டாக்டர் எம்.ஏ. அலீம்
உலக மூளை தினம் (World brain Day - 2019/ Migraine the painful truth) இந்த ஆண்டில் ஒற்றைத் தலைவலியை மையமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் ஒன்று, ஒற்றைத் தலைவலி (Migraine). உலக அளவில் 14.7 சதவீதத்தினர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதாவது, 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது. உலக மக்கள்தொகையில் மிகவும் மோசமான ஒற்றைத் தலைவலியால் 2 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். இந்தியாவில் இந்த நோயால் 15 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத் தலைவலி (Ophthalmoplegic Migraine), முக நரம்பு ஒற்றைத் தலைவலி (Facioplegic Migraine) என ஒற்றைத் தலைவலியில் பல வகை உண்டு.
பெண்களுக்கே பாதிப்பு அதிகம்
இந்நோய் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம் வருகிறது. குறிப்பாக 35 முதல் 45 வயது உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலகட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரத்திலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான சாத்தியம் அதிகம்.
அறிகுறிகள்
ஒற்றைத் தலைவலி 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும். வலி வருவதைச் சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரெனச் சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும். சிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாகக் கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகிச் சரியாகும். வாந்தி அல்லது குமட்டல் உணர்வு இருக்கும்.
ஏன் வருகிறது?
அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும்.
உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள் வோருக்கும் இந்தப் பிரச்சினை உண்டாவதற்கு சாத்தியம் உண்டு.
ரத்தக் குழாய்கள் விரிவடைவதாலும் வீங்குவதாலும் வலி உண்டாகும். அந்த நேரத்தில், நைட்ரிக் ஆக்ஸ்சைடு அமிலம் அதிகமாகச் சுரக்கும். அது, ரத்தக் குழாய்களைத் தூண்டும். 5-ஹைட்ராக்சிடிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரலாம்.
பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத் தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும் தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்சினைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத் தலைவலி ஏற்படும் சாத்தியம் அதிகம். சமீப காலங்களில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்களாலும், ஒற்றைத் தலைவலி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தவிர, உடுத்தும் உடைகளில் ஒட்டியிருக்கும் டிடர்ஜென்ட் பவுடர், வாசனைத் திரவியங்கள் வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் வருவதற்கு சாத்தியம் அதிகம். சிலருக்கு சாக்லெட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதாலும் வலி வரும்.
தீர்வு உண்டு
தலைவலி அடிக்கடி வந்தால், சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய மருத்துவரை அணுக வேண்டும். தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தீங்கு விளைவிக்கக்கூடிய வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வதும் உண்டு. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத பிரச்சினை அல்ல. அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம்.
கட்டுரையாளர்,
மூளை நரம்பியல் நிபுணர்
தொடர்புக்கு : drmaaleem@hotmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago