எனக்கு chronic fatigue syndrome என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் என்ன? இதற்கான சிகிச்சை முறைகளை விவரிக்க முடியுமா? - மாதவன், மும்பை.
உங்களுக்கு வந்திருப்பது நாள்பட்ட சோர்வு நோய் (chronic fatigue syndrome). இது auto immune எனப்படும். எப்பொழுதும் அசதியாக இருக்கும். பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும்.
ஆனால், இந்த வகையான அசதி தூங்கினாலும் சரியாகாது. இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை என்றே நவீன மருத்துவம் கூறுகிறது. ஒரு சில வைரஸ்கள் இதற்குக் காரணமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை.
காரணங்கள்
மன அழுத்தம், குடும்பச் சூழ்நிலை, வேலையில் விருப்பமின்மை போன்ற காரணங்களாலும் இந்த வகையான அசதி ஏற்படலாம். 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான அசதி அதிகமாக வருகிறது.
ஃபுளூ காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளே இதில் தெரிகின்றன. தசை வலி, தலைவலி, அதீதச் சோர்வு போன்றவை 6 மாதங்களுக்கு மேல் இதில் நீடித்திருக்கலாம். உடற்பயிற்சி செய்தாலும் சோர்வுவரும். காலை எழுந்தவுடன் அசதியாகக் காணப்படும். மறதி ஏற்படும், மனதின் ஒருமுகத்தன்மை குறையும், குழப்பம் வரும், மூட்டு வலி வரும் ஆனால் வீங்காது, சிவக்காது. ஒரு சிலருக்குத் தொண்டை வலி வந்து பார்த்திருக்கிறேன்.
பரிசோதனைகள்
இந்த வகை அசதிக்கு எனச் சிறப்புப் பரிசோதனைகள் ஒன்றும் இல்லை. நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு போன்ற பரிசோதனைகளே இதற்கும் செய்யப்படுகின்றன.
ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுகிறார்களா, தாது பாகம் என்று சொல்லக்கூடிய auto immune உள்ளதா, கிருமி தொற்று உள்ளதா, multiple sclerosis போன்ற நோய் உள்ளதா, தைராய்டு, இதயம், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, மனச் சோக நோய் உள்ளதா, ஏதாவது கட்டிகள் உள்ளனவா எனப் பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும்.
வெள்ளையணுக்கள், மூளை எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகளும் செய்வதுண்டு. பலருக்கு மனச் சோக நோய் இருக்கும். எதிலும் ஆர்வமின்மை, படுக்கையில் இருந்து எழுந்திருக்க விருப்பம் இல்லாமை, சாப்பாட்டில் விருப்பமின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற செயல்களைச் செய்வார்கள்.
சிகிச்சை
இவர்களுக்கு வாதத்தைத் தணிக்கிற சிகிச்சைகள் முக்கியமானவை. லகுவான கஞ்சி வகைகளில் சுக்கு சேர்த்துக் கொடுக்கலாம். தூங்குவதற்கு முன் தலைக்கும், காலுக்கும் கொம்பரக்கு எண்ணெய் தேய்த்த பின் தூங்கலாம். தலையில் எண்ணெய் ஊற்றும் தாரை சிகிச்சை செய்ய வேண்டும். சிற்றரத்தை, குறுந்தட்டி, நாயுருவி, அஸ்வகந்தா போன்ற கஷாயங்களைக் கொடுத்து அலுப்பைக் குறைக்க வேண்டும். தாளிசபத்திரி மாத்திரை பசியைக் குறைத்துக் காய்ச்சலைக் குறைக்கும்.
மனதுக்கு வல்லாரை, சங்குபுஷ்பி, கல்யாணப் பூசணி, வாலுலுவை, நீர்பிரம்மி, வெண்தாமரை போன்ற சூரணங்களைக் கொடுக்க வேண்டும். மிகை அசதி நோய் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மருந்துகள்
மிகை அசதியால் சோர்வாக இருப்பவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும், ஒய்வையும், தூக்கத்தையும் முறைப்படுத்தவேண்டும். ஒரு பெரிய வேலையை, சிறிது சிறிதாகப் பிரித்துச் செய்வதற்குப் பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது.
மிகை அசதி உள்ளவர்களுக்குப் பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம், தான்வந்தரத் தைலம் போன்ற எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். தசமூலத்தைப் பாலில் காய்ச்சி அந்தப் பாலில் தாரை (ஊற்றுதல்) செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வஸ்தி சிகிச்சை (enema) அற்புதமான பலனைத் தரும். ஆறு மாதத்தில் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். சிலருக்குச் சோகம், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையால் ஏற்படுகிறது. மனம் விட்டுப் பேசுவதால், இதைப் படிபடியாகக் குறைக்க முடியும்.
எளிமையான மருந்துகள்
# கிராம்பு, நிலவேம்பைச் சம அளவு எடுத்துத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.
# ஒரு டம்ளர் அன்னாசிப் பழச் சாற்றுடன் மிளகுத் தூள் சேர்த்துத் தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.
# அக்கரகார சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து, அத்துடன் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து, வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.
# முருங்கை ஈர்க்கைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் கஷாயம் செய்து குடிக்க அசதி நீங்கும்.
# மிளகை நெய்யில் வறுத்துத் தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்
# வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டுவர அசதி குறையும்.
# புதினாவைச் சுத்தம் செய்து காயவைத்து இடித்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கஷாயம் செய்து சாப்பிட்டுவந்தால் உடலில் அசதி குறையும்.
# கேரட்டைச் சுத்தம் செய்து அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் அசதி குறையும்.
# மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் வகைக்கு 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய் தலா 10 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இடித்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு குறையும்.
# செங்கரும்புச் சாறு 100 மி.லி., எலுமிச்சைச் சாறு 30 மி.லி. ஆகியவற்றுடன் சீரகப் பொடியைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் அசதி குறையும்.
# கோதுமையைத் தண்ணீர் விட்டு இரவில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கோதுமை முளை விட்டு இருக்கும். அதை வெயிலில் உலர்த்திப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் அதிமதுரம், நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.
# இந்துப்பு, மிளகு, பொடுதலைக் காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் அருந்திவந்தால் உடல் அசதி குறையும்.
# கோபுரம் தாங்கிச் செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்துக் காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டுவந்தால் உடல் சோர்வு குறையும்.
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,
தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago