பன்றி காய்ச்சல்: தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

By கார்த்திக்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல், சளி வந்தாலே எல்லோரும் பயந்தார்கள். அரசு அறிவித்த ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசை காத்திருந்தது. பொது இடங்களுக்கு முகமூடி அணியாமல் வரப் பலரும் பயந்தார்கள். அன்று அப்படி மக்களைப் பயமுறுத்திய காய்ச்சல், ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டப்பட்ட பன்றி காய்ச்சல்தான்.

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மெக்சிகோவில் தோன்றிய அந்தக் காய்ச்சலைப் பார்த்து உலகமே பயந்தது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அன்று அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்தார்கள்.

காய்ச்சல் அசட்டை

இன்றைக்கோ ஆந்திரா, தெலங்கானா எனத் தமிழகத்தின் அருகாமை மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரிந்தும்கூட, மக்களிடையே பெரிய அளவில் எச்சரிக்கை விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

இதைச் சாதாரணப் ஃபுளு காய்ச்சல் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காய்ச்சல் வந்தால் டாமி ஃபுளு மாத்திரை சாப்பிட்டால் போதும், அதேநேரம் காய்ச்சல் வந்தால் மருந்துக் கடைக்குச் சென்று தாங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் பொது மருத்துவத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதெல்லாமே முன்னெச்சரிக்கைகள்தான், வேறு எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் தேவை?

கூடுதல் கவனம் தேவை

"பொது இடத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் வெளியேறும் வைரஸ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு உள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், கைகுலுக்குகிறோம். ஏற்கெனவே, சிலர் பயன்படுத்திய சில பொருட்களை நாமும் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அதனால்தான் பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாகக் கழுவச் சொல்கிறோம். முகமூடி அணியச் சொல்கிறோம். இது பன்றி காய்ச்சலுக்கு மட்டுமில்லை. பொதுவாகப் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைதான்" என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை ஆர்.ஜெயந்தி.

பன்றி காய்ச்சலுக்குச் சொல்லப்படும் அறிகுறிகள் பொதுவாகச் சொல்லப்படும் காய்ச்சல் அறிகுறிகளைப் போன்றவைதான். அதனால், எந்தக் காய்ச்சல் வந்தாலும் நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஒரு வேளை பன்றி காய்ச்சலாக இருந்து நாமே மருந்து வாங்கிச் சாப்பிட்டு அசட்டையாக விட்டுவிட்டால், நோய் முற்றிய நிலைக்குச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ரத்தப் பரிசோதனை

இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற எல்லாமே பொதுவான அறிகுறிகள் தானே? அப்படியானால் எந்தெந்த அறிகுறிகளைக் கண்டு பன்றி காய்ச்சலுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? "தொடர்ந்து 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரணக் காய்ச்சலுக்கும் பொருந்தக்கூடியதுதான்.

எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரைப் பார்க்கும்போது ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதன்மூலம் பன்றி காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்" என்கிறார் ஆர். ஜெயந்தி.

குழந்தைகள் கவனம்

பெரியவர்கள்கூட எச்சரிக்கையுடன் இருந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. பெரியவர்களுக்குச் சொல்லப்படும் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்த வகை காய்ச்சல், சளியாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்க, இது உதவும் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்