டைஜீன் எடுத்துக்கொண்டால் அஜீரணம் சரியாகிவிடும் என்று மற்ற மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், ஆயுர்வேதத்தில் செரிமானத்துக்கும், அஜீரணத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அறிந்தேன். அதில் செரிமானச் சக்தியை அக்னி என்று குறிப்பிடுகிறார்கள், இந்த ஆயுர்வேதக் கருத்தை விளக்குவீர்களா? செரிமானத்தை இயற்கையாகச் சீரமைக்க ஆயுர்வேதம் உதவுமா?
- முருகன், செங்கல்பட்டு.
அஜீரணம் எனப்படும் உணவு செரிமானமின்மை (Dyspepsia spectrum), ஆயுர்வேதத்தில் மந்தாக்னி எனப்படுகிறது. இது கபத்தால் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையில் அக்னி (செரிக்கும் ஆற்றல்) மந்தமாக உள்ளதால், உணவைச் செரிக்க அதிக நேரம் தேவைப்படும். சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. இதனுடன் சளி - ஜலதோஷம் காணப்படலாம். எச்சில் அதிகமாக ஊறும். ரத்த ஓட்டம் குறையும். கால் நீர், உடல் எடை, கொழுப்பு, நீரிழிவு நோய், சோம்பேறித்தனம் போன்றவையும் ஏற்படும். நாக்கில் வெண்மை நிறம் வெளிப்படும்.
கபத்தின் மந்தத்தன்மை, குரு (Heaviness ) குணங்கள் இதில் காணப்படலாம். எளிதான உணவு வகைகளை உட்கொள்ளத் தோன்றும். கசப்பு உணவில் நாட்டம் ஏற்படும். வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படலாம், வயிற்றில் கனத்தன்மை காணப்படலாம். கை, கால்களில் கனத்தன்மையும் சோர்வும் காணப்படும். மனது மந்தமாகவும், உற்சாகக் குறைவும் ஏற்படும். வாழ்க்கையில் உற்சாகம் குறையும்.
காரணம் என்ன?
குளிர்ச்சியான உணவு வகைகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவு வகைகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தைக் கட்டுப்படுத்துவது, அதிகமான காம இச்சை, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
மந்தாக்னி பல காரணங்களால் ஏற்படுகிறது. அதிகமாக மருந்துகளைச் சாப்பிடுவது, சோக நிலை, கல்லீரல் சரியாக வேலை செய்யாமலிருப்பது, ஆஸ்பிரின் போன்ற வலிநிவாரணிகளைத் தவறாகப் பயன்படுத்துவது, மனச் சோகம் ஆகியவற்றால் இது வருகிறது. கபம் அதிகமாக இருப்பவர்களுக்குப் பொதுவாகப் பசி ஏற்படுவதில்லை. அவர்களுக்குப் பசியைத் தாங்கும் சக்தி உண்டு. அதனால் Early satiety, non ulcer dyspepsia போன்றவற்றுடன் உடன் இந்தப் பிரச்சினையை ஒப்பிடலாம்.
கைமருந்து:
இதற்குக் கார்ப்பு சுவையுடைய உணவு வகைகள் நல்லது. உபவாசம் இருக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி, பஞ்சக் கோலம், பஞ்சகோலாசவம், ஜீரகாரிஷ்டம் போன்ற வெப்பமான மருந்துகள் நல்ல பலன் அளிக்கின்றன.
அதீத செரிமானம் (தீக்ஷ்ணாக்னி - Acidity spectrum)
பித்தத்தால் தூண்டப்பட்ட அக்னி தீவிரமாகச் செயல் படுவதற்குத் தீக்ஷ்ணாக்னி என்று பெயர். இதில் ஜீரணத் தன்மை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமாக உணவு உட்கொள்ள நேரும். வயிறு எரிச்சல், புளிப்புத் தன்மை ஏற்படும். வயிற்றுப் புண், சர்க்கரையின் அளவு திடீரெனக் குறைதல், பெருங்குடல் புண், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம், வாந்தியும் ஏற்படலாம். கோபம் அதிகமாக வரலாம், வெறுப்புத்தன்மை அதிகமாகலாம். நாக்கில் சிவந்த நிறத்தைக் காண்பதற்கு வாய்ப்பு உண்டு.
குளிர்ச்சியான உணவு, திரவங்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றால் விதக்தம் எனும் பித்தாஜீரணம் சீரடையும். வயிற்றில் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் சரகுணம் அதிகரிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதனால் அக்னி மந்தமாகவும் வாய்ப்புண்டு.
எளிதான உணவு நல்லது. கசப்பு, துவர்ப்பு நல்லது. குடூச்சியாதி கஷாயம், திராக்ஷாதி கஷாயம், அதிமதுரம் சேர்ந்த மதுயஷ்டியாதி கஷாயம், அவிபத்தி சூரணம், சந்தனத்தால் காய்ச்சிக் குளிர்விக்கப்பட்ட தண்ணீர் மிகவும் நல்லது.
தீக்ஷ்ணாக்னி என்பது பித்தத் துஷ்டியால் வருகிறது. இதை reflex oesophagitis, direct oesophagitis, acid peptic disease, gastritis, duodenitis போன்றவற்றுடன் ஒப்பிடலாம். கட்டிகளாகிய zollinger ellison syndrome போன்ற நோய்களிலும் தீக்ஷ்ணாக்னி காணப்படும்.
ஒழுங்கற்ற செரிமானம் (விஷமாக்னி - Intestinal motility disorder spectrum)
இது வாயுவால் ஏற்படுகிறது. சில நேரம் உணவில் விருப்பமும், சில நேரம் வெறுப்பும் தோன்றலாம். மலச்சிக்கல் காணப்படும், வயிற்று வலி ஏற்படும்.
சிறிய அளவில் உணவு சாப்பிட்டாலும் வாயு உருவாகும். கொஞ்சம் சாப்பிட்டவுடன் வயிறு ஊதியது போன்ற உணர்வு ஏற்படும். வெப்பமான உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும் என்பது போன்ற எண்ணம் ஏற்படும். தோல் வறண்டு போதல், கை கால்களில் வலி, முதுகு வலி, தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் காணப்படும்.
அக்னி ஒழுங்கற்ற தன்மையில் இருக்கும்போது மனப் பயம், பதற்றம் போன்றவையும் ஏற்படுகின்றன. நாக்கில் கறுப்பு நிறம், பழுப்பு நிறம் காணப்படும். பல் ஈறுகளிலும் இந்த நிறமாறுபாடு காணப்படும்.
சிகிச்சைகள்
மேற்கண்ட அஜீரணம் மிகவும் மாறுபாட்டுடன் காணப்படும். இதில் அடிக்கடி அக்னியைச் சீரமைக்க வேண்டியிருக்கும். பழச்சாறுகள் இதற்குப் பலனளிக்கும். கஞ்சி, புளிப்பு, உப்பு, கார வகைகள், இஞ்சி போன்றவை இதற்குச் சிறந்தவை. குறுகிய காலத்துக்கு உபவாசம் இருக்கலாம். சுக்கு, கொத்தமல்லி சேர்த்துக் காய்ச்சப்பட்ட தண்ணீர் உதவும். கஷாயங்களில் இந்துகாந்த கஷாயம், பெருங்காயம் சேர்ந்த ஹிங்குவசாதிகுளிகா, சுக்கு, நயோபாயம் லேகியம் போன்றவை சிறந்தவை.
விஷ்டப்தா ஜீரணம் என்ற பிரச்சினையின் அஜீரணத் தன்மை மாறுபட்டது. இது நீடித்து இருக்கும். மலம் இறுகியோ அல்லது இளகியோ போகும். பசி வரலாம், வராமலும் போகலாம். அஜீரணம் காணப்படும். கீழ் வாயு மிகுந்த தொந்தரவு அளிக்கும். வெப்பமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
சில நேரம் மந்தமாகவும், சில நேரம் சரியாகவும், சில நேரம் தீக்ஷ்ணமாகவும் காணப்படும். மனம் சார்ந்த நோய்களாலும், மன அழுத்தத்தாலும் இது ஏற்படலாம். Irritable bowel syndrome போன்ற நோய்களில் அக்னியின் தன்மை மாறுபட்டுக் காணப்படும்.
உணவும் அக்னியும்
அக்னியைப் பாதுகாக்க அறுசுவை நிறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். சூடாகச் சமைக்கப்பட்ட உணவு வகைகளை உண்ண வேண்டும். உணவு எளிமையாக இருக்க வேண்டும். நான்கு முதல் ஆறு மணி நேர இடைவெளியில் உண்ண வேண்டும். நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது. இது அக்னியைக் கெடுக்கும். குளிர்ந்த, கனமான உணவைத் தவிர்ப்பது நல்லது. கார்ப்பு, புளிப்பு, உப்பு ஆகிய சுவைகள் அக்னியின் தன்மையை அதிகரிக்கின்றன.
சாப்பிடுவதற்கு முன் சிறிய கசப்பு சுவையுடைய உணவு, காய்கறிகள் உண்பது, வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை மாற்றும். இஞ்சி, மஞ்சள், குறுமிளகு, லவங்கப்பட்டை அக்னியை அதிகரிக்கச் செய்கின்றன. இடையிடையே உபவாசம் இருப்பதும், பழச்சாறுகளைக் குடிப்பதும் அக்னியைச் சீராக்குகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது. எலுமிச்சை சாற்றில் உப்பு போட்டுக் குடிப்பது அக்னியைச் சுத்தி செய்கிறது. அக்னியைச் சீராக்குவதில் இஞ்சிக்குப் பெரும் பங்கு உண்டு.
உடல் வெப்பத்துக்கு ஏற்றவாறு உணவு இருக்க வேண்டும். பழங்களிலும் பழச்சாறுகளிலும் பிராண சக்தி நன்றாக உள்ளது. சூரிய வெப்பம் உச்சத்தில் இருக்கும்போது, முதன்மை உணவான மதிய உணவைச் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது மூச்சை மெதுவாகச் சிரமமில்லாமல் விட வேண்டும். உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும், அமைதியாகச் சாப்பிட வேண்டும், உணர்ந்து சாப்பிட வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
இயற்கை உணவே சிறந்தது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெயில் வறுத்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நிறைய மோர் அருந்தலாம்.
வெள்ளை சர்க்கரை, தவிடு நீக்கப்பட்ட மாவு வகைகள், அடிக்கடி அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அளவுடன் குடிப்பது நல்லது. பேசிக்கொண்டு, படுத்துக்கொண்டு, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு சாப்பிடுவது தவறு.
கடைப்பிடிக்க வேண்டியவை
சிறுபயறு, நார்த்தங்காய், மோர், கறிவேப்பிலை, சேனைக் கிழங்கு மிகவும் உத்தமமான உணவு வகைகள். அக்னி நன்றாக இருக்கிற ஒருவருக்கு உணவு சீராகச் செரிக்கும். வாயு வெளியேறும். ஆமம் (விஷத்தன்மை) உருவாகாது, மனத்தெளிவு ஏற்படும்.
மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது இயற்கையாகக் காணப்படும் என்சைம்களை அழிக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. பச்சைத் தாவரங்களில் பிராண சக்தி அதிகம் உள்ளது. பச்சையம் எனும் குளோரோபில்லும் உள்ளது.
கனமான உணவுகளை இரவில் அதிகம் சாப்பிடக் கூடாது. உண்ணும் அளவும் முக்கியம், உண்ணும் நேரமும் முக்கியம். மருந்தாக இருந்தாலும் காலம் தவறி உண்ணக் கூடாது.
உணவு இடைவெளியை அதிகரித்துக் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. Small frequent meals சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவும் அந்தக் காலத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று நவீன மருத்துவத்தில் வயிற்றில் ஏற்படுகிற கொழுப்பு அல்லது தொப்பையைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். இதனால் கல்லீரலில் கொழுப்பு படியும், கொழுப்பு அதிகரிக்கும்போது மாரடைப்பு, நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகும், இடுப்பு வலி வரும் வாய்ப்பு அதிகமாகும், பித்தப்பையில் கற்கள் அதிகமாகும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆண்கள் இடுப்புச் சுற்றளவு 90 செ.மீக்குக் குறைவாகவும், பெண்கள் 85 செ.மீக்குக் குறைவாகவும் பராமரிப்பது நலம்.
வாய் சுவைக்கு முக்கியத்துவம் தந்து, வயிற்றை நிரப்பி வாழும் நாட்களைக் குறைத்துக்கொள்வதைக் காட்டிலும், வெறும் வயிற்றுடன் இருப்பதே சிறந்தது.
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை - 600 002
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago