இ. ஹேமபிரபா
கரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாடாகப் பரவி, இன்றைக்கு நம் அன்றாட வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் நோய்த்தொற்று எப்போதுதான் குறையும் என்பதே எல்லோருடைய கேள்வியும். சீனாவை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளில் வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்து, சற்று குறையத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில் வைரஸ் தொற்றின் உச்சம் என்றால் என்ன? அதை எப்படிக் கணிக்கிறார்கள்?
இதைப் புரிந்துகொள்ள, அதாவது நம்முடைய உடனடி எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள, கடந்த காலத்தை ஆராய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், தொற்றுநோய் என்பது மனிதகுலத்துக்குப் புதி தில்லை; பண்டைய காலம் முதல் பல்வேறு தொற்றுநோய்கள் மனிதர் களையும் விலங்குகளையும் தாக்கி வந்துள்ளன. பெரியம்மை, காலரா, போலியோ, மலேரியா போன்ற நோய்த் தொற்றுகளுக்கு தடுப்பூச களைக் கண்டுபிடித்து, அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். எய்ட்ஸ், சார்ஸ் போன்ற தொற்றுகளுக்கு தடுப்பு மருந்து இல்லையென்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. எனவே, பல நோய்த்தொற்றுகளை காலத்துக்கேற்ப கையாண்டிருக்கிறோம்.
மணி வடிவ வளைவு
இங்கிலாந்து, வேல்ஸின் (Wales) பொதுப் பதிவு அலுவலகம், 1837ஆம் ஆண்டிலிருந்து இறப்பு எண்ணிக்கையை பதிவுசெய்யத் தொடங்கியது. இதற்கு உதவ வில்லியம் ஃபார் (William Farr) என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார். இறப்பு எண்ணிக்கை விவரங்களைத் தொகுத்து 1840-ம் ஆண்டு தன்னுடைய அறிக்கையை ஃபார் சமர்ப்பித்தார். அப்போது நோய்த்தொற்றுப் பரவல் குறித்து, அவர் கண்டறிந்த விஷயம் இன்றுவரை ஏற்புடையதாக இருக்கிறது. 1837-ம்ஆண்டு முதல் 1839-ம் ஆண்டு வரை இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பெரியம்மை (Smallpox) நோய் தாக்கி பலர் பலியானார்கள்.
அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்த ஃபார், அதில் ஓர் உருமாதிரி (Pattern) இருப்பதை உணர்ந்தார். தொற்றுப் பரவல் ஓர் ஆலய மணியின் வடிவத்தைப் போல் ஏறி, உச்சியைத் தொட்ட பிறகு அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவிடுகிறது என்பதை அவர் கண்டறிந்தார். 1838-ம் ஆண்டின் மத்தியில் பெரியம்மை இறப்பு விகிதம் உச்சத்தில் இருந்து, எப்படி ஏறியதோ அதேபோல் பின்பு கொஞ்சம் கொஞ்ச மாக இறங்கி 1839-ன் மத்தியில் நோய்த் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜி யமாகி இருந்தது.
கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து 1865-ம் ஆண்டு கால்நடைகளுக்கு கொள்ளைநோய் வந்தது. அப்போது இருந்த தீவிர நிலைமையின் காரணமாக, அனைத்துக் கால்நடைகளையும் இழந்துவிட நேரிடுமோ என்று உழவர்கள் பயந்துகொண்டிருந்தார்கள். கால்நடைகளுக்கு ஏற்பட்ட தொற்று எண்ணிக்கையை வைத்து ஃபார் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினார். 1865 அக்டோபர் தொடக்கத்தில் 11,300 கால்நடைகளுக்கு இருந்த தொற்று, நவம்பர் தொடக்கத்தில் 21,000 ஆனது. ஆக, ஒரு மாதத்துக்குள் தொற்று இரட்டிப்பாகியிருந்தது. அதற்கடுத்த மாதம் 40,000. ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பு என்ற கணக்கு வைத்தால் ஜனவரியில் 80,000 கால்நடைகளுக்குத் தொற்று இருந்திருக்க வேண்டும்.
ஆனால், 73,000 மட்டுமே இருந்தது. அடுத்தடுத்த மாதங்களிலும் தொற்று எண்ணிக்கை எதிர்பார்த்ததுபோல் ஏறாமல், இறங்கத் தொடங்கியது. இந்தக் கணக்கை வைத்து தொடக்கத்தில் முப்பது நாட்களுக்கு இரட்டிப்பாகிக்கொண்டிருந்த தொற்று எண்ணிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்றார் ஃபார். ஆலய மணியின் வளைவைப் போல் உச்சத்தை அடைந்ததும் மளமளவெனக் குறையும் என்றும், இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்றும் ஃபார் கணித்தார். அவருடைய கணிப்பு சொல்லிவைத்ததுபோல் நடந்தது. ஒரு நோய்த் தொற்றை முதன்முதலில் கணக்கீட்டுக் கணிப்புக் குள் கொண்டுவந்த பெருமை வில்லியம் ஃபாரையே சாரும். தற்போது பல ஆராய்ச்சியாளர்கள் ஃபார் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்து, அனைத்து சூழல்களுக்கும் பொருந்துமாறு சமன்பாடுகளை மெருகேற்றியுள்ளனர்.
எல்லா நோய்த் தொற்றும் ஒன்றுபோல் பரவுமா?
கரோனா வைரஸ் போல் எளிதில் தொற்றக்கூடியது இல்லையென்றாலும், எய்ட்ஸ் நோயும் ஒரு நோய்த் தொற்றுதான். அமெரிக்காவில் முதன்முதலில் எய்ட்ஸ் தொற்று 1981-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. அடுத்த 6 ஆண்டுகளில் எண்ணிக்கை 30,000-ஐத் தொட்டது. இதே வேகத்தில் ஏறி 1991-ல் 2,70,000 தொற்று ஏற்பட்டு, 1,79,000 பேர் பலியாகியிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. அந்த எண்ணிக் கையைப் பார்த்து, அமெரிக்க சுகாதாரத் துறை அலறியது. ஆனால், நடந்ததோ வேறு. ஃபார் சொன்னதுபோல் ஒரு வேகத்தில் ஏறி, 1988-க்குப் பின்னர் நோய் அதே வேகத்தில் சரியத் தொடங்கியது. 1990-ன் மத்தியில் கட்டுப்பாடான எண்ணிக்கையை வந்தடைந்தது. வேறு பல நோய்த்தொற்றுகளிலும் இதே உருமாதிரியை இன்றுவரை பார்க்க முடிகிறது.
எந்த அடிப்படையில் கணிக்கிறார்கள்?
அப்படியென்றால், கரோனா தொற்றும் இதேபோல் உச்சத்தை அடைந்து பின்பு இறங்கிவருகிறதா என்னும் கேள்வி தானாகவே எழும். கரோனா தொற்றின் உச்சத்தைக் கணிக்க இரண்டு எண்ணிக்கைகளைப் பயன்படுத்தலாம். முதலாவது, தொற்று எண்ணிக்கை. இரண்டாவது, இறப்பு எண்ணிக்கை. ஆய்வாளர்களின் கணக்கீடு களின்படி, கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நாளுக்கும், தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் நாளுக்கும் இடையில் 21 - 28 நாட்கள் இருக்கும். தொற்று விகிதம் அடிப்படையில் கணிப்பது சிறந்தது என்றாலும், அதற்கு எத்தனை பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாத சூழ்நிலையில், இறப்பு விகிதம் இந்தக் கணிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கணிப்புகளால் என்ன பயன்?
பொதுவாக ‘நோய்’ என்றால் அது மருத்துவர்களின் பிரச்சினை மட்டுமே என்பது போன்றதொரு கருத்து இருக்கிறது. ஆனால், நோய்த்தொற்றுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது கூட்டு முயற்சிதான். முக்கியமாக, மருத்துவக் கருவிகள், மருத்துவ முன்தயாரிப்பு எவ்வளவு தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து முன்னேற்பாடு செய்ய இதுபோன்ற கணிப்புகள் உதவுகின்றன. கரோனா போன்ற தொற்றுநோய்க்கு ‘சமூக இடைவெளி’தான் முதல் மருந்து. எனவே, எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு தேவை என்பதையும் இதுபோன்ற கணிப்புகளால் திட்டமிட முடியும். தொற்று குறையத் தொடங்குவது தெரியவரும்போது, எப்போது - எந்தளவுக்கு ஊராடங்கைத் தளர்த்தலாம் என்றும் அரசு அதிகாரிகளால் முடிவுசெய்ய முடியும்.
எந்த கணக்கீடும் இல்லாவிட்டால், எங்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திண்டாட வேண்டியதுதான். இந்தக் காரணங்களால்தான் உண்மையான எண்ணிக்கையை உடனுக்குடன் பதிவேற்றுங்கள், வெளிப்படையாக அறிவியுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. மற்றொருபுறம் தற்போதைய அவசரத் தேவை, பரிசோதனைக் கருவிகள். எத்தனை கருவிகள், எத்தனை நாட்களுக்குள் தேவை என்பதை அறிந்துகொள்ள இந்தக் கணிப்புகளைத்தான் அரசுகள் பயன்படுத்துகின்றன. ஏற்கெனவே கையிருப்பில் உள்ள மருந்துகளை, தேவை போக மற்ற நாடுகளுக்குக் கொடுக்கலாமா வேண்டாமா என்பதும் இதன் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படுகிறது.
வளைவைத் தட்டையாக்குதல்
கரோனா காலத்தில் நாம் அடிக்கடி கேள்விப்படும் இன்னொரு விஷயம், ‘வளைவைத் தட்டையாக்குதல்’ (flattening the curve). எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் தொற்றுப் பரவல் மணி வடிவில் ஏறி இறங்கும். ஆனால், இந்த மணி வடிவ வளைவு எத்தனை கூர்மையாக ஏறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருக்கிறதா என்பதைக் கணிக்க முடியும். எடுத்துக்காட்டுக்கு தொற்று வெகு வேகமாகப் பரவி, சரசரவென்று மலை முகட்டைப்போல் கூரியதாகிவிட்டால், மருத்துவமனைகள் போதாது. இத்தாலியில் நடந்தது இதுதான். மருத்துவமனைகளால் கையாள முடியாத அளவு நோயாளிகள் குவிந்துவிடுவார்கள். அதேநேரம், தொற்று மெதுவாகப் பரவியிருந்தால், அதிக இறப்பு ஏற்பட்டிருக்காது.
‘வளைவை தட்டையாக்குதல்’ என்பதன் பொருள், தொற்று எண்ணிக்கையை சுகாதாரத் துறையால் கையாள முடிந்த அளவுக்குள் வைத்திருப்பதே. ஊரடங்கு போன்ற நடைமுறைகளால் தொற்றுப் பரவலை ஒரு கட்டுக்குள் வைத்து, சின்ன மடுவைப்போல எண்ணிக்கை சிறிதுசிறிதாக ஏறினால், எளிதாகக் கையாள முடியும். இறப்பும் அதிகம் நிகழாது. எனவே மருத்துவர்கள், கணிப்பாளர்கள், அரசு முன்வைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி வளைவை விரைவில் தட்டையாக்க நம் பங்கையும் ஆக்கபூர்வமாகச் செலுத்துவோம்.
கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago