எனக்குத் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. குழந்தைப்பேறு இல்லை. அடிவயிற்றில் கடுமையான வலி அவ்வப்போது ஏற்பட்டுவந்தது. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியாமல், மருத்துவரைப் பார்த்தேன். எனக்கு Endometriosis பாதிப்பு இருப்பதாகக் கூறினார். எனக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் போய்விடுமோ?
- மஞ்சுளா, கோவை
எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்று சொல்லக்கூடிய நோயானது கர்ப்பப்பையில் இருக்கிற திசுவானது வளர்ந்து, மற்ற இடங்களுக்குப் பரவி அங்கும் வளர்கின்ற ஒரு நிலை. இதனால் வலி, அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்துக்கு இடையிலான இடைவெளியில் மாதவிடாய் வருவது, கர்ப்பம் உண்டாவதில் சிக்கல் போன்றவை ஏற்படலாம்.
மாதந்தோறும் பெண்களுக்குச் சினைமுட்டையில் இருந்து ஹார்மோன்கள் வெளிப்படும். இதன் காரணமாகக் கர்ப்பப்பை வீக்கம் அடைந்து கனம் ஏற்படும். 28 நாட்களில் கர்ப்பப்பையானது இந்தத் திசுக்களை ரத்தத்துடன் சேர்த்துப் பிறப்புறுப்பு வழியாக மாதவிடாயை வெளிப்படுத்தும்.
எங்கும் வளரலாம்
Endometriosis என்னும் நோயில் இந்தத் திசுக்கள் கர்ப்பப்பைக்கு வெளியே மற்றப் பகுதிகளில் வளரும். இது சினைமுட்டையில் வளரலாம், ஆசனவாயிலோ அல்லது பெருங்குடலிலோ, சிறுநீர்ப் பையிலோ, இரைப்பையிலோகூட வளரலாம். சினைமுட்டையில் இருந்து ஹார்மோன்கள் உருவாகும்போது திசுக்களின் பிரதிபலிப்பு தெரியும். இங்கு ரத்தப்போக்கும் ஏற்படும். இதனால் அதிக ரத்தம் சேரும், வலி கடுமையாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் திசுக்கள் மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. அங்குச் சேர்ந்த திசுக்கள் வளரத் தொடங்குகின்றன.
பெண்கள் சிலருக்குப் பின்புறமாக மாதவிடாய் ஏற்படுவதும் உண்டு. நோய் எதிர்ப்பு நிலையில் இது உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 25 - 35 வயதுக்குள் இந்த நிலை கண்டுபிடிக்கப்படுகிறது.
காரணங்கள்
குடும்பத்தில் தாய்க்கோ, சகோதரிக்கோ இந்நோய் இருந்தாலோ மிக இள வயதில் மாதவிடாய் தொடங்கினாலோ, குழந்தைப் பேறு இல்லாமல் போனாலோ, அடிக்கடி மாதவிடாய் வந்தாலோ, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு மாதவிடாய் தொடர்ந்தாலோ, ஹைமன் பகுதி மூடி இருந்தாலோ இந்நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் கடுமையான வலி, வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலி, மாதவிடாய் காலத்தில் வலி, மாதவிடாய்க்கு முன்பு வலி, ஒருவகையான தசைப்பிடித்தம், ஒரு வாரத்துக்கு முன்பே மாதவிடாய் வருவது, வலியுடன் கூடிய இல்வாழ்க்கை, மலம் வெளியேறுவதில் வலி, இடுப்புப் பகுதியில் வலி, முதுகு வலி போன்றவை காணப்படலாம். சிலருக்கு வலி காணப்படாது.
சிகிச்சை முறை
இந்நோய்க்கு laparoscopy test, பெண்ணுறுப்பில் ultrasound test போன்றவற்றைப் பெண் மருத்துவர்கள் மேற்கொள்வது உண்டு. வயது, அறிகுறிகள், நோயின் தன்மை, குழந்தைப்பேறு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மருந்துகளைப் பரிந்துரை செய்வார்கள். உடற்பயிற்சி செய்தல், வயிற்றைத் தளரச் செய்யும் பயிற்சிகள், வலி நிவாரணிகள், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். Hormone therapy கர்ப்பத் தடையை ஏற்படுத்தும். கர்ப்பத்தைத் தடை செய்கிற மாத்திரைகளை ஒன்பது மாதம்வரை கொடுப்பார்கள். இது நோயின் அறிகுறிகளைக் குறைக்கும்.
புரோஜெஸ்டிரோன் மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றைக் கொடுக்கிறபோது திசு வளர்ச்சி சுருங்கும். சில நேரம் இதனால் எடை கூடுதல், மன அழுத்தம் வரலாம். சில மருந்துகளையும் கொடுப்பார்கள். இது மாதவிடாய் நிற்கிற நிலைக்கு நெருங்கி இருக்கும். இவர்களுக்கு உடலில் சூடு, பிறப்புறுப்பில் வறட்சி, மன மாற்றம் போன்றவையும் ஏற்படலாம். சில நேரம் அறுவை சிகிச்சையும் செய்யப்படலாம்.
லேப்பராஸ்கோபி என்ற முறையில் நோயைக் கண்டுபிடிப்பார்கள். எங்கெல்லாம் திசு வளர்ந்துள்ளதோ அதை அகற்றுவார்கள். Laparotamy என்ற முறையில் சிறிது கிழித்துத் திசுக்களை அகற்றுவார்கள். தாய்மை அடைவதற்கு இதுபோன்ற சிகிச்சைகள் தேவைப்படலாம். மிகவும் முற்றிய நிலையில் கர்ப்பப்பையை எடுத்து மாற்றுவதும் உண்டு.
ஆனால் குழந்தைப்பேறு வேண்டும் என்றால், இதைச் செய்யக் கூடாது. இவர்களுக்குக் குழந்தைப் பேற்றை உண்டாக்குவதற்கு, ஒரு மருத்துவர் தன்னால் இயன்ற சிகிச்சையைச் செய்ய வேண்டும். இவர்களுக்கு இடுப்பு வலியைக் குறைப்பது, புற்று ஏற்படாமல் தடுப்பது, நீண்ட நாள் மாதவிடாய் வராமல் இருக்க மருந்துகளைக் கொடுப்பது, முதுகுவலியைக் குறைப்பது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும்.
ஆயுர்வேத அணுகுமுறை
ஆயுர்வேதத்தில் யோனி விகாரங்கள் என்று கருப்பை விகாரங்கள் சுஸ்ருதத்தில் (ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சை பற்றிய புத்தகம்) சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்குத் தொடர்புள்ள அபான வாயுவைச் சீர் செய்வதற்கு முக்குரட்டை வேர், வில்வ வேர், கொள்ளு, ஆமணக்கு வேர், கருங்குறிஞ்சி, சுக்கு, முன்னை வேர் ஆகியவை சேர்ந்த ஸப்த ஸாரம் கஷாயம், சோற்றுக் கற்றாழை சேர்ந்த குமாரியாஸவம், சந்திரபிரபா வடி, தான்வந்தர தைலம், கருங்குறிஞ்சி சேர்ந்த குறிஞ்சி குழம்பு, தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த சதாவாரி லேகியம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். விழுதி எண்ணெயைக் கொண்டோ, மலை வேம்பாதி எண்ணெயைக் கொண்டோ பேதிக்குக் கொடுக்க வேண்டும்.
வஸ்தி என்று ஒரு சிகிச்சை இருக்கிறது. இதில் மாதுதைலிக வஸ்தி என்பது ஒரு மருத்துவக் கலவை. இதில் தேன், இந்துப்பு, தான்வந்தர தைலம், சதகுப்பை, ஆமணக்கு வேர் கஷாயம் ஆகியவற்றைக் கலந்து ஆசனவாய் வழியாகச் செலுத்துவார்கள். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவர அபான வாயு, அதன் இயக்கத்துக்கு வரும்.
தலையில் எண்ணெய் வைப்பதும், மூக்கின் வழியாகக் கல்யாணக கிருதம் (மருந்துகளால் காய்ச்சப்பட்ட நெய்) மருந்தை நஸ்யம் செய்வதும் சாலச் சிறந்தது ஆகும்.
இது அல்லாமல் பித்த வாதத்தைத் தணிக்கிற பால்முதப்பன் கிழங்கு சேர்ந்த விதார்யாதி கஷாயம், குறுந்தட்டி சேர்ந்த தான்வந்தர கஷாயம், நிலப்பனைக் கிழங்கு சேர்ந்த முஸலீகதிராதி கஷாயம், சந்திரபிரபா வடி, அசோக வடி, பவளப் பஸ்பம், தண்ணீர்விட்டான் கிழங்கு, பால் கஷாயம் போன்றவை இதற்குச் சிகிச்சையளிக்கச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. வான்குமரி லேகியம் இதற்கு முக்கிய மருந்தாகக் கருதப்படுகிறது.
இது அல்லாமல் இவர்களுக்கு மன அழுத்தத்தைத் தவிர்க்கக் குறுந்தட்டி வேரால் பால் கஷாயம் செய்து தாரை (தலையில் மருந்து விடுதல்) செய்ய வேண்டும்.
கைகொடுக்கும் கைமருந்துகள்
# கருஞ்சீரகத்தை நன்றாகப் பொடித்துப் பனைவெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாய் நேரத்தில் வரும் வலி குறையும். 5 கிராம்வரை இதைச் சாப்பிடலாம். இதற்குக் கொள்ளு கஷாயத்தை அனுபானமாகக் கொடுப்பதுண்டு.
# நாயுருவியால் காய்ச்சப்பட்ட நெய் Endometriosis-க்குச் சிறந்தது.
# கட்டுக்கொடி இலையைக் கஷாயம் போட்டு அல்லது தண்ணீரில் போட்டு அலசும்போது, வழுவழுவென்று வரும். இதைக் காலையில் 7 நாட்கள்வரை குடிக்கலாம். புளியைக் குறைத்துச் சாப்பிட வேண்டும்.
# மலைவேம்புத் தழையை நன்றாக இடித்துத் தயிர் சேர்த்து 30 மி.லி. வீதம் 3 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
# மாதவிடாய் விட்டுப்போகாத நிலையில் முள்ளுமுருங்கை இலையையும், கல்யாண முருங்கை இலையையும் சேர்த்து நன்றாக அரைத்து அதன் சாறை காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்தவுடன் சாப்பிடுவது நல்லது.
# கருப்பு எள் சாப்பிடுவது (30 கிராம் வரை) நல்லது. அதையே கஷாயம் செய்தும் குடிக்கலாம்.
# வெள்ளருகுவைப் பொடித்து டாடிமாதி (மாதுளை) நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட இந்த நோய் கட்டுப்படும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago