சஹஸ்
ஒரு நோயுற்ற விலங்கிலிருந்து மனித உடலுக்குள் அதன் சீழைச் செலுத்துவது கேலிக்குரியதாகவும் மதகுருமார்களால் கடவுளுக்கு எதிரான செயலாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், ஜென்னரின் தடுப்பூசிக்கு வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மக்களிடம் பயமும் தயக்கமும் நிலவியது.
தடுப்புமருந்து பயம்
19-ம் நூற்றாண்டில் ‘சென்னை இலௌகிக சங்கம்’ (Madras Secular Society) எனும் அமைப்பு செயல்பட்டது. நாத்திக, பகுத்தறிவுக் கருத்துக்களை அந்த அமைப்பு பரப்பிவந்தது. ஆனால், பெரியம்மைத் தடுப்பூசிக்கு எதிரான கருத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்:
“பலாத்காரமாய் வைத்தியம் செய்தல், அவ்வளவு சரியில்லை என்பதை இப்பகுதி மூலம் அறியலாம் . . . பசு முதலிய சில மிருகாதிகளுக்கும் வியாதியுண்டு. இதையுந்துணிதல் அசாத்தியம். இத்தகைய கெட்ட ரத்தமுள்ள தேகிகளிடமிருந்தெடுக்கும் பாலைப் பரிசுத்த குழந்தைகளிடம் புகட்டினால், இந்தக் கெட்ட ரத்தம், ஒர் துளி மோரானது பானை நிறைந்த பாலையெல்லாம் எப்படித் தன்மயமாக்கிவிடுகிறதோ, அப்படிக் குழந்தைகளுடைய பரிசுத்தமாகிய ரத்தத்தைப் பாழாக்கி யவைகளை வியாதிக்குள்ளாக்குமென்பதிற் சந்தேகமுண்டோ? ஆதலால் அரசாங்கத்தார் இதைப் பற்றி யாதொரு கிருஷையும் எடுத்துக்கொள்ளாமல் அவ்வவர் மனம் போல விட்டுவிடுவதே நலமென்று தோன்றுகிறது” (சென்னை இலௌகிக சங்கம், தொகுப்பு: வீ.அரசு, பக்.446-447, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்).
அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய கருத்தையும் அச்சத்தையும் இலௌகிக சங்கம் பிரதிபலித்துள்ளது. 20-ம் நூற்றாண்டிலும் மக்கள் தடுப்பூசிக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள். தடுப்பூசிக்கு எதிரான இத்தகைய மனநிலை இந்தியாவில் நோயெதிர்ப்பு ஆற்றலின்றி ஏராளமான மக்கள் பலியானதற்கு ஒரு காரணம் என்பதும் உண்மை.
முதன்முதலாக பவேரியாதான் (முன்பு தனி நாடாக இருந்த இந்தப் பகுதி, தற்போது ஜெர்மனியின் ஒரு மாநிலம்) தடுப்பூசியைக் கட்டாயமாக்கியது; தொடர்ந்து 1810-ல் டென்மார்க் கட்டாயமாக்கியது. ஐரோப்பாவில் ஜென்னரின் தடுப்புமருந்து பிரபலமடைந்தது. அமெரிக்க அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன், ஜென்னரின் கண்டுபிடிப்பை மனித குலத்துக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவை என்று புகழ்ந்து பேசினார்.
பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்புமருந்து மேம்படுத்தப்பட்டு, அம்மை முற்றும் ஒழிக்கப்பட்டது என உலக சுகாதார அமைப்பு 1980-ல் அறிவித்தது. 1980-க்குப் பிறகு, பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் பெரியம்மைக்கான தடுப்பூசி போடப்படுவதில்லை. திரையரங்குகளில் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரையிலும் பெரியம்மை நோயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசின் விளம்பர அறிவிப்பு ஒளிபரப்பப்படும்; யாரும் அந்தப் பரிசைப் பெற முடியவில்லை என்பதே உண்மை!
தவறான நம்பிக்கைகள்
தடுப்புமருந்து மூலம் பெரியம்மை உலகிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டது நிதர்சனம்; சொட்டு மருந்து மூலம், இந்தியா உட்பட உலகின் பெரும் பகுதிகளில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு வகையான வைரஸ் வகைகளின் மூலம் உருவாகும் நோய்களுக்கு எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் வகைகளின் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள விரைவில் தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயன்றுவருகிறார்கள். இவ்வளவு அறிவியல் நிரூபணங்கள் இருந்தும் தடுப்புமருந்துகளுக்கு எதிரான பல தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்ள ஒரு பரவலான அறிவியல் பிரச்சாரம் தேவை.
எதிர்காலச் சிக்கல்கள்
அப்படியென்றால் பெரியம்மை அபாயம் உண்மையிலேயே நீங்கிவிட்டதா? இப்போதைய பதில், ஆம் என்பதுதான். ஆனால் எதிர்காலத்தில் அது மீண்டும் தோன்றுமா என்பதற்கான பதிலை காலம்தான் தீர்மானிக்க முடியும். இதில் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பது உண்மை. அது என்ன?
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பெரியம்மைத் தொற்றால் இறந்தவர்கள் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். 1890-ம் ஆண்டில் இந்த வைரஸ் சைபீரியப் பகுதி மக்களை மிகப்பெரிய அளவில் தாக்கியது. இதில் ஒரு நகரத்தில் மட்டும் நாற்பது சதவீத மக்கள் மாண்டுபோனார்கள். அவர்களுடைய சடலங்கள் நிலத்தடி உறைபனிப் பகுதியின் மேல்புறத்தில் உள்ள கல்லறைகளில் புதைக்கப்பட்டன. இந்தப் பகுதி கொல்யாமா எனும் இடத்தின் நதிக்கரையில் அமைந்துள்ளது.
நூற்றி இருபது ஆண்டுகளுக்குப் பின் கொல்யாமாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதன் நதிக்கரைகள் உடைந்தன. 1990ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் பெரியம்மை நோய்த் தாக்குதலால் ஏற்பட்ட அம்மை வடுக்கள் காணப்பட்டன. ஆனால் அந்தச் சடலங்களில் பெரியம்மைக்குக் காரணமான வைரஸ் வகைகள் கிடைக்கவில்லை என்றபோதிலும், அவற்றில் அந்த வைரஸ் வகைகளின் டி.என்.ஏ. மூலக்கூறின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.
இதேபோல் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் பனிப்பகுதிக் கலைமான் ஒன்று இறந்துபோனது. பின்னர் உறைந்துபோன அதன் உடல் கிடைத்தது. அது இறந்ததற்கு ஆந்த்ராக்ஸ் வைரஸ் காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்மூலம் அந்தப் பகுதி நீரிலும் நிலத்திலும் வைரஸ் பரவியது. பிறகு அங்கே வளர்ந்துள்ள புற்களிலும் வைரஸ் பரவியது. இந்தப் புற்களை மேய்ந்த சுமார் 2,000 கலைமான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. ஒரு சில மனிதர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.
இதுபோல் ஏராளமான வைரஸ் வகைகள் நிலத்தடி உறைபனியில் உறைந்து கிடக்க வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். மேலும் ஆர்க்டிக் பகுதியில் அந்த பெர்மாஃப்ராஸ்ட் எனும் நிலப்பகுதியின் பனி, இப்போது பூமியின் வெப்பநிலை உயர்ந்து வரும் காரணத்தால் உருகிக்கொண்டிருக்கிறது. இது மேலும் உருகும்போது வெளிவரும் மீத்தேன் வாயுவும், இறந்துபோன உயிரினங்களின் புதைபடிவங்களிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவும் பூமியை மேலும் சூடாக்கும். ஒருபுறம் பெரியம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லிக் கிருமிகள், மற்றொருபுறம் உயர்ந்துவரும் பூமியின் வெப்பநிலை.
உண்மையில் இவை அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் பயங்கரமான அம்சங்கள்தான். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. உறைபனியில் உறைந்து கிடப்பதைப் போன்று கிடக்கும் நம் உலக சமூகம் என்றைக்கு விழித்துக்கொள்ளும்?
கட்டுரையாளர் தொடர்புக்கு: sahas.sasi@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago