முன்பெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைக்குப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிக்கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. இப்படிப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகுவதற்கு என்ன காரணம்? இதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாதா?
புற்று என்றால்?
உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சியும், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதை உணர்த்தும் அறிகுறிதான் புற்றுநோய். இது மரணத்தை விளைவிக்கக்கூடிய மிகவும் கொடிய நோய். உடலில் எங்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம். பாலினத்தைப் பொறுத்து நோய் வரும் இடம் மாறலாம்.
ஆண்களுக்கு இரைப்பை, நுரையீரல், ஈரல், பெருங்குடல்-மலக் குடல், உணவுப் பாதை, வாயின் மேல் தொண்டை, புராஸ்டேட் சுரப்பிகளில் இந்நோய் அதிகமாகத் தாக்குகிறது. பெண்களுக்கு மார்பு, இரைப்பை, பெருங்குடல்-மலக் குடல், கர்ப்பப் பை, உணவுப் பாதை, கல்லீரல் ஆகிய இடங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகக் காணப் படுகிறது.
நோய்க்கான காரணம்
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களுக்கு 80 - 90 சதவீதம் சுற்றுச்சூழலே காரணமாக இருக்கிறது. அத்துடன் உலகில் சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்கள் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாய், நுரையீரல், தொண்டைக் குழி, மூச்சுக் குழல், உணவுப் பாதை, சிறுநீர்ப் பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டுப் புற்றுநோய் ஏற்படுகிறது.
அதிகப்படியாக மதுபானங்களைக் குடிப்பது கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் வரக் காரணமாக அமைகிறது. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது குடலில் புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது. உப்புக்கண்டம் போன்ற பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை உண்பது இரைப்பை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன. இவற்றைத் தவிர இன்னும் சில காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலி மற்றும் சார்பியல் சிறப்பு மருத்துவர் அசார் ஹுசேன்,
யாருக்கெல்லாம் வருகிறது?
"வாழ்நாள் அதிகரிப்பதும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பெருக ஒரு காரணம். 60 ஆண்டுகளுக்கு முன்பு சராசரி வாழ்நாள் 35-40 வயதுவரை இருந்தது. இன்றோ அது 60 வயதைத் தாண்டிவிட்டது. 60 வயதைத் தாண்டி வாழ்பவர்களில் 30 சதவீதம் பேருக்குப் புற்றுநோய் இருப்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் ஏற்படச் சுற்றுச்சூழலில் உள்ள கார்சினோஜென் - அதாவது புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் முக்கியக் காரணம். புகை, தூசி, ஆஸ்பெஸ்டாஸ், மணல், மரத் துகள் ஆகியவை இருக்குமிடங்களில் கார்சினோஜென் அதிகம் காணப்படுகிறது. இந்த இடங்களில் பணிபுரிபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
மென்று தின்னக்கூடிய பான் போன்ற புகையிலைப் பொருட்களால் வாயில் புற்றுநோய் வருகிறது. மரபியல் சார்ந்த விஷயங்களாலும் இந்த நோய் வரலாம். வீட்டில் அம்மா, அப்பாவுக்கு இந்த நோய் வந்தால் வாரிசுகளுக்கும் வர வாய்ப்பு உண்டு. அதேநேரம், நிச்சயமாக வரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. வராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. முன்னெச்சரிக்கையோடு இருந்தால் போதும்" என்கிறார் மருத்துவர் அசார் ஹுசேன்.
வாழ்வின் முடிவு அல்ல...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்குப் புற்றுநோய் வந்தது. ஆனால், ஒன்றரை ஆண்டுக்குள் இந்த நோயில் இருந்து விடுபட்டு, சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பினார். எனவே, புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து மூலையில் உட்கார வேண்டிய தேவை இல்லை.
அந்த நோயை வெல்ல மனஉறுதியும் முறையான சிகிச்சையும் முக்கியம். அதைவிட நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகமிக முக்கியம். ஆனால், பலரும் முற்றிய நிலையிலேயே புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு அந்த நோயுடன் போராடுகிறார்கள் என்பதே உண்மை. ஆரம்ப அறிகுறிகளை எப்படிக் கண்டறிவது?
ஆரம்ப அறிகுறிகள்
"உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் வலியும் இல்லை; எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் என்ன செய்வோம்? அப்படியே கண்டும் காணாமல் இருந்துவிடுவோம். ஆனால், அது தவறு. கட்டி எதனால் வந்தது, ஏதும் பாதிப்பு உண்டா என்பதை மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும். இதேபோல் பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இந்த அறிகுறிகள் புற்றுநோய் வந்ததற்கான அறிகுறிகள் என்று தவறாக எண்ண வேண்டாம். இதை ஒரு எச்சரிக்கையாகக் கருதி மருத்துவரைப் போய்ப் பார்த்து, உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று வழிகாட்டுகிறார் மருத்துவர் அசார் ஹுசேன்.
இவற்றைத் தவிர உடலில் உள்ள துளையின் வழியே ரத்தம் வருவது, தொடர் இருமல், தொண்டை கரகரப்பாக மாறிக் கட்டிக்கொள்வது, மாதவிடாய் இல்லாத சமயத்தில் உதிரப்போக்கு ஆகியவையும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்தான். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு இரண்டு முறைகளைப் பின்பற்றவேண்டும் என்று மருத்துவத் துறை அறிவுறுத்துகிறது. அதாவது, முதன்மை தடுப்பு முறை, ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது ஆகியவற்றின் மூலமே இந்நோயைத் தடுக்க முடியும்.
முதன்மை தடுப்பு வழிகள்
புகையிலை, மதுப் பழக்கத்தைக் கைவிடுவது, மாதவிடாய்க் காலத்தில் சுத்தமாக இருப்பது, கதிரியக்கம் உள்ள இடங்களில் பணியாற்றுவோர் பாதுகாப்பாகப் பணியாற்றுவது, காற்று, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பது, புற்றுநோயின் அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை மேற்கொள்வது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அறிந்திருப்பது ஆகியவையே முதன்மை தடுப்புகள். இவற்றை முறைப்படிப் பின்பற்றி வாழ்ந்தால் நாமும் புற்றுநோய் இல்லாமல் வாழ முடியும், புற்றுநோய் இல்லாத உலகையும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்க முடியும்.
கர்ப்பப்பை புற்றைத் தடுக்கலாம்
பல நோய்களுக்குத் தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புற்றுநோயில் ஒரு வகையான கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹியூமன் பாபிலோமா வைரஸ்தான் கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்படக் காரணம். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், இந்நோய் ஏற்படாமல் தடுக்க முடியும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், கர்ப்பப்பை புற்றுநோயின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவருகிறது. எந்த வயதுப் பெண்ணும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இந்த ஊசி போடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago