மன்னித்து விடுங்கள் கஃபீல்!

By ந.வினோத் குமார்

தை எழுதிக்கொண்டிருக்கும்போது, பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் இன்னும் ஒரு குழந்தை மூளைத் தொற்றால் இறந்து போயிருக்கலாம். விதியின் மீது அவ்வளவு நம்பிக்கையா என்று கேட்கலாம். நடப்பதைப் பார்க்கும்போது அப்படி நினைக்கவே தோன்றுகிறது. அதற்காக மன்னியுங்கள் கஃபீல்!

உங்கள் பணத்தைச் செலவழித்து, ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினீர்கள் கஃபீல். ஆனால், உங்களையே வேலையை விட்டு நீக்கியிருக்கும் அந்த அரசின் மீது எப்படி நல்லவிதமான நம்பிக்கை பிறக்கும்? அதற்காக அவர்களை மன்னியுங்கள் கஃபீல்!

கடவுளுக்கு நிகராக மருத்துவர்களைக் கருதும் இந்த நாட்டில், கடவுளாக வந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய உங்கள் மீது, ‘தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறார்’, ‘பெண் ஒருவரிடம் பாலியல் வன்முறை செய்தவர்’, ‘ஆக்ஸிஜன் சிலிண்டர்களைத் திருடி விற்றவர்’ என்று பல்வேறு விதமாகப் பழிசுமத்துபவர்கள், இதுவரையில் கடவுளை அல்ல… கல்லைத்தான் கண்டிருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் மக்கள். அதற்காக அவர்களை மன்னியுங்கள் கஃபீல்!

‘குழந்தைகள் இறக்கும் சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்புதான் நான் இந்த மருத்துவமனையைப் பார்வையிட்டேன். அப்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையாக இருப்பது குறித்து என்னிடம் யாரும் சொல்லவில்லை’ என்று நழுவுகிறார் உங்கள் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆனால் அப்படிச் சுட்டிக்காட்டி மருத்துவமனை நிர்வாகம் முன்பு எழுதிய கடிதங்களுக்கு அவர் எடுத்த நடவடிக்கை என்ன என்பதைக் குறித்து எந்த வடநாட்டு ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை. அதற்காக அவர்களையும் மன்னியுங்கள் கஃபீல்!

19CHVAN_KafeelKhan.jpg கஃபீல் கான் right

‘குழந்தை நல மருத்துவராகவும், மூளைத் தொற்றுப் பிரிவின் தலைவராகவும் இருந்த கஃபீல் கான்தான் போதுமான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று சிலர் உங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், கோரக்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராஜீவ் ரவுதேலாவின் விசாரணை அறிக்கையில், நெருக்கடியான நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்காத ‘புஷ்பா சேல்ஸ்’ நிறுவனம், குழந்தைகள் இறந்த ஆகஸ்ட் 10-ம் தேதி விடுப்பில் சென்ற அந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கே.மிஷ்ரா, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய நபரான சதீஷ் குமார் (அவரும் 10-ம் தேதி விடுப்பில் சென்றார்) மற்றும் அந்த மருத்துவமனையின் முதன்மை மருந்தியலாளர் கஜனன் ஜெய்ஸ்வால் ஆகிய நான்கு பேர் மீதுதான் குற்றம் சுமத்தியிருக்கிறது என்பதைப் பலரும் அறியாமல் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை மன்னியுங்கள் கஃபீல்!

ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோக நிறுவனத்துக்கு 70 லட்ச ரூபாய் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக யோகி ஆதித்யநாத் கூறுகிறார். ஆனால் ஆர்.கே.மிஷ்ராவோ, அந்தத் தொகை தொடர்பான கோப்புகள் ‘சிவப்பு நாடா’ முறை காரணமாக, அதிகாரிகள் மட்டத்தில் நகர்த்தப்படவில்லை என்று தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு கூறிவிட்டு, ராஜினாமா செய்திருக்கிறார். அதற்காக அவர்களை மன்னியுங்கள் கஃபீல்!

இறுதியாக, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்து குழந்தைகளைக் காப்பாற்றியதுதான் பலரைப் பதறவைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் மூலம், நமக்குத் தேவை உங்களைப் போன்ற ‘தியாகி’கள் என்பதை மிகவும் தாமதமாகத்தான் இந்துகள் பலரே உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை மன்னியுங்கள் கஃபீல்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா, உங்கள் மீது சமாதானத்தை தவழச் செய்வதாக!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்