மாதவிடாய்க்குப் பிந்தைய பிரச்சினைகளுக்கு உதவ முடியுமா?

By டாக்டர் எல்.மகாதேவன்

எனக்கு 53 வயதாகிறது. மாதவிடாய் நிற்பது போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் மாதவிடாய் நின்ற பிறகு உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனை வழங்குவீர்களா?

- கமலம், மன்னார்குடி

நீங்கள் குறிப்பிடும் menopause பிரச்சினை பொதுவாக 51 வயதில் இருந்து ஏற்படும் என்றாலும், 45 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்திலும் வரலாம். இந்நிலையில் பெண்ணின் சினைமுட்டை என்று சொல்லக்கூடிய ovary வித்துகளை உருவாக்குவதை நிறுத்திக்கொள்கிறது. அத்துடன் பெண் ஹார்மோன்களாகிய ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஆகியவற்றை உருவாக்குவதை உடல் குறைத்துக்கொள்கிறது. இதனால் மாதவிடாய் நின்று போவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. மாதவிடாய் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இறுதியாக நின்றுவிடும். சிலருக்குத் திடீரென்றும் நிற்கலாம்.

மாதவிடாய் நிறுத்தம்

ஒரு வருடமாக மாதவிடாய் வரவில்லையென்றால், அந்த வயதில் அதை menopausal period என்றும், அதற்குப் பிறகு உள்ள காலகட்டத்தை post menopause என்றும் அழைப்போம். Surgical menopause என்று முறையில், அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பை மற்றும் சினைமுட்டைகளை எடுத்து விட்டால் ஈஸ்ட்ரோஜன் குறைந்துவிடும். புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் உட்கொள்ளும் மருந்துகளால், மாதவிடாய் நின்றுவிடும். மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கும் மாதவிடாய் நின்றுவிடும். இந்த அறிகுறிகள் பொதுவானவை அல்ல. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களுடைய உடல் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு ஏற்ப, இந்த அறிகுறிகள் மாறுபடலாம்.

மாதவிடாய் ஒரு சிலருக்குக் கடுமையானதாக இருக்கும். சிலருக்குக் கடுமையாக இருக்காது. மாதவிடாய் நின்றதற்குப் பிறகு 5 வருடங்கள் வரை மாதவிடாய் அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு இதயத் துடிப்பு கூடும், உடல் வெப்பமாக மாறும், இரவில் வியர்க்கும், தோல் தடிப்பு, உறக்கமின்மை ஏற்படலாம். உடல் உறவில் ஆர்வம் குறையும், மறதி, தலைவலி ஏற்படலாம். மனநிலையில் மாற்றம், கோபம், சோகம், எரிச்சல், பரபரப்பு போன்றவையும் ஏற்படலாம். அறியாமல் சிறுநீர் கழிக்கலாம், பெண்ணுறுப்பு வறண்டு போகலாம். உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படலாம். கை, கால் மூட்டுகளில் வலியும் ஏற்படலாம்.

பரிசோதனை முறைகள்

நவீன மருத்துவர்கள் ரத்தம், சிறுநீர் போன்றவற்றைப் பரிசோதித்து ஹார்மோன்களின் அளவை அறிவார்கள். அதில் தெரியும் அறிகுறிகள் ஒரு பெண் மாதவிடாய்க்கு அருகில் இருக்கிறாரா, இல்லையா என்பதைத் தெரிவிக்கும். Estradiol, FSH, LH என்ற பரிசோதனையைச் செய்வார்கள். பிறப்புறுப்பு பகுதியை ஸ்கேன் செய்வார்கள்.

ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் பிறப்புறுப்பில் மாற்றம் ஏற்படும். எலும்புகளின் கனம் குறையும். இதற்கு osteoporosis என்று பெயர். Bone density test எடுப்பார்கள். 60 முதல் 65 வயதுவரை உள்ள எல்லாப் பெண்களுக்கும், இதை எடுப்பது சிறந்தது. இப்பொழுது நல்ல மருந்துகள் கிடைக்கின்றன.

உஷ்ண உணர்வு

ஒரு சிலருக்கு உஷ்ணமான உணர்வு (Hot flashes), இரவில் வியர்வை, மன அமைதியின்மை, பிறப்புறுப்பில் வறட்சி போன்றவை இருந்தால், ஹார்மோன் தெரபி கொடுப்பார்கள். இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

இதனால் மார்பகப் புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தம் உறைதல் போன்றவை ஏற்படலாம். அதனால் இயற்கை முறைதான் சிறந்தது. மாதவிடாய் நின்ற கொஞ்சக் காலத்தில் ஹார்மோன் தெரபி தொடங்கலாம். ஹார்மோன் சிகிச்சையைக் குறைந்த அளவில் கொடுப்பது, களிம்பாகக் கொடுப்பது, ஒட்டிகளாகக் கொடுக்கலாம். ஆனால், இடையே mammogram எனும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனையை எடுக்கச் சொல்வார்கள்.

கர்ப்பப்பை உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் உடன், புரோஜெஸ்டிரோன் சேர்த்துக் கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கும்போது கர்ப்பாசயத்துக்கு உள்ளே endometrial tissue cancer வராது. மருந்தின்மூலம் மனதை அமைதிப்படுத்துவார்கள். endometrial tissue cancer மருந்துகள், நரம்பியல் மருந்துகள் எல்லாம் பல நிலைகளில் பயன்படுத்துவார்கள்.

ஆயுர்வேத அணுகுமுறை

ஆயுர்வேதத்தில் இந்தப் பிரச்சினைக்கு ஆர்த்தவ க்ஷயம் என்று பெயர். உடலில் பித்தம் குறைந்து வாதம் வருகிற நிலை. காபி, மதுபானம், காரம், புளி, எண்ணெய்ப் பலகாரங்கள் சேர்ந்த உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். சோயா சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். தினமும் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். கால்சியம் மாத்திரைகளைத் தினமும் 1 கிராம் சாப்பிட வேண்டும். உடல் எரிச்சல் வரும்போது, மூச்சை நன்கு இழுத்து நன்றாக விடவேண்டும். உடலுறவில் ஈடுபடுவதில் தவறில்லை. தேங்காய் எண்ணெயைத் தேய்ப்பதன் மூலம் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் பிறப்புறுப்பில் உதிரப் போக்கு இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையக் குறைய osteoporosis வரலாம், பெண்களுக்கும் ஆண்களைப் போல உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கலாம்.

ஒரு வருடமாக மாதவிடாய் நின்றிருந்து, திடீரென்று மாதவிடாய் வந்தாலும் மருத்துவரைப் பார்க்க வேண்டும். இது இயற்கையான ஒன்றுதான். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் கொழுப்பான உணவு வகைகளைக் குறைப்பதுடன் கால்சியம், வைட்டமின் டி போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறை

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் தரப்படும் சிகிச்சை வாத பித்தத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும். இதற்கு இனிப்பு சுவை, நெய்ப்புத் தன்மையுடைய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பால்முதப்பன் கிழங்கைக் கொண்டு காய்ச்சப்பட்ட பால்முதப்பன் குடிநீர் என்ற விதார்யாதி கஷாயம், திராக்ஷாதி கஷாயம், அதிமதுரச் சூரணம், கல்யாணப் பூசணி நெய், பவளப் பிஷ்டி, நன்னாரி மணப்பாகு ஆகியவை மிகச் சிறந்தவை.

மனப்பதற்றத்தைத் தணிக்கவும், பித்தத்தின் வேகத்தைக் குறைக்கவும் தலைக்கு மதுயஷ்டியாதி தைலம், கீழாநெல்லித் தைலம், ஜீரகத் தைலம் போன்றவற்றைத் தேய்த்துக் குளிக்கலாம். க்ஷீரபலா எனும் எண்ணெயைத் தலையிலும், பாதத்திலும் தேய்த்துவரப் பதற்றம் குறைந்து நிம்மதியான உறக்கம் வரும்.

அதிகமாக ஏற்படுகிற வியர்வையைத் தணிக்கப் பித்தத்தைக் குறைக்கும் மருந்துகளாகிய கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், நன்னாரி ஆகியவற்றை ஒரு கிழிபோல் கட்டி, மண்பானை நீரில் இட்டு அந்த நீரைக் குடிக்கப் பயன்படுத்தலாம். கல்யாணகம் நெய், மாதுளை நெய் போன்றவை சிறந்தவை.

கூடுதல் மருந்துகள்

எலும்பின் கனத்தைப் பாதுகாக்கக் கறுப்பு எள்ளுருண்டையைத் தினமும் சாப்பிட்டுக் குளிர்ந்த நீர் அருந்தி வரலாம். பிரண்டை சூரணம் 3 கிராம் வீதம் இரண்டு வேளை சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நாராயண தைலம், தான்வந்தர தைலம் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில்அப்யங்க ஸ்நானம் (எண்ணெய் குளியல்) செய்யலாம். அணு தைலம் வைத்து மூக்கில் விட்டுச் செய்யும் சிகிச்சையாகிய நஸ்ய சிகிச்சை செய்யலாம். அதிகமான மனப்பதற்றம் உள்ளவர்கள், பால்முதப்பன், குறுந்தட்டி வேரைக் கொண்டு காய்ச்சப்பட்ட பாலைக்கொண்டு தலைக்குத் தாரை செய்யலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த சதாவரி லேகியம், கல்யாணப் பூசணி லேகியம் என்ற கூஷ்மாண்ட லேகியம் ஆகியவை மிகவும் சிறந்தவை. கைகால் மூட்டு வலி இருந்தால் பால் வஸ்திகளைச் செய்யலாம். எலும்புகளைப் பலப்படுத்தக் கொம்பரக்கு சூரணம் 1 கிராம் வீதம் இரண்டு வேளை தேனில் கலந்து கொடுக்கலாம். பிராணாயாமப் பயிற்சி, சூரிய நமஸ்காரப் பயிற்சி, பகல் 11 முதல் 1 மணிவரை உள்ள வெயிலில் 5 முதல் 7 நிமிடம் நிற்பது பலன் அளிக்கும்.

கொழுப்பைத் தடுக்கவும்

பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட்டால் காய்ச்சாத பச்சை தேங்காய் எண்ணெய், சததௌதகிருதம் போன்றவற்றைத் தடவி வரலாம். திடீரென்று ரத்தப் போக்கு ஏற்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும். உடனடி சிகிச்சையாகத் தேனில் கலந்து அசோகப்பட்டை சூரணம் 5 கிராம் இரண்டு வேளை கொடுக்கலாம்.

செம்பருத்தி சேர்த்துச் செய்யப்பட்ட சர்பத் போன்றவை ரத்த விருத்தியை ஏற்படுத்தும். மன அமைதியைப் பெறுதல், எலும்புகளைப் பாதுகாத்தல், கொழுப்புகள் அதிகமாகாமல் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

மாதவிடாய் நின்ற பிறகு கொழுப்பு அதிகரித்தலும், அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும் விகிதமும் பெண்களிடையே அதிகரிக்கும். அதனால் கொழுப்பைக் குறைக்க மருதம்பட்டை மாத்திரை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். உடல் எரிச்சல் இல்லாதவர்கள் கொள்ளுக் கஷாயம் குடிக்கலாம். கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது கூடுதல் பயன்தரும்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600 002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்