முதுமையும் சுகமே 14: முடக்கும் மூட்டுவலியை வெல்ல முடியுமா?

By செய்திப்பிரிவு

டாக்டர் சி. அசோக் 

“இந்த குடும்பத்துக்காக ஓடாய் உழைத்து நான் என்ன சுகத்தைக் கண்டேன்? மூட்டு வலி வந்ததுதான் மிச்சம்”, இப்படிச் சொல்லாத பாட்டிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
மாட்டு வண்டியின் கட...கட.. சத்தம் போல மூட்டுகள் தரும் சத்தத்திலும் வலியிலும் உண்டாகும் வேதனையின் வெளிப்பாடே இது போன்ற புலம்பல்கள். முதுமையில் வரும் மூட்டுவலிக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடோ ஆண் பெண் என்ற பாகுபாடோ கிடையாது. இருந்தாலும், பெண்களை அதிகம் அவதிக்கு உள்ளாக்கும் பிரச்சினை இது.

உலக மக்கள்தொகையில் அறுபது வயதைக் கடந்தவர்களில் 15-ல் இருந்து 20 சதவீதம் பேர் மூட்டுவலியில் அவதிப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வயதானால் மூட்டு வலி வரும் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. இருந்தாலும், முதுமையில் பெரும்பாலானவர்களுக்கு ஏன் மூட்டுவலி வருகிறது என்று காரணங்களைப் புரிந்துகொண்டால் தற்காத்துக்கொள்ள உதவியாக அமையும்.
மூட்டு வலி என்றாலே பொதுவாக நாம் நினைப்பது கால் மூட்டுகளில் வரும் வலியை மட்டும்தான். உண்மையில் உடலில் உள்ள எந்த மூட்டு வேண்டுமானாலும் பாதிக்கப்படும். குறிப்பாக இடுப்பு, தண்டுவடம், கை, பாதம், தோள் மூட்டுகள்.

மூட்டு வலி - காரணங்கள்

# மரபு சார்ந்தது: பொதுவாகப் பெண்களுக்கு தலைமுறை தலைமுறையாக வருவதால், மரபும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
# முதுமை: பல ஆண்டுகளாகச் செய்யும் ஒரே மாதிரியான வேலை காரணமாக மூட்டு சவ்வுகளில் ஏற்படும் தேய்மானம்.
# உடல்பருமன்: உடல்பருமனால் அதிக உடல் எடையைத் தாங்கும் முழங்கால், இடுப்பு போன்ற மூட்டுகளில் இத்தொல்லை ஏற்படும்.
# அதிக வேலைச்சுமை: பெரும்பாலும் இந்தப் பிரச்சினை பாட்டாளிகளுக்கும், விளையாட்டு வீரர்கள், அதிக நேரம் நின்று -குனிந்து வேலை செய்பவர்களைப் பாதிக்கும் (கணினிக் காதலர்கள், முகநூல், வாட்ஸ்அப் வட்டாரங்களையும் சேர்த்துத்தான்).
# விபத்துக்களைத் தொடர்ந்து வரும் மூட்டு பாதிப்புகள்.
# நரம்புகள், நாளமில்லாச் சுரப்புகளில் ஏற்படும் கோளாறுகள்.
# உடற்பயிற்சி என்ன விலை எனக் கேட்கும் சோம்பலான வாழ்க்கை முறை.

வலி அறிகுறிகள்

பொதுவாக முழங்கால், இடுப்பு, முதுகுத்தண்டு, கழுத்து மூட்டுகளிலேயே மூட்டு வலி பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் வலி மிதமாகவும் பிறகு விட்டுவிட்டும் தோன்றும், படிக்கட்டு ஏறும்போது, தொடர்ந்து தரையில் உட்கார்ந்திருந்து எழுந்திரிக்கும்போதும் மூட்டு வலி வீரியத்துடன் இருக்கும்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் மூட்டுக்கள் சற்றே இறுக்கமாக உபத்திரவத்தைத் தந்துகொண்டே இருக்கும். முழங்காலை மடக்கி நீட்டும் போதெல்லாம் ‘மடக், கடக்’ என்று சத்தம் வந்து வெறுப்பேற்றும். முழங்கால், இடுப்பு மூட்டுகளில் வலி அதிகம் இருந்தால் தவறான கோணத்தில் நடக்க ஆரம்பித்து நாளைடைவில் சப்பாணி போல நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இடுப்பு, முழங்கால்களில் வலி மிகுதியாக இருந்தால் நடையில் தடுமாற்றம் ஏற்பட்டு தள்ளாடி விழவும் நேரிடலாம். நாட்பட்டு வலி இருந்துகொண்டே இருந்தால் மனச்சோர்வு ஏற்படுவதுடன், இரவுத் தூக்கத்தையும் பாதித்து ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது?’ என்ற நிலையை தோற்றுவிக்கும்.

கூடுதல் கவனம் தேவை

விட்டுவிட்டு வரும் வலி: மூட்டுக்களில் மெதுவாக ஆரம்பிக்கும் வலி, இடையிடையே மழை நின்று பெய்வதைப் போல் வலி ஏற்பட்டு பிறகு வேலை செய்தால் வலி அதிகமாகவும், ஒய்வு எடுத்தால் வலி இல்லாமலும் இருப்பவர்கள்.
கை விரல் மூட்டுகள், இடுப்பு, கால் மூட்டுகளில், கழுத்து, தண்டுவடப் பகுதிகளில் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுபவர்கள்.

இடுப்பு மூட்டு பாதிப்படைந்திருந்தால்: கால்களின் முன்புற அரையாப்பு பகுதியில் அதிகமான வலியும், அந்த வலியானது பிட்டம், தொடை பகுதிகளில் பரவும்.
முழங்கால் மூட்டு தேய்ந்து இருந்தால்: முன்புற முழங்காலில் கடுமையான அல்லது மிதமான வலி ஏற்பட்டு அது இடுப்பு பகுதிவரை பரவும்.

மூட்டு தேய்மானம் கண்டறிய பரிசோதனைகள்

* எக்ஸ்-ரே , எம்.ஆர்.ஐ. ஸ்கேன்
* மூட்டுக்குள் ஊசி செலுத்தி அங்கிருக்கும் திரவத்தை சிறிது எடுத்து பரிசோதனை செய்தல்
* ரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்வதன் மூலம் வேறு ஏதேனும் காரணத்தால் மூட்டுவலி வந்துள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்

 

மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப நிலை

* காலை எழுந்ததும் பதினைந்து நிமிடம் எந்தெந்த மூட்டுகள் இழுத்துப் பிடித்துக்கொண்டு சண்டித்தனம் செய்கிறதோ, அந்த மூட்டுகளில் தேய்மானம் ஆரம்பிக்கறது எனப் புரிந்துக்கொள்ளலாம்.
* குனிந்து கால் ஷூ போட முடிய வில்லை; வீடு கூட்ட முடியவில்லை; உட்கார்ந்து இருந்தால் உடனே எழ முடியவில்லை அல்லது நீண்டதூரம் நடக்க முடியவில்லை இப்படி யான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்திவிட்டு பின்னாளில் மூட்டு வலியால் முடங்காதீர்கள், முனகாதீர்கள்.

கட்டுரையாளர்,
குடும்ப நல - முதியோர் 
மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

50 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்