ஓடு ராஜா ஓடு

By முகமது ஹுசைன்

முகமது ஹுசைன்

மனிதனின் நிறம் குறித்தான எள்ளல் அடக்குமுறையாகவும் இனவெறி யாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், உடல் வடிவம் குறித்தான எள்ளல் நம் சமூகத்தின் அவலக்கேடாக இன்றும் தொடர்கிறது.

இயல்பாகவே நான் சற்றுப் பருமனான தேகத்தைக்கொண்டவன். பள்ளி நாட்களில் எனது உயரமும் சற்றுக் குறைவு. குறைந்த உயரம், தடித்த தேகம், பிள்ளையார் தொந்தி என்றிருந்த எனது உருவ அமைப்பு அன்றைய காலகட்டத்தில் மிகுந்த எள்ளலுக்கு உள்ளானதில் பெரிய வியப்பு ஏதுமில்லை.

அடைமொழிகள்

ஆசிரியர்கள்கூட என்னுடைய பெயரைச் சொல்லி அழைப்பதைத் தவிர்த்து, குண்டன் என்று அழைப்பதில் திருப்தியடைந்தனர். ஆசிரியர்களே இப்படியென்றால், உடன்படித்த மாணவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்.

தடியன், தக்காளி, உருளை, உசிலை என்று தங்களுடைய விருப்பத்துக்கும் நெருக்கத்துக்கும் ஏற்ப அழைத்துச் சிரித்துக்கொண்டனர். சில வேளை வீட்டில்கூட அந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டது. அந்த எள்ளலைப் புரிந்துகொள்ளும் வயதோ பக்குவமோ இல்லாத காரணத்தால், நானும் சிரிப்போடு அந்த அடைமொழிகளை ஏற்றுக்கொண்டேன்.

அவமானம் அளித்த உத்வேகம்

பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில்தான், உடல் சார்ந்த எள்ளல்கள் என்னுள் கோபத்தையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்தின. மிகக் குறுகிய காலத்திலேயே என்னை நானே வெறுக்கும் மனநிலைக்கு அது என்னை இட்டுச் சென்றது.

உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று எண்ணினேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில், “தினமும் நீ ஜாக்கிங் செல்லலாமே” என்று என்னுடைய மாமா அறிவுரை கூறினார். எனக்கும் அது சரி எனப்பட்டது. “நடந்தாலே உனக்கு மூச்சு வாங்கும். நீ எங்கே ஓடப் போறே” என்று நண்பர்களால் மட்டம் தட்டப்பட்டேன்.

இருப்பினும், அவமானங்கள் கொடுத்த உத்வேகம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. மறுநாளே அரசுப் பள்ளி மைதானத்தில் ஓடத் தொடங்கினேன். 10 நாட்களில், அந்த மைதானம் சலிப்பூட்டவே, சாலைகளில் ஓடத் தொடங்கினேன். இரண்டு மாதங்களில் உடலில் நல்ல மாற்றம் தென்பட்டது.

உடலின் எடை குறைந்தது மட்டுமல்லாமல்; எனது உயரமும் அதிகரித்தது, விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும்போது நண்பர்கள் அனைவரும் அடைந்த வியப்பு எனக்குக் கூடுதல் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அதன் பின்னர் கல்லூரிக்குச் செல்லும்வரை ஜாக்கிங் எனது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றானது. நான் ஆசைப்பட்டது மாதிரி ஒல்லியான தேகமும் எனக்குக் கைகூடியது,

மீண்டும் கூடிய எடை

கல்லூரி சென்றவுடன் என்னுடைய ஓட்டம் நின்றுபோனது. முக்கியமாகக் கல்லூரியில் என்னுடைய நண்பர்கள் யாருக்கும் என்னுடைய இயற்கையான உடல்வாகு தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நான் ஒல்லியான உடல்வாகு கொண்டவன். கல்லூரி படிப்பு முடிந்து, வேலைக்குச் சென்று, திருமணம் ஆகும்வரை நான் ஜாக்கிங் செல்லவில்லை. உடல்வாகும் மாறவில்லை.

ஆனால், திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில் மீண்டும் எனது உடல்வாகு மாற தொடங்கியது. ஆறே மாதங்களில் என்னுடைய எடை சதமடித்தது. நடந்தால் மூச்சு வாங்கியது. உடைகள் பற்றாமல் போயின. பள்ளியிலிருந்த மாதிரி நான் ஏளனத்துக்கு உள்ளாகவில்லை என்றாலும், என்னை நானே வெறுக்கத் தொடங்கினேன்.

குறுக்குவழி ஆபத்து

திடீரென்று ஒருநாள் எடையைக் குறைப்பது என்று முடிவெடுத்தேன், அடுத்த நாளே ஓடத் தொடங்கினேன். ஆனால், என்னால் 200 மீட்டர் கூட ஓட முடியவில்லை. இனி முன்பு மாதிரி ஓட முடியாதோ என்ற சந்தேகம்கூட ஏற்பட்டது. வீட்டுக்கு அருகிலிருந்த ஜிம்மின் விளம்பரத்தைப் பார்த்து மயங்கி, அதில் சேரச் சென்றேன். மாதந்தோறும் கட்டணம் செலுத்துவதைவிட, ஓராண்டுக்கு எனக் கட்டணம் செலுத்தினால், பணம் மிச்சமாகும் என அங்கிருந்த மேலாளர் கூறினார். அந்த வார்த்தைகளில் மயங்கி, ஓராண்டு முழுவதுக்கும் கட்டணம் செலுத்தினேன்.

மறுநாளே ஜிம்முக்குச் செல்லத் தொடங்கினேன். ஆனால், மூன்றே நாட்களில் ஜிம் எனக்குச் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இரண்டு வாரங்கள், பல்லைக் கடித்துக்கொண்டு சென்றேன். அதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை. செலுத்திய கட்டணத்தைத் திரும்பித் தர முடியாது என்று பொறுப்புடன் அவர்கள் சொன்னார்கள். இப்படியாக, பெருத்த ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் என் ஜிம் வாழ்வு முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர், பத்திரிகைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, எடை குறைக்கும் மருந்து ஒன்றையும் முயன்று பார்த்தேன். அதில் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை. குறுக்கு வழியில் செல்வது உடல் நலனுக்கு நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற புரிதல் ஏற்பட்டது. ஜாக்கிங் செல்வது மட்டுமே ஒரே வழி என மீண்டும் முடிவுசெய்தேன்.

ஒட்டமும் உணவும்

என்னுடைய ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் குறைத்துக்கொண்டு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டுமே ஓடினேன். 200 மீட்டரில் ஓடத் தொடங்கிய நான், ஒரே மாதத்தில் ஐந்து கிமீ ஓடும் நிலைக்கு முன்னேறினேன். உடலின் எடையும் வெகுவாகக் குறையத் தொடங்கியது. ஆறு மாதங்களில், எவ்விதச் சிரமுமின்றி 10 கிமீ தூரம் ஓட முடிந்தது. 103 கிலோவாக இருந்த என்னுடைய எடை 78 கிலோவுக்குக் கீழ் வந்தது.

அதன் பின்னர், கூகுளின் உதவியுடன் என்னுடைய ஜாக்கிங்கையும் உணவையும் கவனமாகத் திட்டமிட்டுக்கொண்டேன். தினமும் ஓடிய நான், வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே ஓடினேன். காலையிலும் இரவிலும் ஓட்ஸ் கஞ்சி, மதியம் சாப்பாடு, மாலையில் சாலட் எனத் திட்டமிட்டு அதைச் சிரத்தையுடன் பின்பற்றினேன். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை மட்டும் மூன்று வேளையும் இஷ்டத்துக்குச் சாப்பிடும் ‘சீட் டயட்’ (cheat diet) எடுத்துக்கொண்டேன். வெயிலோ மழையோ குளிரோ எதுவாக இருந்தாலும், அதையெல்லாம் மீறி என்னுடைய ஜாக்கிங் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தது.

உதவிக்கு வந்த ஸ்மார்ட் வாட்ச்

சூழல் காரணமாக மீண்டும் ஜாக்கிங் எனக்கு அந்நியப்பட்டுப் போனது. இரண்டு ஆண்டுகளில் மீண்டும் உடல்வாகு மாறியது. எடை மீண்டும் சதமடித்தது. மீண்டும் உடலைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தபோது, தொழில்நுட்பம் துணைக்கு நின்றது. எனக்கு நானே உத்வேகம் அளிக்கும் முயற்சியாக, ஸ்மார்ட் போனைவிட விலை அதிகம்தான் என்றாலும், ஒரு நல்ல ஸ்மார்ட் வாட்சை வாங்கிக்கொண்டேன்.

கூகுள் வியர் (Google wear) செயலியின் மூலம் அந்த கைக்கடிகாரத்தை ஸ்மார்ட் போனுடன் இணைத்துக்கொண்டேன். இது போக, கூகுள் ஃபிட் என்ற செயலியையும் ஹுவாய் ஹெல்த் என்ற செயலியையும் பயன்படுத்தினேன். கூகுள் ஃபிட் செயலி, நாம் தினமும் எத்தனை எட்டு எடுத்துவைக்கிறோம் என்பதை மட்டுமல்லாமல், எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பதையும் சரியாகச் சொல்லும்.

ஹுவாய் ஹெல்த் செயலி

ஹுவாய் ஹெல்த் செயலி, இதற்கு ஒரு படி மேலே சென்று, ஜிபிஎஸ் மூலம், கூகுள் மேப்புடன் தன்னை இணைத்துக்கொள்ளும். நாம் ஜாக்கிங் செல்லும் தடத்தை, அது மேப்பில் வரைந்து காட்டுவதைப் பார்க்கும்போது, மிகுந்த உத்வேகம் அளிக்கும். மேலும், நாம் ஓடும் வேகம், எட்டுகளின் எண்ணிக்கை, ஒரு எட்டில் கடக்கும் தூரம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, தேவைப்படும் ஓய்வு நேரம் போன்றவற்றைத் தெரிவித்து உற்சாகமூட்டும்.

முக்கியமாக, தூக்கத்தின் தரம் பற்றி இது அளிக்கும் தரவு பயனுள்ளதாக இருக்கும். அலுவலுகலத்தில் நம்மை மறந்து, வேலையில் மூழ்கி, நீண்ட நேரம் அசைவற்று இருந்தால், இந்தச் செயலி வாட்ச்சில் அதிர்வை (vibration) ஏற்படுத்தும். குறுஞ்செய்தியையும் அனுப்பும். நாம் திட்டமிட்ட தூரத்தையோ, எட்டுகளின் எண்ணிக்கையையோ கடந்துவிட்டால், அதை உடனே தெரிவித்து நமக்கு உற்சாகமூட்டும்.

உணவுக்கு ஒரு செயலி

உணவைப் பொறுத்தவரை, அதைத் திட்டமிடுவதற்கும், சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் நிறையச் செயலிகள் ஆண்ட்ராய்டு சந்தையில் உள்ளன, Healthifyme என்ற செயலியை நான் பயன்படுத்தினேன். நம்முடைய வயது, உயரம், எடை, உடற்பயிற்சியின் அளவு, குறைக்க விரும்பும் எடை, அதை அடைய நினைக்கும் காலம் போன்றவற்றை அதில் பதிவிட்டால், நாம் தினமும் எத்தனை கலோரிகள் உட்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கும். அந்தக் கலோரிக்கு ஏற்ப நமது உணவு முறையை வடிவமைத்துக்கொள்ளலாம். அதைச் சரியாகப் பின்பற்றும்போது, ஒரு நண்பனைப் போல் இது நமக்கு உற்சாகமளிக்கும். பின்பற்றத் தவறும்போது, ஓர் உண்மையான நண்பனைப் போல் நம்மை இடித்துரைக்கும்.

மனமிருந்தால் போதும்

இந்தச் செயலிகள் அளித்த உற்சாகத்தாலும் உத்வேகத்தாலும், மீண்டும் ஜாக்கிங், நடைப்பயிற்சி, சரியான உணவு முறை போன்றவை எனது வாழ்வின் இயல்பாகின. 40 நாட்களில் என்னுடைய உடல்வாகும், எடையும் கட்டுக்குள் வந்தது.

ஜாக்கிங், சரியான உணவு முறை போன்றவற்றின் உண்மையான நோக்கம் உடல் எடை குறைப்பு அல்ல; ஒட்டுமொத்த உடல்நல மேன்மையே. இந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற உறுதி இருந்தால், நம்மை அங்கே அழைத்துச் செல்ல இன்றைய தொழில்நுட்பங்கள் வரிசையில் நிற்கின்றன.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்