தேர்வு முடிவு, வாழ்க்கையின் முடிவல்ல: தோல்வியிலிருந்து மீளத் தோள் கொடுப்போம்!

By எஸ்.சுமன்

பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணம் இது. வெற்றியாளர்கள், முதன்மையாளர்கள் என்ற பெருமிதங்கள் இடம்பிடிக்கும் அதே செய்தித்தாளில், வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தற்காக அரும்பும் முன்னரே வாழ்க்கையை முடித்துக்கொண்ட சில மாணவர்களையும் பார்க்க நேரும் அவலம் வருடாவருடம் தொடரவே செய்கிறது.

தேர்வில் தோல்வி என்பதற்காக முந்தைய தலைமுறை மாணவர்கள் எடுக்கத் துணிந்த தவறான முடிவை, தற்போது சென்டம் நழுவிவிட்டது, டாப்பர் லிஸ்டில் இல்லை, கட் ஆஃப் போதாது என்பது போன்ற காரணங்களுக்காகப் பலரும் எடுக்கத் துணிவது இன்னும் வேதனை. நமது குழந்தைகள் எந்தப் புள்ளியில் இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்? இந்த நேரத்தில் அவர்களை அரவணைக்கப் பெற்றோரும் குடும்பத்தினரும் என்ன செய்ய வேண்டும்? இந்த நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் எப்படி இதை எதிர்கொள்ள வேண்டும்?

இது குறித்துப் புதுக்கோட்டை சி.பி.எஸ்.இ. பள்ளியொன்றின் பெற்றோர்-மாணவர்-ஆசிரியர் ஆலோசகரான ராதா ராஜ்குமார் கூறுவது:

"பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பே, குழந்தைகளை இயல்புக்கு மீறிய மனஅழுத்தத்துக்குத் தள்ளுகின்றன. குழந்தை வளர்ப்பிலும் வியாபாரத்தைப் போல முதலீட்டைப் போட்டுவிட்டு லாபத்தை எதிர்பார்க்கும் போக்கைக் குறைத்தாலே பாதி விஷயங்கள் சரியாகிவிடும். சமூக அந்தஸ்து என்ற பெயரில் பக்கத்து வீட்டில் வாங்கப்படும் டிவி, கார் போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு நிகராகத் தங்கள் குழந்தைகளையும் அதிக மதிப்பெண்கள் பெறவைத்துப் பெருமையைப் பறைசாற்றிக்கொள்வதே பல பெற்றோரின் மறைமுக விருப்பமாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதை நேர்மையாக ஒப்புக்கொள்ளாது, என் குழந்தை மீது எங்களுக்கு இல்லாத அக்கறையா என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அந்த அக்கறை தரும் நெருக்கடி, முதலுக்கு மோசம் செய்ய விடலாமா?

தங்கள் சுகதுக்கங்களை மறைத்து, ஓயாது உழைத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை காட்டும் எங்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு கூடத் தவறா என்றும் சிலர் கேட்பார்கள். தவறில்லை. அதே நேரம் நெருக்கடிகளைப் பெரியவர்கள் தாங்கிக்கொண்டு, குழந்தைகளுக்கான வாய்ப்பு களை உருவாக்கித் தருவதுடன் ஒதுங்கிக்கொள்வது நல்லது.

உங்கள் குழந்தை தனது தனித்தன்மை, ஆர்வம், படைப்பூக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இயல்பாகத் தனக்கான படிப்பு, வேலை என உரிய துறையைத் தேர்ந்தெடுத்து ஜொலிக்க உதவலாமே. இந்த விசாலமான எதிர்பார்ப்பு பெற்றோர், குழந்தைகள் என இரு தரப்பினருக்குமே தேர்வு குறித்த இறுக்கங்களைக் குறைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

இதற்கு மாறாகக் குழந்தைகள் மீது பெற்றோர் எதிர்பார்ப்புகளைத் திணிக்கும்போது, அவர்கள் சுயத்தைத் தொலைத்துக் கடமைக்குப் படிக்கவும், தேர்வெழுதவும் செய்வார்கள். தேர்வு முடிவு வெளியாகி, அந்தக் குட்டு உடைந்துபோகும்போது பிள்ளைகள் தங்களையே பணயமாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கும் தீர்வை எடுப்பதற்குத் துணிவார்கள்.

தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். அவர்களுடன் ஆக்கபூர்வமான நேரத்தைச் செலவழியுங்கள். தேர்வு எழுதியாயிற்று. தேர்வு முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொள்வதைத் தவிர, இனி நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை உள்ளார்ந்த பரிவுடன் அவர்களுக்கு உணர்த்த முயற்சியுங்கள்.

எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைந்து போய்க் குழந்தைகள் முடங்கிவிட்டால், உடனடியாக மறுகூட்டல், மறுதிருத்தல் முறைகளைப் பயன்படுத்தச் சொல்லி, ஆசுவாசம் அளிக்கலாம். அதிகபட்சமாக அவர்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், உடனடி மறுதேர்வு குறித்துப் பேசி அடுத்த கட்டத்துக்கு அவர்களை நகர்த்தலாம்.

தேர்வு முடிவு என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குக் கடுமையான நெருக்கடியைத் தரக்கூடியது. அதன் பின்னர் அவர்கள் விலகி நின்று தங்கள் தவறுகளைத் தானாக உணரத் தலைப்படுவார்கள். அப்போது சாவகசமாய், நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பியதை உங்களது வழக்கமான பாணியில் சொல்லலாம். ரிசல்ட் வந்த வேகத்தில் உங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பது, மனநெருக்கடிகளை அதிகரித்துக் குழந்தைகளைத் தவறான முடிவுகளுக்குத் தள்ளும்.”

எப்படி எதிர்கொள்வது?

குழந்தையின் மனம் உடைந்துப் போகும் வகையில் தேர்வு முடிவு அமைந்தால், விபரீத எதிர்மறைச் சிந்தனைகளில் இருந்து அவர்களை மீட்க முதலில் செய்ய வேண்டியது குறித்த நெருக்கடி நேர எதிர்கொள்ளலுக்கு வழிகாட்டுகிறார் திருச்சியைச் சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுணரும், தற்கொலைத் தடுப்பு ஆலோசகருமான டி.ரன்தீப் ராஜ்குமார்:

"வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது உலகில் எந்த ஒரு உயிரினத்தின் விருப்பமாகவும் இருக்காது. அதை ஒரு தப்பித்தலாகவோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எதிர்மறை உபாயமாகவோ, பிறரை மிரட்டவோ, பிரச்சினைக்கான தீர்வாகவோ பரிசீலனை செய்யவே தலைப்படுவார்கள். தனிமை, வெறுப்பு, சின்ன விஷயத்துக்குக்கூட எரிந்து விழுவது, எதிர்மறை எண்ணம், தன் மீது உயர்ந்த மதிப்பு இல்லாதது, தாழ்வு மனப்பான்மை, எதிர்காலம் குறித்து அளவுக்கு மீறிய அச்சம், தன்னுடைய தவறுகளுக்குப் பிறர் மேல் குற்றஞ்சாட்டுவது... இப்படிப்பட்ட போக்குகள் குழந்தைகளிடம் சாதாரண மாகவே அதிகமிருக்கும். இந்நிலையில் தோல்வி நேரும்போது தடாலடியாய் உள்ளுக்குள் உடைந்துபோய், மோசமான முடிவுகளை எடுக்கத் தலைப்படுவார்கள்.

தேர்வு முடிவு வெளியாகும் தருணத்தில், தான் வெற்றிபெற்றதாக உணர்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 199 மதிப்பெண் எடுத்தவர்கூட ‘ஐயோ! சென்டம் போச்சே' என்பார்கள். விகிதாச்சாரம் வேறுபடுமே ஒழிய, பெரும்பாலானோருக்குத் தோல்வி என்ற உணர்வு பொதுவானதுதான்.

இந்த வகையில் உடைந்த மனநிலை பெரும்பாலான குழந்தைகளிடம் ஒளிந்திருக்கக் கூடும். இதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற, ரிசல்ட்டுக்கு இரண்டொரு நாள் முன்பாகவே அவர்களை ஆக்கபூர்வமாகத் தயார்படுத்துவது நல்லது. அவர்கள் முன்னால் இருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உணர்த்துவதிலிருந்து இதைத் தொடங்கலாம். இது இறுக்கத்தைக் குறைத்து, மனதை லேசாக்கும்.

அதேபோலத் தேர்வு முடிவு பாதகமாக அமைந்தால், அவர்கள் இருக்கும் இடத்தை அல்லது சூழலை மாற்றுவதும் நல்லது. ஒப்பிட்டுப் பேசுபவர்கள், குத்திக்காட்டும் குதர்க்கவாதிகள் அருகில் இருந்தால் அவர்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது பெற்றோரின் பொறுப்பு. சூழல் தங்கள் கையை மீறிச் செல்வதாகப் பெற்றோர் உணர்ந்தால், உடனடியாக ஒரு நிபுணரைச் சந்தித்துக் கவுன்சலிங் பெறுவது அவசியம்.

இந்த நேரத்தில் குழந்தை கள் விரும்பும் தனிமையை அனுமதிக்கலாம். ஆனால், தவறியும் தனியாக விட்டுவிடக் கூடாது. தவறான முடிவுகளோ, முயற்சிகளோ அவை வெளிப்படுவதற்கு முன்னால் தங்கள் உள்ளக் கிடக்கையைத் தங்களையும் மீறி அவர்கள் வார்த்தைகளில் கொட்டிவிடு வார்கள். அப்படித் தெரிந்தால் பல மடங்கு கண்காணிப்பும் அனுசரணையும் பாதுகாப்பும் அவர்களுக்கு அவசியம்.’’



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

28 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்