என்றும் இளமை

By செய்திப்பிரிவு

- மருத்துவர் பி. திருவருட் செல்வா

யார் ஒருவர், வாழ்நாள் முழுவதும் இளமையாய் இருப்பதற்கான மருந்தை அல்லது அதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்கிறாரோ, அவர் உலகின் பணக்காரர் பட்டியலில் கண்டிப்பாக இடம்பிடிப்பார். முதுமையை மறைக்க நரை முடியை கறுப்பாக்குகின்றனர்; முகம் பொலிவாக இருக்க வகை வகையான கிரீம்களைத் தடவுகின்றனர், முகத்தில் தோல் சுருக்கத்தைப் போக்க சிகிச்சை எடுக்கின்றனர்.

இளமையாய் இருக்கப் பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் தற்காலிகமானவையே. சில மணி நேரமோ சில நாட்களோ மட்டுமே திரை போட்டு மூடி மறைக்க முடியும். அதிலும், சிலவகையான வழிமுறைகள் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

வெளித்தோற்ற மாற்றங்களை மறைக்க முயன்றால், அது தற்காலிகமாக மட்டுமே அமையும். அகத்தில் மாற்றினால் மட்டுமே அது நிலையான இளமையைக் கொடுக்கும். அந்த நிலையான இளமையின் ரகசியம், கவலையைக் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்கு எறிவதே. கவலையைக் களைந்தால் அது இளமையை நமது முகத்தில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.

கவலை இல்லாத மனிதன் உண்டா?

உலகில் அனைத்து மனிதருக்கும் கவலை உண்டு. கவலை இல்லாமல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே ஒரே நேர்கோட்டில் செல்லுமாயின் அதில் சுவாரசியம் இல்லை. ஏற்றத்தாழ்வு நிறைந்ததே வாழ்க்கை. ஒவ்வொன்றும், ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கும். மாற்றம் நிறைந்ததே இவ்வுலகம் என்பதே அதன் பொருள். சுகமும் துக்கமும் மகிழ்ச்சியும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சுழற்சி முறையில் இருந்துகொண்டேதான் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக் கைகளைச் செய்யப் பழக வேண்டும்.

மகிழ்ச்சியைச் சேமியுங்கள்

மகிழ்ச்சியை மட்டுமே சேமியுங்கள். அதை மட்டுமே மனத்தில் நினைவாகச் சேமிக்கத் தொடங்குங்கள். பின்னாளில், இளமை, நோய் நொடி இல்லா வாழ்வு எனும் பெரும் சொத்தை வாழ்க்கை எனும் வங்கி நமக்கு வட்டியும் முதலுமாக அளிக்கும். கவலைகளைச் சேமித்தீர்களானால், உடலும் நலிவுறும் உள்ளமும் நலிவுறும். கவலையைச் சேமித்து, பின்னாளில் நோயையும் முதுமையையும் விரைவில் அடைந்து, சுவாரஸ்யம் நிறைந்த உங்கள் வாழ்க்கையை விரயம் செய்யாதீர்கள்.

கவலையை ஆளக் கற்றுக்கொள்ளுங்கள்

நமக்கிருக்கும் கவலையை கட்டுக்குள் வைக்கத் தவறினால் கவலை நம்மைத் தின்று ஆட்கொண்டுவிடும். கவலை, நம்மை ஆள இடம் கொடுத்தீர்களானால், நம்மை பாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிடும். மீண்டும் உந்தி மேலே வருவது மிகக் கடினமாகிவிடும். மகிழ்ச்சி, கவலை, சுகம் துக்கம், சண்டை, சச்சரவு போன்றவை எல்லாம் வாழ்வின் அங்கம்தான். அய்யோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என எண்ணாதீர்கள்.

கவலை இளமையை மட்டுமா போக்குகிறது?

சதா சர்வ காலமும் கவலைகளை நினைத்துக் கொண்டிருந்தால், இளமை மட்டும் போகாது, இளமை நிலைத்திருக்க அடித்தளமாக விளங்கும் நம் உடல் இயக்கம், மனநிலை, வளர்சிதை மாற்றம் என அனைத்திலும் கவலை ஊடுருவி புற்று போலப் பெருகி, உடலில் நோயாகவும், மன நோயாகவும் வெளிப்படும்.

உணவை உட்கொள்ளும் கவலை

சிலர் தங்களது கவலையை, உணவில் காட்டி தங்கள் உடலுக்கே வஞ்சனை செய்வர். இது இப்படியே நீடித்தால் உணவை நாம் புறந்தள்ளிய நாட்கள் போய், உணவு நம்மைப் புறந்தள்ளத் தொடங்கும். இதனால், உள்ளுறுப்புகளின் செயல் திறன் குறையத் தொடங்கும். நாம் நல்ல உணவு உட்கொள்ள வேண்டும் என எண்ணும்போது, பல நாள் கவலையுடன், உணவை ஒதுக்கியதன் காரணமாக அது நோய் உண்டாகி நம்மால் நல்லுணவை உட்கொள்ள முடியாமல் போய்விடும். இதன் விளைவாக, கவலை உங்கள் உணவிலும் பங்கெடுத்து, உடல்நலத்தைக் குன்றச் செய்து, இளமையையும் பறித்துச் செல்லும்.

கவலையை மறக்கச் சில வழிகள்

* தியானம், யோகாசனம், உடற்பயிற்சி போன்றவை சிறந்த மாற்று.
* கவலையை உங்கள் மனத்துக்குள்ளேயே வைத்துப் பூட்டிக் கொள்ளாமல், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* மனநிறைவைக் கொடுக்கும் கூட்டங்களுக்குச் செல்லுங்கள்.
* நல்ல சொற்பொழிவைக் கேளுங்கள்.
* புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
* வழிபாடும் தீர்வாக அமையலாம்.

கவலைக்கான தீர்வை நற் சான்றோரிடம் கலந்தாலோசித்துத் தீர்வு காணுங்கள். இவற்றை மேற்கொண்டால் மூளையில் சுரக்கும் Endorphin அதிகரித்து கவலையை மறக்கும் எண்ணத்தை அதிகரிக்கும். இவற்றைத் தொடர, கவலை நம்மைத் தொடராமல், அதுவாகவே விட்டொழியும். கவலையை வெல்லுங்கள், எட்டித் தள்ளுங்கள். கால மாற்றங்களே அனைத்துக்கும் விடை கூறும் என்பதை அழுத்தமாக நம்புங்கள்.

எதையும் தாங்கிக்கொள்ளும் இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை வளருங்கள். தன்னம்பிக்கையும் இளமையும் நெருங்கிய நண்பர்கள் என்பதை மறவாதீர்கள். நீங்கள் இளமையோடு இருப்பதற்கும் நோய் நொடியின்றி உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதற்கும், கவலை எனும் வலையில் சிக்காமல் இருப்பது ஒன்று மட்டுமே வழி. இதுவே இளமையின் முதல் ரகசியமும்கூட.

கவலையால் நேரும் பாதிப்புகள்

* முடி உதிர்தல்
* முடி நரைத்தல்
* முகம் பொலிவிழப்பு
* கண் கருவளையம்
* சிறு வயதில் முதுமைத் தோற்றம்
* மன அழுத்தம்
* குடற்புண்
* ரத்த அழுத்தம்
* இதயம் தொடர்பான நோய்கள்
* தூக்கமின்மை
* செரிமானப் பிரச்சினைகள்
* நெஞ்செறிச்சல்
* உற்சாகமின்மை

கட்டுரையாளர், தொடர்புக்கு:
siddhathiru@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்