அது என்ன கர்க்கடக கஞ்சி?

By செய்திப்பிரிவு

டாக்டர் எல். மகாதேவன்

தமிழ் மாதமான ஆனி- ஆடி மாதமானது (ஜூலை-ஆகஸ்ட்) மன - உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான, உற்சாகம் கூட்டுவதற்கான மாதம். பருவகால மாற்றம் காரணமாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மனிதர்களுக்கு நோய்த் தடுப்பு, உடல் புத்துணர்வு பெறுவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பருவ காலத்தில் உருவாகும் வளிமண்டல நீர், நமது ஜீரண அமைப்பைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் செரிமான ஆற்றல் குறைகிறது. இதன் விளைவாக உடலில் நச்சுகள் சேர்கின்றன.

ஆனி ஆடி மாதங்களில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள் அதிக பலன் கொடுப்பதாகக் கருதப்படுவதால், ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரையிலான கர்க்கடக (கடக) மாதம் மழைக்கு மட்டுமல்ல; ஆயுர்வேத சிகிச்சை களுக்கான மாதமாகவும் அறியப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைகள் உடலுக்குப் புத்துயிர் அளித்து, உடல் - மனதைப் பலப்படுத்துவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்தப் பருவத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்களை சீர்படுத்துவது மட்டுமல்லாமல், நவீன வாழ்க்கை முறை - தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் உருவாகும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

மருந்துக் கஞ்சி

பஞ்சகர்மா சிகிச்சையின்கீழ் இந்தப் பருவத்துக்குப் பரிந்துரைக்கப் பட்ட ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சைகள், ஆயுர்வேத உணவு முறை ஆகியவை உடல் அமைப்பைச் சுத்தப்படுத்த உதவுகின்றன. ‘ஔஷத கஞ்சி' என்று அழைக்கப்படும் ஆனி- ஆடி மாதக் கஞ்சி, இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது 20 சிறப்பு மூலிகைகள் சேர்ந்த ஒரு ஆற்றல் வாய்ந்த மருத்துவக் கஞ்சி. காய்ச்சலைத் தடுப்பதில் இது சிறந்த பலனை அளிக்கிறது. ஒன்பது பருப்பு வகைகள், தானியங்களின் கலவை இது. மழைக்காலத்தில் அதிகரிக்கும் வாதக் கோளாறுகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.

உடலை சுத்தப்படுத்து வது மட்டுமல்லாமல் நல்ல செரிமானத்துக்கும் இந்தக் கஞ்சி உதவுகிறது. சரியான முறையில் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். உடலிலிருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றும் முகவராகவும் இது செயல்படுகிறது. சாஷ்டிக அரிசி (நவரை அரிசி), தசபுஷ்பம், தசமூலம், சீரகம், பச்சைப்பயறு (பொடித்தது) போன்ற பொருட்களால் இந்தக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இதன் பலன்கள்:
# பலவீனமடைந்த செரிமானத்தை (அக்னி- செரிமான நெருப்பு) இயல்புநிலைக்கு மீட்டெடுக்கிறது
# உடல் உள் கட்டமைப்பைத் தூய்மைப்படுத்துகிறது.
# திரிதோஷத்தின் (வாத, பித்த, கபம்) ஏற்றத்தாழ்வைச் சமப்படுத்தி உடலைக் குணப்படுத்துகிறது
# குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலத்தைச் சீராக்குகிறது
# உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, கூடுதல் கொழுப்பை எரிக்கிறது
# ஒருவர் தொடர்ந்து 7 நாட்கள் அல்லது 2 வாரம் அல்லது 3 வாரம் எனத் தேவைக்கு ஏற்ப ‘மருத்துவக் கஞ்சி’யை அருந்தலாம்.

நோய்களுக்குக் கூடுதலாக

# நீரிழிவு நோய்க்கு மேற்கண்ட கஞ்சியுடன் வெந்தயம், பச்சைப் பயறு சேர்க்கலாம்.
# ரத்த அழுத்தத்துக்குக் கஞ்சியுடன் முருங்கை இலை சேர்க்கலாம்.
# இளைப்பு நோய், சுவாசப் பிரச்சினைக்குக் கஞ்சியுடன் தூதுவளை, சீரகம், குறுந்தொட்டி, சுக்கு போன்றவற்றைச் சேர்க்கலாம்.
# கொழுப்பு உடையவர்களுக்குக் கஞ்சியுடன் மூக்கிரட்டை, கறிவேப்பிலை, கொள்ளு, வெந்தயம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.
# அசதியடைந்தவர்கள் உற்சாகம் பெறக் கஞ்சியுடன் தேங்காய்ப்பால், வெல்லம் சேர்க்கலாம்.
கர்க்கடக கஞ்சியை வீட்டிலேயே தயாரிக்க முடியும். நோயாளிகளின் வசதிக்காக, முன்னணி ஆயுர்வேத மையங்கள் - கடைகளில் கர்க்கடக கஞ்சி மாவு கிடைக்கிறது. ஒரு கர்க்கடக கஞ்சி மாவுப் பை சாதாரண மாக ஒரு வாரத்துக்கு நீடிக்கும்.

கஞ்சி செய்முறை

ஒரு நபரின் உடல்நிலையைப் பொறுத்து ஆயுர்வேதப் பொருட்களான முருங்கை இலை, பச்சைப் பயறு, மூக்கிரட்டை போன்ற வற்றைக் கஞ்சி தயாரிக்கும் பொருட்களுடன் சேர்த்துத் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
நவரை அரிசி - 100 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
சுக்குப் பொடி - 5 கிராம்
மிளகுப் பொடி - 5 கிராம்
சீரகம் - 5 கிராம்
மஞ்சள் பொடி - 5 கிராம்
பூண்டு - 5 கிராம்
ஓமம் - 5 கிராம்
தேங்காய்ப்பால் - ¼ கப்

செய்முறை

# அரிசியைக் கழுவி 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
# கொதிக்கும்போது வெந்தயத்தைச் சேர்க்க வேண்டும்.
# நன்றாக வெந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி, மீண்டும் கொதிக்கத் தொடங்கும்வரை காத்திருந்து, பின்பு உடனடியாகத் தீயை அணைக்க வேண்டும்.
# பின்பு மீதமுள்ள பொருட் களைச் சேர்த்து, நன்கு கலக்க வேண்டும். சிறிது நேரம் மூடி வைத்த பிறகு சூடாகப் பரிமாறலாம்.

பொருட்களின் குணங்கள்

நவரை அரிசி (அறுபதாம் குறுவை)

அறுபதாம் குறுவை என்றும் பெயருண்டு. நவரை அரிசியின் புற்றுநோய்க்கு எதிரான தன்மை குறித்து ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. நவரை அரிசி குறித்து கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மூலக்கூறு ஆய்வு, நவரையில் Bowman Birk inhibitor (BBI) புரதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. பொதுவாகச் சிவந்த நிறமுடைய நவரைஅரிசி முக்குற்றங்களுக்கு நல்லது. பசியைத் தூண்டுவது, ஆண்மையை அதிகரிக்கக்கூடியது.

மூக்கிரட்டை (Boerhaavia diffusa)

நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்டது. டையூரிடிக் (Diuretic), அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டது. வெப்ப குணம் உடையது, கபத்தைக் குறைப்பது, விஷத்தை முறிப்பது. இதய நோய், ரத்த நோய், வீக்கம் போன்றவற்றைக் குறைக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

பிரண்டை (Cissus quadrangularis)

எலும்பு வலிமைக்கு அவசியமான கால்சியமும், பாஸ்பரஸும் இதன் தண்டு சாற்றில் அதிகம் உள்ளது. பாரம்பரிய முறைகளில் பிரண்டையின் வேர், தண்டுகள் எலும்பு முறிவைக் குணப் படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத நடைமுறையில் கீல் வாதம், முடக்கு வாதம், எலும்பு வலுவிழப்பு (Osteoporosis) சிகிச்சைக்கு இத்தாவரம் மிகச் சிறந்தது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சீரகம் (Cuminum cyminum)

சீரகத்தின் விதைகள் கார்மினேடிவ் (Carminative) எனப்படும் வாயு அகற்றித்தன்மை கொண்டவை. மணம் உடையது, வயிற்றுவலிக்குச் சிறந்தது. சீரக விதைகள் பழங்காலத்திலிருந்தே வீக்கத்தைக் குறைக்கவும், அதிக சிறுநீர் வெளியேற்றத்துக்கும், வாயுவைத் தடுக்கவும், தசைப்பிடிப்பை அடக்கவும் பயன்படுகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு சிகிச்சைக் குக் கொடுக்கப்படுகின்றன. பெண்களுக்கான நோய்கள், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றிலும் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜீரணத்தை தூண்டுவது, வயிற்றில் இருக்கும் கட்டிகளை மாற்றுவது, வாயுவைக் கீழ்முகமாக இயக்குவது, வயிற்றுப்போக்கு, சளியுடன் கூடிய வயிற்றுப் போக்கு, பூச்சி தொந்தரவு ஆகியவற்றுக்குச் சிறந்தது,

ஏலம் (Elettaria cardamomum)

ஏலக்காயின் கச்சா சாறு குறிப்பிடத்தக்க வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் ஆன்சியோலிடிக், தசை தளர்த்தும் விளைவு மன அழுத்தம் தொடர்பான இரைப்பைத் தொல்லைகளைக் குறைப்பதற்குக் கூடுதல் பலனைக் கொடுக்கும். இதய, செரிமான, சிறுநீரகத்துடன் தொடர்புடைய, நுரையீரல் தொடர்புடைய கோளாறுகள், மன அழுத்தத்துடன் தொடர்புடைய மற்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. கபத்தைக் குறைப்பது, இதய நோய்களுக்குச் சிறந்தது, மலத்தைச் சுத்தி செய்வது போன்றவற்றிலும் இது நல்ல பலனைத் தருகிறது.

குறுந்தொட்டி (Sida cordifolia)

குறுந்தொட்டி வேரில் உள்ள மெத்தனால், எத்தில் அசிடேட் சாறு பற்றி நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில் அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி போன்ற பண்புகளை அது கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. குறுந்தொட்டியின் வேர்கள் டையூரிடிக், டானின் பண்புகளைக் கொண்டுள்ளன. வாத பித்தங்களைத் தணிப்பது, இனிப்பு சுவை உடையது, உடலுக்குப் பலத்தை அளிப்பது, ஆண்களுக்கு விந்து பலத்தை அளிப்பது, வாத சம்பந்தமான நரம்பு நோய்களுக்குச் சிறந்தது.

கிராம்பு (Syzygium aromaticum)

கிராம்பு ஆற்றல் வாய்ந்த கிருமிநாசினிப் பண்புகளைக் கொண்டது. பல் வலி, வாய்வழிப் புண்களைப் போக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டது. நொதி ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி, உடலின் செரிமானத் தன்மையை அதிகரிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு, ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தவும் இது உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை கிடைக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஓமம் (Trachispermum ammi)

ஓமம் ஒரு கிருமிநாசினி. இது அஜீரணம், வாயு நிவாரணத்துக்கு நல்லது. தொற்று, வயிற்றுப் புழு, மாதவிடாய், பிறப்புக்குப் பிந்தைய கோளாறுகள், வெள்ளைப் போக்கு, சிறுநீரகக் கற்கள் போன்றவற்றுக்குச் சிகிச்சையளிக்கப் பயனுள்ளது. மூலத்துக்குச் சிறந்தது, வயிற்று வலி, வயிற்று உப்புசம், கிருமி, வாந்தி போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவது, பசியைத் தூண்டுவது.

வெந்தயம் (Trigonella foenum graecum)

வெந்தயத்தின் இலைகள், விதைகள் ஆகியவை பல பாரம்பரிய முறைகளில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. ரத்த நோய்களுக்குச் சிறந்தது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.


- கட்டுரையாளர், ஆயுர்வேத மருத்துவர் தொடர்புக்கு: mahadevan101@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

56 mins ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்