துரத்தும் வைரஸ்: தடுக்கும் வழிகள்

By டி. கார்த்திக்

மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல், தும்மல் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும். வீட்டில் ஒருவருக்கு வந்தால், அடுத்தவருக்குத் தொற்றும். சில காய்ச்சல்கள் கொஞ்சம் கூடுதலாகவே படுத்திவிடும். இதெல்லாம் நமக்குப் புதிதல்ல. ஆனால், சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொண்டு நோயைக் கட்டுப்படுத்திவிட்ட பிறகும்கூட, விரைவிலேயே மற்றொரு காய்ச்சல் தாக்குவதை எப்படிப் புரிந்துகொள்வது? இப்படி வருவது ‘வைரஸ் காய்ச்சலா’ அல்லது ‘மர்மக் காய்ச்சலா’?

சரி, வைரஸ் காய்ச்சல்கள் எப்படிப் பரவுகின்றன? காற்று, தண்ணீர், கொசுக்கள் மூலமே பரவுகின்றன. பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள், வைரஸ் தன் தாக்கத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும். முறையான மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு 5 முதல் 7 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், இப்போது சில நாட்களிலோ, சில வாரங்களிலோ இந்தக் காய்ச்சல்கள் திரும்பவும் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

காய்ச்சலைத் தடுக்க...

“வைரஸ் காய்ச்சல் ஒருவருக்கு வந்திருக்கிறது என்றால், அவர் முழுமையாகக் குணமடைய ஓய்வு மிகவும் அவசியம். ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரம் விடுமுறை எல்லாம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இரண்டு, மூன்று நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு, ஓரளவு சரியானவுடனேயே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கடுமையாகப் பணிபுரியும்போது மீண்டும் காய்ச்சல் வந்துவிடுகிறது.

வைரஸ் காய்ச்சல் முழுமையாகச் சரியாக வேண்டுமென்றால், நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை அதிகம் பருக வேண்டும். சத்தான, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். மருத்துவச் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்தாலேபோதும், காய்ச்சல் சரியாகிவிடும்" என்று அடிப்படைகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் எழிலன்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாகவே அதன் பாதிப்புகள் சில மாதங்கள்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்தத்தில் தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் குறைவது, மூட்டு இணைப்புகளில் வலி எனப் பாதிப்புகள் மூலம் வைரஸ் தன் செயல்பாட்டைக் காட்டிக்கொண்டேதான் இருக்கும். காய்ச்சல் சரியான பிறகும் தொடர்ந்து பாதிப்புகள் இருப்பதை ‘போஸ்ட் வைரல் எஃபெக்ட்’ என்று மருத்துவத்தில் கூறுகிறார்கள்.

“உடலில் பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம்” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் எழிலன்.

எழிலன் - அலீம்

பாதிப்புகள் என்ன?

“வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாக்டீரியாவும் சுலபத்தில் தொற்றிவிடும். பாக்டீரியாக்களை அழைத்துக்கொள்ளும் திறன் வைரஸ்களுக்கு உண்டு. இதை மருத்துவத்தில் ‘செகண்டரி பாக்டீரியஸ் இன்ஃபெக் ஷன்’ என்கிறார்கள். இப்போது ஒருவருக்கு ஃபுளூ காய்ச்சல் வந்திருக்கிறது என்றால், பாக்டீரியா தொற்றும் சேர்ந்துகொள்ளும்பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். அதேபோல, சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். எனவே, வைரஸ் காய்ச்சல்களை முழுமையாகச் சரி செய்துகொள்வதே நல்லது.”

அரசு சிகிச்சை

அதேநேரம் காய்ச்சல் சார்ந்த பிரச்சினையில் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பல இடங்களில் சிகிச்சைக்குச் சென்றுவிட்டு, கடைசியாக அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல்களுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்படுகிறது?

“மழைக் காலம்தான் என்றில்லை; பொதுவாக எல்லாக் காலங்களிலும் வைரஸ் காய்ச்சல்களுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை களில் சிறப்பு வார்டு வசதி உண்டு. காய்ச்சலுடன் வருபவர் சொல்லும் அறிகுறிகளை வைத்தே, குறிப்பிட்ட காய்ச்சலாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் கணித்து விடுகிறார்கள்.

எந்தக் காய்ச்சல் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ரத்தப் பரிசோதனை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. இலவசமாக மருந்து, மாத்திரைகளை அரசு வழங்குகிறது. நோயாளிகளுக்குச் சரியான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது” என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி மூளை நரம்பியல் துறை பேராசிரியர் மருத்துவர் எம்.ஏ.எம். அலீம்.

வைரஸ்கள் பலவிதம்

பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் ஏற்பட என்ன காரணம்? எப்படித் தடுப்பது? “பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கிறோம். சளியைத் துப்புகிறோம். இதன்மூலம் பரவும் வைரஸ்கள் சுற்றுப்புறங்களில் கணக்கில் சொல்ல முடியாத அளவுக்குச் சுற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த வைரஸ்கள் எல்லாம் என்ன பாதிப்பை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்ள நம்மிடையே வசதிகள் இல்லை. மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் எல்லாம் ஏதோ ஒரு வைரஸ் மூலம் வருவதுதான். ஆனால், அவற்றைத் துல்லியமாகக் கண்டறிய முடிவதில்லை. வைரஸ்களை அடையாளம் காண இந்தியாவில் புனேவில் மட்டுமே வசதி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதேபோன்ற வசதி தேவை” என்கிறார் எழிலன்.

குழந்தைகள்: தேவை கூடுதல் கவனம்

பொதுவாகக் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளை வைரஸ் காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும். வைரஸ் காய்ச்சல்களில் இருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?

“பொதுவாகக் குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும். குழந்தைகள் தண்ணீரில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள். மழை நீரில் விளையாடுவார்கள். வீட்டுக்கு வந்த பிறகு நன்றாக சோப்பு போட்டுக் கழுவாமல் உணவைச் சாப்பிடுவார்கள். அதன்மூலம் வைரஸ் உடலுக்குள் சென்றுவிடலாம். அதனால் வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம்.

பொதுவாக டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாகும் கொசுக்கள் காலை வேளையில்தான் கடிக்கும். அதனால், பள்ளியில் இருக்கும் போதோ வீட்டில் இருக்கும்போதோ கொசு கடிக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மழை நீரில் விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெருவோரங்களில், தள்ளுவண்டியில் விற்கப்படும் உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடாமல் இருக்கக் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக 1 முதல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எதுவும் தெரியாது. அவர்களுடைய கையையும், கை விரல்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இதைச் சொல்லித் தரவும் வேண்டும்” என்கிறார் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ரவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்