நந்தன்
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்படு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் 1,500க்குக் குறைவில்லாமல் அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதில் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட தொற்றுகள் தலைநகரான சென்னையில் கண்டறியப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் பீதியில் இருக்கும் சூழலில் அரசு மருத்துவ மனைகளின் நிலை, அரசு மருத்துவர்கள் - மருத்துவப் பணியாளர்களின் நிலை குறித்து பெயர் வெளியிட விரும்பாத சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கூறியது:
மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்வுக்கு சென்று வந்தவர்களையும் அவர்களுடன் பழகியவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என்பது தெரிந்தால்கூட, அவர்கள் அனைவரும் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ஆனால் இப்போது நோய்த்தொற்று கண்டறியப் படுபவர்கள்கூட வீட்டில் இருந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கையைவிட நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் நோய் அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்களுக்கு அரசு அமைத்துள்ள கண்காணிப்பு மையங்களிலோ வீட்டிலோ தனித்திருக்க வைக்கப்படுகிறார்கள். வீட்டில் தனித்திருப்பவர்களை மாநகராட்சி ஊழியர்கள் அன்றாடம் சந்திக்கிறார்கள். அவர்கள் தனித்திருக்கிறார்களா, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை கேட்டறிகிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்குக் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பரிசோதனை, சிகிச்சை நெறிமுறைகள்
சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் (Co-morbidities) தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதே பலருக்குத் தெரிந்திருப்பதில்லை. மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் அனைவருக்கும் இந்த நோய்கள் தொடர்பான பரிசோதனைகள் மூன்று நாட்களுக்குள் எடுக்கப்படுகின்றன. கோவிட் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய மருந்துகள் வழங்கப்படுகின்றன. அறிகுறிகள் இருந்தால் அவற்றை மட்டுப்படுத்துவதற்கான மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அதற்குப் பிறகு மூன்று நாட்களில் பலரும் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டுவிடுகிறார்கள். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள், 60 வயதைக் கடந்த முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தை கள், கர்ப்பிணிகள் மட்டுமே முழுமையாக குணமாகும்வரை மருத்துவமனையில் தங்கவைக்கப்படுகின்றனர்.
கரோனா பரவல்
சென்னையில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் நிறைந்துவருகின்றன. அறிகுறி இல்லாதவர்களை தனிமைப்படுத்திப் பராமரிப்பதற்கான மையங்களிலும் படுக்கைகள் நிறைந்துவருகின்றன. கரோனா மிகத் தீவிரமாக பரவியிருக்கிறது. ஏனென்றால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பிறகு, மக்கள் சாவகாசமாக பொது இடங்களில் புழங்கத் தொடங்கிவிட்டார்கள். 50 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நேரத்தில் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள், 5,000 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நேரத்தில் வெளியே வரத் தொடங்கிவிட்டார்கள்.
தீவிர சிகிச்சை அதிகரிப்பு
இதைவிடத் தீவிரமான பிரச்சினை, கரோனாவுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 30 படுக்கைகளில் இரண்டு அல்லது மூன்று படுக்கைகளில் நோயாளிகள் இருந்த நிலை மாறி, இன்று 30 படுக்கைகளும் நிறைந்துவருகின்றன. படுக்கை பற்றாக்குறை குறித்த புகார்கள் அதிகரித்த பிறகு, அரசு மருத்துவமனைகளிலும் கோவிட்19 சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட்19 நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகரிப்பதற்குமான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
அதோடு மேலும் சில தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிட்19 சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை அளித்துவருகிறது. இவை தவிர 500 படுக்கைகள் கொண்ட புதிய கண்காணிப்பு மையத்தையும் உருவாக்கியுள்ளது தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அரசு மருத்துவமனைகளில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே கடினமாக இருக்கிறது. பரிசோதனை மையங்களில் தொற்று இருப்பதை உறுதி செய்துகொண்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவதில்லை என்ற செய்திகள் வருவதற்குக் காரணம் இதுதான். இறப்பு எண்ணிக்கையும் சீராக அதிகரித்துவருகிறது.
வீட்டுக்கு போகாத மருத்துவர்கள்
கோவிட் 19 சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருக்கும் பல அரசு மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒரு தலைமைச் செவிலியர் இறந்துவிட்டார். ஒரு நாளைக்கு 100 நோயாளிகளை கவனிக்க வேண்டிய நிலையில், இப்போது 500 பேரைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. முன்பு பத்து நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு சென்று வந்தோம். இப்போது வீட்டுக்குச் சென்று 50 நாட்கள் ஆகிவிட்டன. குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ காலில்தான் பேசிக்கொள்கிறோம்.
முன்பு ஐந்து நாட்களுக்கு ஒரு முறையாவது உறங்க முடிந்தது. இப்போது சரியாக உறங்கியே 50 நாட்களாகிவிட்டன. அவ்வப்போது கிடைக்கும் சிறிது நேரத்தில் கொஞ்சம் தூங்கிக்கொண்டால்தான் உண்டு. தொடர் இரவுப் பணி, தொடர் தீவிர சிகிச்சைப் பணி. புதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இவற்றின் மூலம் எங்களுடைய பணிச்சுமை கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்
பணி நேரம் வழக்கமாக இரவு பத்து மணிக்கு முடிய வேண்டும். சாப்பாடு உரிய நேரத்துக்கு வந்துவிடும். ஆனால், அனைத்து நோயாளிகளையும் பார்த்து முடித்து, இரவு உணவு சாப்பிடவே இரவு ஒரு மணி ஆகிவிடுகிறது. பல நேரம் உணவு கெட்டுப்போய்விடும். பழரசம் அருந்திவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள் பணியைத் தொடங்க வேண்டும். இந்தச் சூழல் எத்தனை நாட்களுக்குள் முடியும் என்று யாருக்குமே தெரியாது.
இதைத் தவிர மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடை (PPE) அணிவதன் மூலம், பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. மருத்துவரான என் சகோதரிக்கு மூக்கு முழுவதும் சிவந்துவிட்டது. இதை அணிந்துகொள்பவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து இப்படியே இருப்பதால் வேறு என்னென்ன உடல் பிரச்சினைகள் வரும் என்பது தெரியவில்லை.
பரிசோதனைப் பணியாளர்களின் பணிச்சுமை
முன்பு சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு அரசு மருத்துவமனைக்கு 5,000 நோயாளிகள் வருகிறார்கள் என்றால், 10-15 பேருக்குத்தான் வைரஸ் தொற்றுப் பரிசோதனை நடத்த வேண்டியிருக்கும். இப்போது ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகிறது. ஆனால் பரிசோதனை செய்வதற்கான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பரிசோதனை முடிவுகளைக் கண்டறிவதில் முக்கியப் பங்குவகிக்கும் நுண்ணுயிரியலாளர்கள் (Microbiologist) இரண்டு மாதமாக வீட்டுக்கே செல்லவில்லை. ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றால், பணியாளர்களை அதிகரிக்க வேண்டும். அதற்கும் இப்போது சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.
தனியார் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டிருக் கிறது, இவற்றின் மூலம் கொஞ்சம் சுமை குறைய வாய்ப்புள்ளது.
என்ன செய்யலாம்?
தொற்று ஏற்பட்டு இரண்டே நாட்களில் மரணமடைந்த பலரை நான் பார்த்துவிட்டேன். தயவுசெய்து வீட்டில் இருங்கள். தொற்றைப் பெற்று, அதை மற்றவர்களுக்கும் பரப்பாதீர்கள். இன்னும் ஒரு மாதத்துக்காவது தொடக்கத்தில் இருந்ததுபோன்ற கடுமையான ஊரடங்கைப் பிறப்பித்தால்தான், இந்த சிக்கலிலிருந்து நாம் மீள முடியும். இதனால் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படத்தான் செய்யும். ஆனால் இப்படிச் செய்யவில்லை என்றால், தீர்க்கவே முடியாத பிரச்சினைகள் வந்துவிடும்.
தொடர்புக்கு: nalamvaazha@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago