மருத்துவம் தெளிவோம்! 23: சர்க்கரைக்கு மாற்றா செயற்கை இனிப்பூட்டிகள்?

By செய்திப்பிரிவு

டாக்டர் கு. கணேசன்

சர்க்கரை நோயாளிகள் வெல்லம், கருப்பட்டி, வெள்ளைச் சர்க்கரை போன்ற இனிப்புகளையும் இவற்றால் தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்களையும் சாப்பிடக் கூடாது என்று சொல்வது மரபு. இவர்கள் காபி/தேநீர் குடிக்கும்போது, ‘சர்க்கரை குறைவாக இருக்கிறது, ஒரு ‘சாக்கரின்’ மாத்திரையையோ இரண்டு ‘சுகர் ஃபிரீ’யையோ போட்டுக்கலாம்…’ என்று பேசிக்கொள்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘செயற்கை இனிப் பூட்டிகள்’ (Artificial Sweeteners) எனப்படும் இந்த இனிப்புப் பொருள்கள் என்னென்ன? இவற்றால் என்ன நன்மை, தீமை?

‘செயற்கை இனிப்பூட்டிகள்’

நாம் சாப்பிடும் உணவை இனிப்பாக்க உதவும் செயற்கை இனிப்புப் பொருள்களே 'செயற்கை இனிப்பூட்டிகள்'. இயற்கைப் பொருள்களிலிருந்து கிடைக்கும் சர்க்கரைக்கு மாற்று இவை; சர்க்கரையைவிட அதிக இனிப்புச் சுவை கொண்டவை. இவை கொடுக்கும் கலோரி ஆற்றல் வெள்ளைச் சர்க்கரையைவிடக் குறைவு என்பதால் இவை ரத்தச் சர்க்கரையை அவ்வளவாக அதிகரிப்பது இல்லை.

எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

‘சாக்கரின்’ (Saccharin) என்பது ஒரு பிரபலச் செயற்கை இனிப்பூட்டி. இது தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஃபால்பெர்க் (Fahlberg) என்பவர் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சர்க்கரையில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்துகொண்டிருந்தார். ‘கோல் தார்’ (Coal tar) மீதான ஆராய்ச்சி அது. 1878-ல் ஒருமுறை அவர் கை கழுவாமல் ரொட்டித் துண்டைச் சாப்பிட்டார்.

அது வழக்கத்தைவிட அதிக இனிப்பாக இருந்தது. வியப்புடன் தன் விரல்களைச் சப்பினார். விரல்களும் இனித்தன. வியப்பு கூடியது. சோதனைச்சாலைக்கு விரைந்தார். அன்றைக்கு அவர் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திய கண்ணாடிக் குடுவை, தட்டு, துணைக் கருவிகள் எல்லாவற்றிலும் ஓர் உப்பு ஒட்டியிருந்தது. அதை ருசித்தார். எல்லாமே அதிக இனிப்பு. அந்தப் படிகத்தைப் பரிசோதித்தார். அது ‘பென்சாயிக் சல்ஃபிமைடு’ (Benzoic sulfimide) என்னும் வேதிப்பொருளாக இருந்தது.

இது எப்படி உருவானது? முதல் நாளில் ஒரு அமிலத்தைக் கொதிக்கவைத்தவர் அதை நிறுத்த மறந்துவிட்டார். அது தொடர்ந்து கொதித்துச் சிதறி மேஜையிலிருந்த மற்ற இரு வேதிப்பொருள்களுடன் கலந்து புதிய பொருளாக உருமாறியிருந்தது. அதுதான் மேசையில் படிந்திருந்தது.

அதைத் தனியாகத் தயாரித்து ‘சாக்கரின்’ என்னும் பெயரில் விற்பனைக்கு அனுப்பினார். இரண்டு உலகப் போர்களின்போது சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதற்கு மாற்றாக ‘சாக்கரின்’ பயன்பட்டது; அதைத் தொடர்ந்து, மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

புழக்கத்தில் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள்

சாக்கரின், அஸ்பார்டேம் (Aspartame), சுக்ரலோஸ் (Sucralose), அஸிசல்ஃபேம் (Acesulfame), லேவுலோஸ் (Levulose), ஸ்டீவியோசைடு (Stevioside).

சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா?

செயற்கை இனிப்பூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட தொடக்க காலத்தில் இவை ‘சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது’ என்ற கருத்து இருந்தது. ஆகவே, இனிப்பாக எதையும் சாப்பிட முடியவில்லையே என்று கவலைப்படும் சர்க்கரை நோயாளிகள், செயற்கை இனிப்பூட்டிகளை உணவிலும் பானங்களிலும் சேர்த்துக்கொள்ளலாம் என்று அப்போது யோசனை கூறப்பட்டது. ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை இவை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை எச்சரிக்க ஆரம்பித்தன. இதனால், இந்தக் கருத்து இப்போது மாறியுள்ளது.

முக்கியமாக, செயற்கை இனிப்பூட்டிகள் காபி/தேநீர்/பால் போன்ற பானங்களில் மட்டுமல்லாமல்; உலகச் சந்தையில் விற்கப்படும் 6,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள், மென்/கோலா பானங்கள், மிட்டாய். சாக்லேட், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட அனைத்து குக்கீஸ், கேண்டீஸ், சுஃபாரி பாக்கு, பான்மசாலா, சூயிங்கம், மருந்துகள் போன்ற பலவற்றில் கலக்கப்படுகின்றன.

இந்த உணவுப் பொருள்களை இவர்கள் மிக அதிகமாகச் சாப்பிடத் தொடங்கிய காரணத்தால் சர்க்கரை நோயும் அதை வரவேற்கும் உடற்பருமன் பிரச்சினையும் இப்போது அதிகரித்துவிட்டன. அதனால் செயற்கை இனிப்பூட்டிகளைத் தனியாகப் பயன்படுத்தும்போதும் சரி, இவற்றால் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடும்போதும் சரி எச்சரிக்கை அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் யோசனை வழங்கியுள்ளது.

புற்றுநோய் ஆபத்து

உலக அளவில் முதன்முதலில் ‘சைக்ளோமேட்’ (Cyclamate) என்னும் செயற்கை இனிப்பூட்டியால் புற்றுநோய் வருவது கண்டறியப்பட்டதால், அதைத் தடை செய்துவிட்டனர். பிறகு, நீண்ட கால சாக்கரின் பயன்பாட்டில் புற்றுநோய் ஆபத்து உள்ளதை எலிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் உறுதிசெய்தன.

இந்த ஆபத்து மனிதருக்கும் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். என்றாலும், இது இன்னமும் தடை செய்யப்படவில்லை. இதேபோல் அஸ்பர்டேம் பயன்படுத்திய ஆண்களுக்கு ரத்தப் புற்றுநோயும் நிணநீர்ச் சுரப்பிகள் சார்ந்த புற்றுக்கட்டிகளும் ஏற்படுவதாகச் சில ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன.

பாதுகாப்பான இனிப்பூட்டி

இதுவரை பிரச்சினை இல்லாமல் இருப்பது 'ஸ்டீவியோசைடு’ இனிப்பூட்டிதான். காரணம், ‘Stevia rebaudiana' என்னும் தென்அமெரிக்கத் தாவர இலைகளைச் சுத்திகரித்து தயாரிக்கப்படுகிற ஓர் இயற்கை இனிப்பூட்டி இது; சர்க்கரையைவிட 150 மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. ஆனாலும், இதில் சர்க்கரைப் பொருள் எதுவுமில்லை. இது கலோரி ஆற்றலைத் தருவதில்லை; ரத்தச் சர்க்கரையைக் கூட்டுவதில்லை.

இதில் பக்கவிளைவுகள் இதுவரை தெரியவில்லை. ஆகையால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவரின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பானது. இது உள்ள இனிப்புப் பொருளைச் சாப்பிட்டு முடித்ததும் வாயும் நாக்கும் கொஞ்சமாகக் கசக்கும். இது ஒன்றுதான் இதன் குறைபாடு.

இயற்கை இனிப்புகள்

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக மருத்துவர்கள் பரிந்துரைசெய்வது கலப்படமில்லாத இயற்கைத் தேன்தான். காரணம், இதில் இனிப்பைத் தரும் மாவுச் சத்து மட்டுமல்லாமல் நியாசின், ரிபோஃபிளேவின், பைரிடாக்சின் ஆகிய வைட்டமின்கள், இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடென்டுகள், என்சைம்கள் என நம் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துகளும் உள்ளன.

அடுத்ததாக, வெள்ளைச் சர்க்கரையோடு ஒப்பிடும்போது தேன் அதிக இனிப்புச் சுவை உடையதுதான். ஆனாலும், இதன் கலோரி அளவு அதைவிடக் குறைவு. ஒரு மேசைக் கரண்டி (15 மி.லி.) தேன் 64 கலோரி ஆற்றலைத் தருகிறது; வெள்ளைச் சர்க்கரை 80 கலோரி தருகிறது.

வெள்ளைச் சர்க்கரையில் இனிப்பு தவிர வேறில்லை. 50% குளுக்கோஸ்; 50% ஃபிரக்டோஸ். தேனில் 50% குளுக்கோஸ்; 30% ஃபிரக்டோஸ். மற்றவை ஏற்கெனவே சொன்ன சத்துகள். இதன் காரணமாக, தேனுக்கு நம் ரத்தத்தில் ‘சர்க்கரையை உயர்த்தும் அளவு’ (Glycaemic index) வெள்ளைச் சர்க்கரையைவிடக் குறைவு.

சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு தேக்கரண்டி (5 மி.லி.) வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக அரைத் தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளலாம். அதேநேரம் சர்க்கரையையும் சேர்த்துக்கொண்டு தேனையும் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை எகிறிவிடும். எச்சரிக்கை!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்