2014: கவனம் ஈர்த்த மருத்துவ நூல்கள்

By ஆதி

மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம், உணவு, பாரம்பரிய வழிமுறைகள் சார்ந்த அக்கறை அதிகரித்துவரும் காலம். இது சார்ந்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் புத்தகங்களின் பங்கு அதிகம். 2014-ம் ஆண்டில் வெளியாகிக் கவனம் ஈர்த்த மருத்துவ, ஆரோக்கிய உணவு நூல்கள்:



1. ஆறாம் திணை பாகம் 1, 2

நமது மண் சார்ந்த மருத்துவம், உணவு, பாரம்பரிய அறிவு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவை சார்ந்து புதிய புரிதல்களை ஏற்படுத்திய மருத்துவர் கு. சிவராமனின் 'ஆறாம் தினை' கட்டுரைகள் இரண்டு தொகுப்புகளாக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. உடல்நலப் பிரச்சினைகளும், சுற்றுச்சூழல் சீர்கேடும் பெருகிவிட்ட நெருக்கடியான சூழலில் அனைவரும் தேடும் ஆலோசனைகளின் களஞ்சியமாக இருக்கின்றன இந்தத் தொகுப்புகள்.

ஆறாம் திணை, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283



2. டாக்டர் இல்லாத இடத்தில்

மருத்துவம், உடல்நலம், மனநலம் சார்ந்த புரிதல்களை விரிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகம் உலகப் புகழ்பெற்ற 'டாக்டர் இல்லாத இடத்தில்' புத்தகத்தின் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. மக்களின் புரிதலின்மையையும், அறியாமையையும் மருத்துவத் துறை பயன்படுத்திக் கொள்ளும் இக்காலச் சூழலில், 'டாக்டர் இல்லாத இடத்தில்' தேவையற்ற பயங்களைப் போக்கி, அடிப்படை புரிதலைத் தருகிறது. மேயோ கிளினிக் வரிசை ஆங்கில நூல்களும் தொடர்ச்சியாகத் தமிழில் வெளியிடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332-273444



3. இயற்கை வழியில் இனிய பிரசவம்

"நான் எங்கள் வீட்டில் பிறந்தேன்" என்று எந்தக் குழந்தையாவது இன்றைக்குச் சொன்னால், நிச்சயம் ஆச்சரியமாகவே பார்க்க முடியும். ஆனால், 30-40 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான குழந்தைகள் வீட்டில்தான் பிரசவித்தன. இன்றைக்குப் பிரசவம் ஏதோ பயங்கர நோயைப் போன்ற பீதி, தேவையற்று உருவாக்கப்பட்டுவிட்டது. உடல் உழைப்பு முற்றிலும் குறைந்தது ஒரு காரணம் என்றால், நமது மரபு வேர்கள் மறக்கப்பட்டதும், மருத்துவத் துறை ஏற்படுத்தியுள்ள தவறான நம்பிக்கைகளும் முக்கியமான காரணங்கள். இவற்றைக் களைந்து நம் மரபுக்குத் திரும்பும் வகையில் இயற்கை வழியில் தன் மகன் பிறந்த அனுபவத்தை விவரித்திருக்கிறார் கலாநிதி.

இயற்கை வழியில் இனிய பிரசவம், ப.கலாநிதி, செம்மை வெளியீட்டகம், தொடர்புக்கு:



4. முதலுதவி

மருத்துவ அறிவை எளிய தமிழில், புரியும் வகையில் எழுதுவது டாக்டர் கு.கணேசனின் சிறப்பு. ஒருவர் அடிபட்டோ, தவறியோ கீழே விழுந்துவிட்டால், அவரை எப்படித் தூக்க வேண்டும் என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. எப்படித் தூக்கினால் அவருடைய காயம் மோசமடையாமல் இருக்கும், ஒவ்வொரு வகைக் காயத்திலிருந்தும் ஒருவரை முதல் கட்டமாக மீட்பது என்பதை முதலுதவி முறைகளைத் தெரிந்துகொண்டால், பின்பற்றலாம். அதை எளிமையாக விளக்குகிறது இப்புத்தகம்.

முதலுதவி, டாக்டர் கு. கணேசன், கல்கி பதிப்பகம், தொடர்புக்கு: 044-43438844



5. உள்ளங்கையில் உடல்நலம்

தேசிய அளவில் அலோபதி மருத்துவத் துறையை விமர்சனம் செய்துவருபவர்களில் டாக்டர் பி.எம்.ஹெக்டே முதன்மையானவர். அவரே ஒரு அலோபதி இதயவியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் மணிபால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான இவர், 'தி இந்து' ஆங்கில நாளிதழில் அலோபதி மருத்துவத் துறை சார்ந்தும், உடல்நலம் சார்ந்தும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவருடைய கட்டுரைகள் இந்த நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

உள்ளங்கையில் உடல் நலம், டாக்டர் பி.எம். ஹெக்டே, விகடன் வெளியீடு, தொடர்புக்கு: 044-42634283



கவனம் ஈர்த்த ஆரோக்கிய உணவு நூல்கள்

நலம் தரும் நமது பண்பாட்டு உணவுகள்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது நமது பண்பாடு. பருவகாலம்-உடல்வாகு-உடல்நிலைக்கு நமது அன்றாட உணவாக எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதை எப்படிச் சமைக்க வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பதை விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல். குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளிக் குழுவினர் இதைச் சிறப்பாகத் தொகுத்துள்ளனர். நமது பாரம்பரிய உணவு சார்ந்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்.

நலம் தரும் நமது பண்பாட்டு உணவுகள், மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை, தொடர்புக்கு: 044-24782377



நம்ம சாப்பாட்டு புராணம்

உணவு செய்முறைக் குறிப்புகளை எழுதுவது தமிழில் உணவு சார்ந்த எழுத்து என்றாகிவிட்டது. அதிலும்கூட ஆண்கள் எழுதிய புத்தகங்கள் குறைவுதான். காரணம் ஆண்கள் சமைப்பதில்லை. இந்நிலையில் உணவு, சமையல் பற்றி அக்கறை மிகுந்த போப்பு, தானே சமைத்துப் பெற்ற அனுபவத்தில் அடிப்படையில் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். உணவின் சுவை, ஆரோக்கியம், இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சமைப்பதற்கு உரிய சாத்தியம் ஆகிய மூன்று அம்சங்களையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.

நம்ம சாப்பாட்டு புராணம், போப்பு, சந்தியா பதிப்பகம், தொடர்புக்கு: 044-24896979



நலம் தரும் நறுமணமூட்டிகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாட்டினர் நம் மண்ணைத் தேடி வந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் நறுமணப் பொருட்கள்தான். நமது மண்ணுக்குப் புதிதான நறுமணப் பொருட்களை அன்றாட சமையலில் எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்திருந்த நம் முன்னோர், மருத்துவப் பலனையும் உணர்ந்து செயல்பட்டனர். அந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் நறுமணப் பொருட்களைப் பற்றிய ஆரோக்கிய-உணவு சார்ந்த புரிதலைத் தருகிறது இப்புத்தகம்.

நலம் தரும் நறுமணமூட்டிகள், மருத்துவர் கு. சிவராமன், தடாகம்-பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, தொடர்புக்கு: 8939967179



உணவு யுத்தம்

வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடுகளை-விவசாயத்தை நம்பியுள்ள நாடுகளை உலகின் பணக்கார நாடுகள் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கப் புதிய ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். போர் தொடுத்தோ, குண்டு போட்டோ ஒரு நாட்டை, மக்களை அடிமைப்படுத்துவது ஒரு வகை என்றால், பதப்படுத்தப்பட்ட உணவு-அயல் உணவு வகைகள், விதைக் கட்டுப்பாடு, விவசாய மூலப்பொருட்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், அயல்நாட்டு பயிர்கள்-பணப் பயிர்களைப் புகுத்துதல் போன்றவையே பணக்கார நாடுகளின் நவீன ஆயுதங்கள். அந்த ஆயுதங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் இப்புத்தகத்தில் விவரித்திருக்கிறார் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்