உலக ஹெபடைட்டிஸ் நாள் ஜூலை 28
உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக இருக்கும் நோய் என்ன தெரியுமா? கல்லீரல் கோளாறுகள்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாகக் கூறுகிறது, உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்.
கல்லீரல் கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றாலும், அந்த உறுப்பைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் பரவலாக இல்லை. இதயம், மூளை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகளைப் பாதுகாப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கல்லீரலுக்குக் கொடுப்பதில்லை.
ஹெபடைட்டிஸ் என்பது...
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்ய உதவுவது, உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலைச் சேமித்து வைப்பது, உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்ற உதவுவது எனக் கல்லீரல் செய்யும் பணி மகத்தானது. எந்த ஒரு உடல் உறுப்பிலும் ஒரு பாதிப்பு என்றால், உடனே அது வெளிப்பட்டுவிடும்.
ஆனால், கல்லீரல் அப்படிக் கிடை யாது. அது பாதிக்கப்படும் தன்மையைப் பொறுத்து அறிகுறிகள் உடனடியாகத் தெரியலாம்; நாட்பட்டுத் தெரிவதும் உண்டு. கல்லீரல் பாதிக்கப்படும் நிலையை ஹெபடைட்டிஸ் என அழைக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கும் கிருமிகளை ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் என்கிறார்கள். அவற்றில் ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும்.
பாதிப்புகள்
கல்லீரலில் வீக்கம் ஏற்பட முக்கியக் காரணம் ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள்தான். இதில் பி-யும், சி-யும்தான் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. இவை இரண்டும் உயிரிழப்புகளைக்கூட ஏற்படுத்திவிடும். கல்லீரலைப் பாதிக்கக்கூடிய எல்லா வைரஸ் தொற்றுகளிலும் மஞ்சள் காமாலை என்பது தொடக்க அறிகுறியாகவும் முக்கியமான ஒரு அறிகுறியாகவும் இருக்கும்.
குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் பாதிப்பு மிதமாக இருக்கும். பெரியவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வந்தால் பாதிப்பு கொஞ்சம் கடுமையாக இருக்கும்.
ஹெபடைட்டிஸ் பி வைரஸ் கிருமி மிகவும் கடுமையானது. இது கல்லீரலில் நிலையான தழும்பை ஏற்படுத்திக் கல்லீரல் புற்று நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் சுருக்க நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். ஹெபடைட்டிஸ் சி-யும் ஆபத்தானதுதான். இதுவும் நிலையான கல்லீரல் பாதிப்புக்குக் காரணமாக இருக்கிறது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் விரைவில் மரணம் வந்துவிடும்.
ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை முதல் மூன்று வாரங்களுக்கு மிகவும் மோசமாக இருக்கலாம். தொடர் சிகிச்சைக்குப் பின்னரும்கூட, நான்கு மாதங்கள்வரை பலவீனமாகவே இருப்பார்கள். அதன் பிறகே முழுமையாகக் குணமாகும். ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்று சில நேரங்களில் கல்லீரலைச் சிதைத்து, கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்வதற்கான கட்டாயத்தையும்கூட ஏற்படுத்திவிடலாம்.
எப்படிப் பரவுகிறது?
ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் எப்படிப் பரவுகின்றன? மாசடைந்த உணவு மற்றும் குடிநீர் மூலம் ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் மலத்தில் இருந்து ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் கிருமி, ஈக்கள் மூலம் அடுத்தவருக்குப் பரவிவிடும்.
ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் கிருமிகள் ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவுகின்றன. இதில் ரத்தம் மூலம் பரவுவதே மிக அதிகம்.
சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாகக் குடிப் பழக்கம் போன்றவையும் கல்லீரலைப் பாதிக்கின்றன. கல்லீரலில் கொழுப்பு சேருதல், ‘சிரோசிஸ்’ எனும் கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் புற்றுநோய் காரணமாகவும் கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு.
இவற்றில் ‘சிரோசிஸ்’ எனும் நோய்தான், கல்லீரல் நோய்களின் மோசமான நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவதுதான்.
தடுப்பது எப்படி?
பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கழிவறையை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பாதிப்பு உள்ளவர்களை நெருங்குபவர்கள் கை, கால்களைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
குடிநீரை நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
திறந்தவெளிக் கடைகளில் விற்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
ஹெபடைட்டிஸ் கிருமி தொற்று உள்ளவர்களுடன் பாலுறவு கொள்வது கூடாது.
மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்க்கைக்கும் அடிப்படை.
கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகியவற்றைத் தானமாக அளிக்கக் கூடாது.
கல்லீரலைப் பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
எந்த மருந்தையும் மருத்துவர் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago