அஜீரணம் ஏற்படுவது ஏன்?

By கு.கணேசன்

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன.

ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து ‘செரிமானம்' எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன.

அஜீரணம் என்பது என்ன?

அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால் அல்லது நோய்களால் இந்தச் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதையே ‘அஜீரணம்' என்கிறோம்.

பொதுவான அறிகுறிகள்

உணவு உண்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.

பொதுவான காரணங்கள்

அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப் படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்துக்கு வழி அமைக்கும். விருந்து மற்றும் விழாக் காலங்களில் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதாலும் அஜீரணம் ஏற்படும்.

எண்ணெயில் வறுத்த மீன், இறைச்சி போன்ற அசைவ உணவு வகைகள் மற்றும் அப்பளம், வடை, இனிப்புப் பண்டங்கள், நெய், வெண்ணெய், டால்டா போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கும். இதனால் இரைப்பையில் இயல்பாகச் செரிமான நீர்கள் சுரப்பது தடைபட்டு, அஜீரணத்தை வரவேற்கும்.

அதிக அளவு காபி, தேநீர் குடிப்பது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை அல்லது பான்மசாலா போடுவது, துரித உணவுகளை அடிக்கடி உண்பது, மென்பானங்களை அளவின்றிக் குடிப்பது போன்றவையும் அஜீரணம் ஏற்படக் காரணமாகலாம்.

நச்சுணவு

தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் முன்பு நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் குடலுக்குள் நுழைந்து நோய்த்தொற்றை உண்டாக்கலாம்.

அப்போது நோயின் தொடக்க அறிகுறியாக அஜீரணம் தலைகாட்டும். மாசுபட்ட குடிநீரைக் குடித்தாலும், உணவைச் சமைக்கும்போது சுத்தத்தைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், சமையல் பாத்திரங்களில் உலோகக் கலவை சரியில்லை என்றாலும், சுகாதாரம் குறைந்த அசுத்தமான உணவு விடுதிகளில் தொடர்ந்து உணவு சாப்பிடுவது போன்றவற்றாலும் செரிமானப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டு அஜீரணம் தோன்றும். குழந்தைக்குப் பால்புட்டியைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் பால் புகட்டினால் அஜீரணம் ஏற்படும்.

கலப்பட உணவு

உணவு தயாரிக்கும்போது கலப்பட எண்ணெய், கலப்பட உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது அஜீரணத்தை வரவேற்கும். உணவைச் சரியான அளவில் வேகவைத்துச் சமைக்காவிட்டாலும் இதே நிலைமைதான். வயதுக்கு மீறிச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிடுவதும், தேவையான அளவுக்குச் சத்துள்ள உணவைச் சாப்பிடும் வயதில் சாப்பிடாததும், குறிப்பாக நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.

நேரம் தப்பிய உணவு

அதிகாலையில் எழுந்து நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள், மருத்துவப் பிரதிநிதிகள் போன்றோர் பெரும்பாலும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இப்படி நேரம் தவறி உண்பதால், இவர்களுடைய குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படுகிறது. இதுபோலவே உணவை அவசர அவசரமாக உண்பவர்களுக்கு உமிழ் நீருடன் உணவு சரியாகக் கலக்காத காரணத்தால் அஜீரணம் உண்டாகிறது.

மனநிலை முக்கியம்

உணவு உண்ணும்போது மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் உண்ண வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாகச் செரிமானமாகும். மனக் கவலை, மன அழுத்தம், கோபம், எரிச்சல், வெறுப்பு, சண்டை போன்ற உளக் கோளாறுகளுடன் உணவு உண்டால் உணவின் செரிமானம் குறையும். தூக்கமின்மை, ஓய்வின்மை, நாட்பட்ட பயணம் போன்றவற்றாலும் அஜீரணம் ஏற்படும்.

உடல் கோளாறுகள்

உடலில் உள்ள சில கோளாறுகளின் ஆரம்ப அறிகுறியாக அஜீரணம் உண்டாகும். உணவுக் குழாய் அழற்சி, உணவுக் குழாய்ப் புற்று, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்று, குடல் புழுக்கள், அமீபா மற்றும் கியார்டியா தொற்றுகள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட கல்லீரல் நோய்கள், பித்தப்பைக் கோளாறுகள், குடல் கட்டிகள், மூலநோய், காசநோய், ரத்தசோகை, நீரிழிவு, கணைய அழற்சி, கணையப் புற்று, ஒற்றைத் தலைவலி, குளுகோமா, சிறுநீரக நோய், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட எல்லா வகை தொற்றுக் காய்ச்சல்களும் இந்தப் பட்டியலில் சேரும்.

இதர காரணங்கள்

முதியோருக்கு முதுமை காரணமாக இயல்பாகவே செரிமான நொதிகள் சுரப்பது குறையும். இதனால் அஜீரணம் தலைகாட்டலாம். கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் அஜீரணம் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி தலைவலி மாத்திரைகள், பேதி மாத்திரைகள் அல்லது மலமிளக்கி மாத்திரைகளைப் பயன்படுத்துவோருக்கும் அஜீரணம் ஏற்படுவது உறுதி.

போதிய உடற்பயிற்சி இல்லாதவர்கள், தொடர்ந்து வெகுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஆகியோருக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு.

தவிர்க்க வழி

அஜீரணம் ஏற்பட்டதும் மருத்துவரிடம் பரிசோதித்துக் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சை பெறுங்கள். சுய சிகிச்சை வேண்டாம். அடுத்து, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சமச்சீர் உணவு வகைகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உண்ணுங்கள். அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், உணவின் ஒரு பகுதியாகத் தினசரி இருக்கட்டும். இரவில் தினமும் இரண்டு பழங்களை உண்ணுங்கள். வயிற்றில் வாயுவை உருவாக்கும் மொச்சை, பயறு, பட்டாணி போன்றவற்றை வயதானவர்கள் தவிர்க்க வேண்டியது முக்கியம். காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் அவசியம்.

- கட்டுரையாளர் பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்