன்னமும் பரவவில்லை; சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பெருநகரங்களே இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு இதுவரை அதிக அளவில் பங்களித்துள்ளன (சென்னையிலேயேகூட மக்கள் அடர்த்தி மிகுந்த ராயபுரம் போன்ற மண்டலங்களிலேயே இதுவரை நோய் அதிகம் பரவியுள்ளது). இருந்தபோதும், மே மாதத்தின் நடுப்பகுதிவரை பரிசோதனை செய்யப்பட்ட மக்கள்தொகையில், வளர்ந்த நாடுகளின் மரணத்துக்கு இணையாக, சில மாநிலங்களின் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் உள்ளது (குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம்). எனவே, முதியவர்களைப் பாது காக்காமல்விட்டால் அதிகமான இறப்பு ஏற்படும். அதனால் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.
இந்தியாவில் பரவும் நாவல் கரோனா வைரஸின் வீரியம் குறைவாக உள்ளதால் தான், அதிக இறப்பு ஏற்படவில்லையா?
இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்தியாவுக்குள்ளேயே மகாராஷ்டிரம், குஜராத்தில் பரவும் வைரஸைவிட தமிழகத்தில் பரவும் வைரஸின் வீரியம் குறைவு என்று தவறான கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் வைரஸ்களின் மரபணுவில் மிகச் சிறிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. சார்ஸ்-கோவ்-2லும் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சிறிய மாற்றங்கள் வைரஸின் தொற்றும் திறனிலோ வீரியத்திலோ, எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தொற்றுப் பரவல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது பல்வேறு நாடுகளுக்கு இடையேயான நோயுற்றோரின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை போன்றவற்றை கண்மூடித்தனமாக ஒப்பிடுவது தவறு. இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால், மேற்கண்ட அம்சங்களைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்காற்று கின்றன. நோய்ப் பரவலின் நிலை, வாழும் முதியவர்களின் எண்ணிக்கை, உள்ளூர் சூழல், மக்களின் நோய்த் தடுப்பு அணுகுமுறை, அந்தந்த நாட்டின் அரசு எந்த அளவுக்குப் பொதுக் கட்டுப் பாடுகளை விதித்துள்ளது, நோய்க் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கிறது, மருத்துவ வசதிகள் எனப் பல காரணிகளைப் பொறுத்து நாட்டுக்கு நாடு இந்த எண்ணிக்கை மாறுபடும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக கோவிட்-19 தொற்றால் நோயுற்றோர், இறந்த வர்களை ஒவ்வொரு நாடும் எப்படிக் கணக் கெடுக் கிறது / வரையறுக்கிறது என்பதைப் பொறுத்தும் எண்ணிக்கை பெருமளவில் மாறுபடும்.
பி.சி.ஜி. தடுப்பூசி, கோவிட்-19க்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறதா?
கோவிட்-19லிருந்து பி.சி.ஜி. பாதுகாக்கும் என்பதற்கு சான்று எதுவும் இல்லை. இந்த கருத்து, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய ஆய்வில் பி.சி.ஜி. தடுப்பூசி போடப்பட்ட, போடப்படாத இரு பிரிவினரிலும் தொற்று ஏற்படும் சாத்தியம் சமமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கூற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
சித்தா/ஆயுர்வேதம்/ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா? ஹைட் ராக்சி குளோரோகுயின் மருந்து, கோவிட்-19ஐ தடுக்குமா அல்லது குணப் படுத்துமா?
ஒருவருடைய மருத்துவ நம்பிக்கையின் அடிப்படையில், தகுதிவாய்ந்த மருத்துவரின் மேற்பார்வையில் இந்த மருந்துகளை உட்கொள் வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இதுவரை கோவிட்-19ஐ தடுக்கவோ குணப்படுத்தவோ, நிரூபிக்கப்பட்ட மருந்து எதுவும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும், எடுத்துக்கொள்ளாவிடிலும் தன்னிச்சையாகவே குணமடைவார்கள்.
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தொற்றுநோயியல் துணைப் பேராசிரியர்
தொடர்புக்கு: thangavel@ehe.org.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago