சந்தேகம் சரியா 50: நகம் கடிக்கும் பழக்கம் நோயின் அறிகுறியா?

By கு.கணேசன்

னக்குச் சில மாதங்களாக நகம் கடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு நோயின் அறிகுறி என ஒரு ஆங்கில மருத்துவப் பத்திரிகையில் படித்தேன். அதற்கு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்திருந்தனர். அது சரியா?

நீங்கள் படித்த தகவல் முற்றிலும் சரி.

தலைமுடியைக் கோதுவதுபோல், மூக்கைச் சொறிவதுபோல், ஒரு முறை, இருமுறை என எப்போதாவது நகம் கடித்தால், அது நோயின் அறிகுறி இல்லை. ஆனால், நகம் கடிப்பது என்பது விடமுடியாத பழக்கமாகிவிட்டது என்றாலோ, தங்களை அறியாமலேயே நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலோ, என்னதான் முயன்றாலும் நகம் கடிக்காமல் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டாலோ, அது ஓர் உளவியல் பிரச்சினையின் வடிகாலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அதை வெளியேற்றுவதற்கு மூளை பல வழிகளைத் தேடும். அதில் ஒன்று நகம் கடித்தல். இது ஓர் அனிச்சைச் செயல். மனதில் புதைந்திருக்கும் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து, ஆழ்மனதின் கட்டளைப்படி விரல்கள் தானாகச் செயல்படுவதால், நகம் கடிப்பதைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். இம்மாதிரி நிலைமையில் உள்ளவர்களுக்கு உளவியல் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் தேவைப்படும்.

ஏன் வருகிறது?

பெரும்பாலானோருக்கு நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படுவதற்கு உடல் அலுப்பே காரணமாக இருக்கும். எதையும் செய்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாதபோது, வெறுமனே இருக்கும்போது, வெறுத்துப் போயிருக்கும்போது, கவலைப்படும்போது, மனம் பதற்றமாக இருக்கும்போது, ஏதாவது தோல்விகளைச் சந்திக்கும்போது, உணர்ச்சிவசப்படும்போது, நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, ஏமாற்றங்கள் மிஞ்சும்போது, தனக்கு விருப்பமில்லாமல் அடுத்தவரின் கட்டாயத்துக்காகச் செயல்படும்போது, தன்னம்பிக்கையை இழக்கும்போது எனப் பலதரப்பட்ட உளவியல் பிரச்சினைகள் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தூண்டும். பலருக்கும் இம்மாதிரியான பிரச்சினைகள் எளிதாக முடிந்துவிடும். அதனால், நகம் கடிக்கும் பழக்கமும் பிரச்சினை முடிந்தவுடன் மறைந்துவிடும்.

சிலருக்கு இம்மாதிரியான தோல்விகளும் ஏமாற்றங்களும் அச்சங்களும் நீடிக்கும். அப்போது அது மன அழுத்த நோய்க்குப் பாதை அமைத்துவிடும். அதிலிருந்து தற்காலிக விடுதலை பெறுவதற்கான வழியாக, நகம் கடிக்கும் பழக்கம் நீடித்துவிடும். இவர்களால் நகம் கடிப்பதை எளிதில் விட்டுவிடமுடியாது. உளவியல் சிகிச்சைக்குப் பிறகே இதற்குத் தீர்வு கிடைக்கும்.

நோய் காட்டும் கண்ணாடி

நகத்தை நோய் காட்டும் கண்ணாடி என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் பிராணவாயு குறைவு போன்ற பல பிரச்சினைகளை நகங்கள் உடனே வெளிக்காட்டும். எவ்வித பரிசோதனையும் இல்லாமலேயே இம்மாதிரியான நோய்களை எளிதில் இனம் காணமுடியும். எனவே, நகங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

கெரட்டின் எனும் புரதத்தால் ஆன நகங்கள் உயிரற்றவை. இறந்துபோன செல்களின் தொகுப்பே நகங்கள். அதனால்தான் அவற்றைக் கடிக்கும்போதும், நகவெட்டியால் வெட்டும்போதும் வலிப்பதில்லை. வலி இல்லை என்பதால்தான், நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கும் நீடிக்கிறது.

நகம் கடிக்கும் பழக்கம் பெண்களைவிட ஆண்களிடம்தான் அதிகம். காரணம், பெண்கள் தங்கள் நகங்களை அழகுபடுத்துவதில் அதிக அக்கறை செலுத்துவது வழக்கம். அதனால், அவற்றைக் கடிக்க அவர்களுக்கு மனம் வராது. (ஒரு சில பெண்கள் விதிவிலக்காக இருக்கலாம்). அத்துடன் மன அழுத்தத்திலிருந்து விடுபட பெண்கள் வேறு வழிகளைத் தேடுகின்றனர். வளரிளம் பருவத்தில் அநேகம் பேருக்கு இது இருக்கிறது. இந்தப் பழக்கம் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. 100-ல் 35 குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வேறு செயல்களில் ஈடுபடும்போதுகூட பலர் தங்களை அறியாமலேயே நகம் கடிக்கின்றனர்.

 

என்ன பாதிப்பு ஏற்படும்?

நகத்தை அழகுபடுத்த எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ, அதே அளவுக்கு அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் கவனம் தேவை. இல்லாவிட்டால், நகங்கள் உடல் நோய்களுக்கு வாசலாகிவிடும்.

நகம் கடிக்கும் பழக்கத்துக்கு மருத்துவ உலகம் ‘ஆனிகோஃபேஜியா’ (Onychophagia) என்று பெயர் சூட்டியுள்ளது. சிலர் திரும்பத் திரும்ப கை கழுவுவதுபோல், நகம் கடிக்கும் பழக்கமும் அடிக்கடி செய்யத் தூண்டும் செயலாகக் கருதப்படுவதால், ‘ஓ.சி.டி’ (Obsessive Compulsive Disorder – OCD) எனும் உளவியல் பிரச்சினையோடு இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

புகைபிடித்தலைப் போல் நகம் கடிக்கும் பழக்கமும் ஒரு கெட்டப் பழக்கம். அது நாகரிகம் குறைந்த செயலாகவும் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. குடலில் புழுக்கள் தோன்றுவதற்கு நகம் கடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், வாந்தி பேதி, சீதபேதி, அஜீரணம், குடல் நோய்கள் போன்றவை ஏற்படவும் இந்தப் பழக்கம் வழி அமைக்கிறது. சிலர் மிகவும் தீவிரமாக நகம் கடித்து, கடித்த இடத்தில் புண் ஏற்பட்டு, ரத்தம் கசியும் அளவுக்கு பிரச்சினையைப் பெரிதாக்கி விடுகின்றனர். அப்போது அங்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. நகத்தின் முனையில் தசை பழுதடைந்து, விரிசல் விழுந்து பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடுகிறது.

என்ன செய்யலாம்?

நகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஒட்ட வெட்டிவிட வேண்டும்.

நகம் கடிக்கத் தோன்றும்போது, கைவிரல்களுக்கு வேறு வேலை கொடுத்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, செல்போனை நோண்டுவது, பேனாவால் எழுதுவது போன்ற வேலைகளைச் செய்யலாம்.

நகத்தின்மீது துவர்ப்புச் சுவை கொண்ட வர்ணத்தைப் பூசிக்கொள்ளலாம்.

அக்ரலிக் செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்ளலாம்.

நகத்தில் பிளவுகள், தொற்றுகள் போன்றவை காணப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தட்டச்சு செய்வது, கணினியில் வேலை பார்ப்பது, வாகனம் ஓட்டுவது போன்றவை சிரமமாக இருக்கும் அளவுக்கு நகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மனதை வாட்டும் பிரச்சினைகளுக்கு உளவியல் தீர்வு காண வேண்டும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்