மருத்துவம் தெளிவோம் 27: குடலே நலமா?

By செய்திப்பிரிவு

டாக்டர் கு. கணேசன்

ஒவ்வாமை காரணமாகத் தும்மல் வரும்; மூக்கொழுகும்; இளைப்பு வரும்; ஆஸ்துமா வரும்; சருமம் அரிக்கும்; உடலில் தடிப்புகள் தோன்றும். இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதே ஒவ்வாமை குடலையும் பாதிக்கும் என்னும் விஷயம் பலருக்கும் தெரியாது.

உணவுக்கும் குடலுக்கும் தொடர்பு இருப்பதுபோல், ஒவ்வாமைக்கும் குடலுக்கும் தொடர்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, துரித உணவுப் பழக்கம் உச்சத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஒவ்வாமை காரணமாகக் குடலில் பாதிப்பு ஏற்படுவதும் அதிகரித்துவருகிறது. முக்கியமாக, ‘சிலியாக் நோய்’ (Coeliac Disease).

எது சிலியாக் நோய்?

நாம் சாப்பிடும் உணவு நமக்கு ஒவ்வாமை ஆகும்போது ‘சிலியாக் நோய்’ ஏற்படுகிறது. ஒவ்வாமை ஆகும் உணவு வகைகளில் மிக முக்கியமானவை கோதுமை, பார்லி, ஓட்ஸ், புல்லரிசி (Rye). காரணம் இவற்றில் ‘குளூட்டன்’ (Gluten) என்னும் புரதம் இருக்கிறது. இதுதான் பலருக்கும் ஒத்துக் கொள்ளாமல் ‘சிலியாக் நோயை’ ஏற்படுத்துகிறது. இந்த நோய் உள்ளவர்கள் மிகச் சரியான உணவு முறையைப் பின்பற்றினால் மட்டுமே நோயிலிருந்து விடுபட முடியும். இல்லையென்றால், இது வாழ்நாள் முழுவதும் தொல்லை தரக்கூடியது.

இந்த நோய் எப்படி ஏற்படுகிறது?

குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அது உள்ள உணவைச் சாப்பிட்டதும், உணவுப் பாதையில் ஐஜிஏ (IgA) எதிரணுக்கள் அதிகரிக்கின்றன. இவை குளூட்டனை தம் எதிரியாக எண்ணி குடலை விட்டு விரட்டுகின்றன. இந்தப் போரில் குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் அழிக்கப்படுகின்றன. இப்படி, ஒவ்வொரு முறை குளூட்டன் உள்ள உணவை உண்ணும்போதும் இந்தப் போராட்டம் நிகழ்வதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்னும் நிலைமை உருவாகிறது.

உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சி ரத்தத்தில் சேர்ப்பதற்குக் குடல் உறிஞ்சிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்கிறபோது, உணவுச் சத்துகள் உறிஞ்சப்படாமல் மலத்தில் வெளியேறிவிடும். இதனால், செரிமானப் பிரச்சினைகளும் சத்துக் குறைவு நோய்களும் ஏற்படும். இந்த நோய் குழந்தை முதல் பெரியவர்வரை எல்லோருக்கும் வரலாம். பெரும்பாலும் ஒவ்வாமை பாதிப்பு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிற சாத்தியம் அதிகம்.

இதன் அறிகுறிகள் என்ன?

முதலில் உணவு செரிமானம் ஆவது தாமதமாகும். இதனால் வயிற்றில் வாயு சுற்றுவது போலிருக்கும். வயிறு உப்பும். பிறகு, உணவைச் சாப்பிட்டதும் வயிறு வலிக்கத் தொடங்கும். வாந்தி வரும். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். அல்லது இந்த இரண்டும் மாறிமாறித் தொல்லை தரும். மலம் வழுவழுப்பாகவும் மிகுந்த நாற்றத்துடனும் வெளி யேறும். குறிப்பாக, சாப்பிட்டதும் மலம் கழிக்கத் தோன்றும். குளூட்டன் இல்லாத உணவைச் சாப்பிடத் தொடங்கினால், இந்த அறிகுறிகள் எல்லாமே ஒரு வாரத்தில் மறைந்துவிடும்.

என்னென்ன பாதிப்புகள் வரலாம்?

இந்த நோயைக் கவனிக்கத் தவறுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைந்து ரத்தசோகை ஏற்படுவதால், எந்த நேரமும் களைப்பாக இருப்பார்கள். வாய்ப்புண் அடிக்கடி தொல்லை தரும். உடல் எடை குறையும். கை, கால்களில் மதமதப்பு, எரிச்சல், ஊசி குத்தும் வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். எலும்பு வலுவிழப்பு நோய் (Osteoporosis) வரலாம்.

குழந்தைகளுக்கு எலும்பு வலுவிழப்பு நோய் ஏற்பட்டால், உடல் வளர்ச்சி வயதுக்கு ஏற்றபடி இருக்காது. குழந்தையின் நடவடிக்கைகள் எல்லாமே மந்தமாக இருக்கும். பற்கள் வளர்வது தாமதப்படும். திருமணமான வளரிளம் வயதினருக்கு இது ஏற்படுமானால், குழந்தை பிறப்பது தாமதமாகும். அவ்வப்போது முதுகு, முழங்கால், முழங்கை, பிட்டத்தில் உள்ள சருமத்தில் கடுமையான அரிப்பும் எரிச்சலுடன் கூடிய கொப்புளங்களும் தோன்றும். தைராய்டு பிரச்சினை, முடக்குவாதமும் ஏற்படலாம்.

என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

நோய் அறிகுறிகளை மட்டும் பரிசீலித்து, சிலியாக் நோய் உள்ளவர்களைச் சரியாகக் கணிப்பது மிகவும் சிரமம். காரணம், கிரான் நோய் (Chron’s disease), குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome - IBS) போன்றவற்றின் அறிகுறிகளும் இவ்வாறே இருக்கும். இதனால், மருத்துவர்களுக்கே குழப்பத்தை உண்டாக்கும்.

ரத்தத்தில் ‘ஐஜிஏ எதிரணுக்கள் பரிசோதனை’ செய்து, இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால், இந்த நோய் உள்ளதை உறுதிசெய்யலாம். குடலில் எண்டோஸ்கோப்பி மூலம் ‘பயாப்சி’ எடுத்துப் பரிசோதனை செய்து இதை உறுதிப்படுத்தலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு மரபணுப் பரிசோதனைகளும் வந்துள்ளன. DQ2, DQ8 என்னும் மரபணுக்கள் ரத்தத்தில் காணப்படுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

இதற்கு என்ன சிகிச்சை?

சிலியாக் நோய்க்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. குளூட்டன் இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுவதுதான் இது வராமல் தடுக்கும் ஒரே வழி. அரிசி மாவு, உருளைக்கிழங்கு மாவு, கடலை மாவு, சோயா மாவு, சோள மாவு, மக்காச்சோள மாவு, கேழ்வரகு மாவு, ஆரோரூட் மாவு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இவர்களுக்குப் பாதுகாப்பான உணவு என்று பொதுவாகச் சொல்லலாம்.

இந்த நோயின்போது வைட்டமின்கள், தாதுக்களின் அளவுகளும் உடலில் குறைவதால், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை, இரும்புச் சத்து மாத்திரை, வைட்டமின்-டி மாத்திரை, கால்சியம், துத்தநாகம், ஃபோலிக் அமிலம், தாமிரம் கலந்த சத்து மாத்திரைகளை மருத்துவரிடம் ஆலோசித்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

குளூட்டன் உள்ள உணவு - தவிர்க்கப்பட வேண்டியவை:

# கோதுமை, பார்லி, ஓட்ஸில் தயாரிக்கப்பட்ட எல்லா உணவு வகைகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
# ரொட்டி, பூரி, சப்பாத்தி, நாண், பரோட்டா, நூடுல்ஸ், மால்ட் கலந்த பண்டங்கள், வினீகரில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரஞ்சு ஃபிரை, கஸ்டர்ட் பவுடரில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
# பேக்கரி பண்டங்கள், பதப்படுத்தப் பட்ட உணவுகள், பாக்கெட் உணவு வகைகள், செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், உணவுச் சேர்க்கைப் பொருட்கள்.
# தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், புகையில் வாட்டிய இறைச்சி, மேற்கத்திய கிரேவி, டிக்கா மசாலா.

குளூட்டன் இல்லாத உணவு - சேர்த்துக்கொள்ள வேண்டியவை:

# இட்லி தோசை, இடியாப்பம், ஆப்பம், பொங்கல், வடை, சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
# பால், மோர், தயிர், லஸ்ஸி, பன்னீர்.
# கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், முட்டை.
# வேகவைத்த வேர்க்கடலை, பாப்கார்ன், ஸ்வீட் கார்ன், வறுத்த கடலை.
# காபி, தேநீர், காய்கறி சூப், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள்.
# வெல்லம், தேன், ரசகுல்லா, அல்வா, லட்டு.
# ஆர்கானிக் உணவு, காய்கறி, பழங்கள்.

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்