என் மகள் இவ்வளவு காலம் மற்ற குழந்தைகளைப் போலத்தான் இருந்தாள். ஆனால், இப்போது அவளது செயல்பாடுகளில் மாற்றம் காணப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவரிடம் காட்டியபோது, ஆட்டிசம் சார்ந்த சிறப்பு மருத்துவரிடம் காட்டச் சொன்னார். ஆட்டிசம் என்பது மனநலக் குறைபாடு போன்றதா? இதற்கு மாற்று மருத்துவத் தீர்வுகள் உண்டா?
- தமிழரசி, தஞ்சாவூர்
இந்தியாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும், இது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.
ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.
குறைபாடு
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். இந்தக் குறைபாட்டைச் சீக்கிரமாகக் கண்டறிவதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். இவ்வகைக் குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்துக்கும் இக்குறைபாட்டுக்கும் தொடர்பில்லை.
ஆட்டிசம் அறிகுறிகள்
# எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.
# கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது.
# தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.
# சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.
# பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.
# பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.
# வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.
# தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
# காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.
# வலியை உணராமல் இருப்பது.
# வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்துகொண்டிருப்பது.
# வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.
# சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.
# தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. மாற்றங்களை அசவுகரியமாக உணருவது.
# பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
# பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.
# எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.
# தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.
# சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனித்து இருப்பது.
இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படைக் கூறுகள். 1943-ல் டாக்டர் லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர்தான் ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். அவர் தனது `பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம்’ (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன்முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சினைகள் பேசப்பட்டன.
அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் (Asperger syndrome)
பெரும்பாலும் பதின்ம வயதுகளிலேயே இக்குறைபாடு கண்டறியப்படுகிறது. இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பேசுவதிலும் புரிந்துகொள்ளும் திறனிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. சொல்லப்போனால் இக்குறைபாடுள்ள குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சராசரிக்கும் மேம்பட்ட அறிவுத் திறனைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களுடைய பிரச்சினையே, மற்றவர்களோடு கலந்து பழகமுடியாமல் இருப்பதுதான். எனவே, வளர வளரத்தான் இந்த பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியும். உலகில் மிகவும் பிரபலமாக இருந்த பல பேர் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குறைபாட்டை `கீக் சிண்ட்ரோம்’ (Geek Syndrome) அல்லது `லிட்டில் புரொபசர் சிண்ட்ரோம்’ (Little Professor Syndrome) என்றும் கூறுவதுண்டு.
ரெட் சிண்ட்ரோம் (Rett syndrome)
இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. தலை வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பது, கைகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமலிருப்பது போன்றவை இதன் அடையாளங்கள். இது பெரும்பாலும் மரபணு மூலமாகக் கடத்தப்படுகிறது. மேலும் `ரெட்’ மட்டுமே ஆட்டிசம் தொடர்பான குறைபாடுகளில் மருத்துவ ரீதியாக சோதித்துக் கண்டறிய முடிவதாக உள்ளது.
சி.டி.டி (Childhood Disintegrative Disorder)
இவ்வகைக் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்ற ஆட்டிசக் குறைபாடுகளைப் போலின்றி, குறிப்பிட்ட வயதுவரை இயல்பான குழந்தைகள் போலவே பேசவும், மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். திடீரென இவர்கள் பேச்சுத் திறன், பழகும் திறன் ஆகியவற்றை இழந்து ஆட்டிச நிலைக்கு உள்ளாவார்கள்.
ஆட்டிச பாதிப்புடைய பலரும் சில நேரங்களில் மூர்க்கமாக நடந்துகொள்வது உண்டு. இது அவர்களுடைய பயம் அல்லது எரிச்சல் காரணமாகவோ, உடல் ரீதியான சில சிக்கல்களாலோ ஏற்படுவது மட்டுமே. ஆட்டிசத்தின் காரணமாக அவர்கள் குரூரமான வன்முறைகளில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்று.
ஆட்டிசமுடைய ஒரு சிலர், ஏதேனும் சில துறைகளில் அபாரமான ஞானம் உடையவர்களாக இருப்பது உண்மையே. ஆனால், அதற்காக ஆட்டிச பாதிப்புக்குள்ளான எல்லோருமே ஏதேனும் ஒரு துறையில் சிறப்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆட்டிச பாதிப்புக்குள்ளான ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகைகளால் மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாக இருப்பதும் நிஜமே.
எப்படி மனித உடலுக்குச் சர்க்கரை குறைபாடு வந்தாலோ, ரத்தக் கொதிப்பு வந்தாலோ 100 சதவீதம் குணப்படுத்த முடியாதோ, அதுபோலத்தான் ஆட்டிசமும். ஆனாலும் ஆட்டிச பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவுக்குச் சீரான நிலைக்குக் கொண்டுவர முடியும்.
இயல்பும் பிறழ்வும்
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள புறத் தொடர்பு, அதனால் உணரப்படுவதை புத்தி என்று சொல்லலாம். எந்தவொரு பொருளையும் அல்லது விஷயத்தையும் மூளை உணர்வது கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் வழியே அவை தரும் அடிப்படைத் தகவல்களைப் பரிசீலிப்பதன் மூலம்தான்.
அத்தகவல்களின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சிந்தித்து, உணர்வுபூர்வமாகவும் உடல் மூலமாகவும் எதிர்வினையாற்றுகிறோம். சாதாரணமாக இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால், நாம் இவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
என்ன பிரச்சினை?
ஆட்டிச பாதிப்பு கொண்டவர்களுக்கு இந்த `சென்சரி’ - உணர்வு சார்ந்த தகவல்களைப் பெறுவதிலும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதிலும் நிறைய சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.
இக்குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினை கேட்பதில் ஏற்படுவதுதான். ஏனெனில், சத்தங்களை உள்வாங்காதபோது மனிதனின் தகவல் தொடர்புத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டும் கேட்கலாம். அல்லது குழப்பமாகவும், தெளிவில்லாமலும் கேட்கலாம்.
(இக்கேள்விக்கான பதில் அடுத்த இதழில் நிறைவடையும்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago