20 ஆண்டுகளாகத் தொடரும் தூக்கமின்மை தீருமா?

By கு.சிவராமன்

கடந்த 20 ஆண்டுகளாக என்னால் நன்றாகத் தூங்க முடியவில்லை. பல ஆண்டுகளாக மது அருந்துகிறேன். தற்போது இன்சோம்னியாவும், டைப் 2 நீரிழிவு நோயும் என்னைத் தாக்கியுள்ளன. இதற்கு மருந்து உட்கொண்டு வருகிறேன். மருந்து சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல், நல்ல உணவுப் பழக்கம் போன்றவை இருந்தாலும், தூக்கம் மட்டும் வரமாட்டேன் என்கிறது. இரவு முழுக்க விழித்திருந்தாலும், அடுத்த நாள் அயர்ச்சியாக இருப்பதில்லை. மனஅழுத்தம், மனநெருக்கடிகளும் இல்லை. தூக்கமின்மைக்கு நான் எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை. தொடர்பற்ற காட்சிகள் மனதுக்குள் ஓடுகின்றன. அதைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், மனது கட்டுப்பட மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வது?

- எம். சுப்ரமணியன், சென்னை

உறக்கம் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள மாபெரும் நோய் சீராக்கும் அமைப்பு. பகல் முழுவதும் நம் அன்றாடப் பணிகளில், உணவில், மன விகாரங்களில், சிந்தனை ஓட்டத்தில் சிதைவுறும் செல்கள் நோயாக மாறாமல் இயல்பாக உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மூலம் காத்துக்கொள்வதும், பழுது பார்த்துக்கொள்வதும், இரவு உறக்கத்தில்தான்.

அடுக்குத் தும்மலில் இருந்து புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உண்டு. அது சீராக நடக்க, உறக்கம் மிகமிக அவசியமான ஒன்று.

உங்கள் மதுப்பழக்கம் உங்கள் உறக்கத்தைப் பாதித்தது மட்டுமில்லாமல், நீரிழவு நோயையும் வரவழைத்துள்ளது.

இன்றைக்குப் பெருவாரியான இளைஞர்கள் மதுவில் சிக்குகிறார், இளமையில் பெருகும் நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் அதற்கு முக்கியக் காரணம் இரவில், அதுவும் குறிப்பாக நல்ல இருட்டில்தான் தூங்க வேண்டும் என இன்றைய அறிவியல் ஆராய்ந்து சொல்வதைக் கடைப்பிடிக்காமல் இருப்பதுதான். இரவில் தூங்கும் போதுதான் melatonin எனும் ஹார்மோன் சுரந்து புற்றுநோய் முதலான பல வாழ்க்கைமுறை நோய்கள் வராது தடுக்க உதவுகிறது.

நடுஇரவு வரை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருப்பது, பின்னிரவில் வேலை பார்த்தால்தான் எனக்கு மூளை வேலை செய்யும் எனப் பகலில் தூங்கி இரவில் வேலை செய்வது, உடலில் அமைக்கப்பட்டுள்ள Circadian rhythm சுழற்சியைச் சங்கடப்படுத்தி உறக்கத்தைப் பாதிக்கும்.

நீங்கள் முதலில் மதுவில் இருந்து முற்றிலும் வெளியேறுங்கள். அடுத்து, இரவில் அல்லது மாலையில் 45 நிமிட வேக நடைப்பயிற்சியைச் செய்துவிட்டு, இளஞ்சூடான வெந்நீரில் குளியல் எடுங்கள். காலையிலும் மாலையிலும் பிராணயாம மூச்சுப் பயிற்சியும், யோக நித்திரை சிகிச்சைகளான Deep relaxation technique, Instant relaxation technique எனும் யோகப் பயிற்சிகளை முறையாகப் பயின்று, செய்துவாருங்கள்.

உணவில் ஜாதிக்காய், கசகசா முதலியவற்றைக் கொஞ்சமாக இரவில் சேர்ப்பதும் மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதும் உறக்கம் தரும் எளிய பழக்கங்கள்.

சித்த மருத்துவ மூலிகையான அமுக்கரா கிழங்குச்சூரணத்தைச் சித்த மருத்துவரிடம் ஆலோசித்துப் பெற்று, பாலில் கலந்து இரவில் சாப்பிட்டு வரத் தூக்கமின்மை நோய் அகலும். தலைக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உறக்கத்தைச் சீர்ப்படுத்தி, பித்தத்தைச் சீராக்கும் தமிழர் வாழ்க்கைமுறைப் பயிற்சி. அதை உடனடியாகத் தொடங்குங்கள்.

எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. கைவைத்தியம், மற்ற வைத்திய முறைகளைச் செய்து பார்த்துவிட்டேன். மருந்தை நிறுத்திய கொஞ்ச நாளில் மீண்டும் தலைகாட்டி விடுகிறது. இதைப் போக்க என்ன வழி டாக்டர்?

- கோ. சுரேஷ், திருச்சி

தினசரி உணவில் மோர் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடுதலாக ஒரு கப் மோரைக் காலை, மாலையில் குடிக்கலாம். மணத்தக்காளிக் கீரையை வாரம் மூன்று நாள் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தவறாமல் எண்ணெய்க் குளியல் எடுங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், உணவுக்குப் பின்னர் சீரகத் தண்ணீர் குடிப்பதும் நல்லது.

இரவு நெடுநேரம் கண் விழிப்பது, மனப்பதற்றம் ஆகியவைகூட வாய்ப்புண் அடிக்கடி வருவதற்கான காரணமாக இருக்கலாம். இதற்குச் சீதளி பிராணயாம யோகப் பயிற்சியுடன் தியானப் பயிற்சியையும் சேர்த்துச் செய்வது சிறந்தது. உயிர்சத்து பி (வைட்டமின்) குறைவாலும் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புள்ளதால், சில காலம் அந்தச் சத்தைத் தரும் உணவோ அல்லது உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, நேரடி உயிர்ச்சத்து பி தரும் மருந்துகளையோ எடுத்துக்கொள்வது நல்லது.

எனக்கு வயது 43. கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு யூரிக் அமிலம் அதிகமாகச் சுரந்து கால் வீக்கம் ஏற்படுகிறது. இப்போது என் யூரிக் அமில அளவு 8. இதற்குத் தேவையான மருந்துகளையும், உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.

- கே. புகழேந்தி, சிதம்பரம்

உணவில் அதிகப் புரதச் சத்துள்ள மீன், கோழிக் கறி, முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, கடலைப் பருப்பு முதலிய உணவு வகைகளை நீங்கள் மிகமிகக் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். முழுமையாகத் தவிர்த்தால்கூட நல்லது.

யூரிக் அமில அதிகரிப்பு gout arthritisயையோ அல்லது சிறுநீரகத்தில் யூரிக் அமிலக் கற்களையோ உருவாக்கக் கூடும். உங்கள் கால்வீக்கம் gout ஆக இருக்கலாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசித்து, இது வேறு காரணத்தால் ஏற்பட்ட வீக்கமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறுநீரை அதிகம் வெளியேற்ற உதவும் வெள்ளரிக் காய், பார்லி, முள்ளங்கி, வாழைத்தண்டு முதலியவற்றைச் சேர்ப்பதும்கூட யூரிக் அமிலத்தால் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும். துரித உணவுகளையும், புட்டியில் அடைத்துச் சந்தையில் விற்கப்படும் ஊட்டப் புரத உணவுகளையும் முற்றிலும் தவிர்த்துவிடலாம்.

உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு

பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.

மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்