முதுகுவலி ஏன் ஏற்படுகிறது என்று கடந்த வாரம் பார்த்தோம். அதற்கான மருந்து, சிகிச்சை பற்றி இந்த வாரம் பார்க்கலாம். கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்குப் படுக்கையில் நேராக அசைவு இன்றி மல்லார்ந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.
வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள்
உட்காரும்போது நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி, அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ளும் அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது. இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்குச் சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். கால் மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.
உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். தூங்கும்போதும், ஒரு பக்கமாகப் படுக்கும்போதும் முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
குப்புறப் படுக்கக் கூடாது
ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.
படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல், மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்துக்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள். பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.
பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் பொருட்களை அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட்கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இரு கரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிடைக்கும். கார் ஓட்டும்போது உங்கள் கீழ் முதுகு சாய்ந்துகொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று, பின்பு தொடருங்கள்.
உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு
நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்யும்போது முதுகெலும்பு அதிக அழுத்தத்துக்கு உள்ளாகிறது. இதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது இருக்கையை விட்டு இரண்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறையின் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலியால் துடித்துப் போகின்றனர். காரணம் இடைவிடாமல் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டே இருப்பது தான்.
கணினி வைத்தி ருக்கும் மேசையை, வசதிக்கு ஏற்ப ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:
நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் என்றால், அதன் மூலம்கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
கை வைத்தியம்:
தேநீர்: தேவையான பொருள்கள்: மிளகு, கிராம்பு, சுக்கு.
முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டுத் தேநீர் செய்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.
எண்ணெய்: தேவையான பொருள்கள்: வெற்றிலை, தேங்காய் எண்ணெய்.
செய்முறை: வெற்றிலைகளை எடுத்துச் சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி, முதுகு வலி குறையும். வாதநாராயணன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம். வாதநாராயணன் இலை இடுப்பு வலியைக் குணமாக்கும். கொள்ளு பல பிரச்சினைகளைத் தீர்க்கும் இயற்கை உணவுப் பொருள். கொள்ளு ரசம் வைத்துக் குடிக்கலாம்.
ஆயுர்வேதத்தில் பரிசேக சிகிச்சை
தான்யாம்லத்தில் (காடி) தாரை சிகிச்சை செய்தால். இச்சிகிச்சை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும்.
அப்யங்கம் (Massage)
கொட்டஞ்சுக்காதி தைலம், பஞ்சஸ்நேகம் குழம்பு, சிஞ்சாதி தைலம், போன்றவற்றைக் கொண்டு ஆயில் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உபநாக சிகிச்சை
இஞ்சி, பிற மருந்துகளால் பொடிக்கப்பட்ட பொடியை, புளிச்சாறுடன் கலந்து முதுகில் பற்று போடுவது சிறந்தது. ஆமணக்கு இலை, ஊமத்தை காய் அல்லது ஆமணக்கு விதையுடன் எள் சேர்த்து அரைத்துப் பூச்சு போடுவது நல்லது.
விரேசன சிகிச்சை
மலத்தைச் சுத்தி செய்ய நொச்சியிலை சேர்த்து காய்ச்சப்பட்ட ஆமணக்கு எண்ணெயும் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமானது.
பந்தன சிகிச்சை (Bandage)
மேலும் கேரளாவில் முறிவெண்ணெய் போன்ற எண்ணெய்களை இடுப்புப் பகுதியில் வைத்து பந்தனம் (கட்டுதல்) செய்கிறார்கள். மூன்று நாட்களுக்கு traction செய்து வருகிறார்கள்.
வஸ்தி சிகிச்சை
ஆசன வாய் வழியாக அபான வாயுவைச் சிகிச்சை செய்கிற ஆயுர்வேத எனிமாக்கள் எனப்படும் வஸ்தி முறையில், தான்வந்தரம் எண்ணெய் போன்றவற்றை வைத்து செய்வது உண்டு.குடலைச் சுத்தி செய்கிற மூலிகைத் தைலங்களால் ஆன கஷாய வஸ்திக்கு ஏரண்டமூலாதி நிரூஹம் என்று பெயர்.
உள்ளுக்குச் சாப்பிட
இடுப்பு வலிக்கு அபான வாயுவைக் கீழ்முகமாக இயக்குகிற ஆமணக்கு வேர் சேர்ந்த கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர் சேர்ந்த சகசராதி கஷாயம், சிற்றரத்தை சேர்ந்த ராஸ்னசப்தகம் கஷாயம் போன்றவை சிறந்தவை. இதனுடைன் நவக குக்குலு, வெள்ளைப்பூண்டு லேகியம் போன்றவை சிகிச்சையைப் பொறுத்து வைத்தியர்கள் செய்து வருகிறார்கள்.
உணவு முறை
தவிர்க்க வேண்டியவை:
குளிர் உணவு / பானங்களைத் தவிர்க்கவும். குறிப்பாக ஐஸ் கிரீம், குளிர்பானங்கள். பழைய உணவுகள், முளைகட்டிய பீன்ஸ், வாழைப்பழம், சீதாப்பழம், வறுத்த உணவு, கடல் உணவு, தயிர், ஊறுகாய்.
இயற்கை வைத்திய முறை
இயற்கை வைத்திய முறையில், சுடுநீரில் இடுப்புவரை அமிழ்ந்து உட்காருவது வலியைக் குறைக்கும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.
சலபாசனம்
சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையை அதிகரிக்கும்.
ஆயுர்வேதத்தில் 100 க்கு 98 சதவீதம் நல்ல பலன் கிடைத்து வருகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவருவதில்லை. மூத்திரம் அடைபட்டுப் போனாலோ, கால் தொங்கிப் போனாலோதான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ஓய்வெடுத்தல், பின்பு முறையான பயிற்சி செய்தல், அபான வாயுவைச் சீராக வைத்திருத்தல், அமரும் தன்மையைச் சற்று மாற்றிக்கொள்ளுதல், உணவுகளில் சிறிய மாற்றம் போன்றவை அவசியம். ஆயுர்வேதம் மூலம் இடுப்பு சவ்வு விலகுதல் நோயை 98 சதவீதம் குணப்படுத்தலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago