தேசிய மருத்துவர்கள் நாள் - ஜூலை 1
ஜூலை 1 - நாடு முழுவதும் ‘தேசிய மருத்துவர்கள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவர்களின் நிகரற்ற, தன்னலமற்ற சேவையை அனைவரும் உணர்ந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அந்த நாள் கருதப்படுகிறது. இந்த நாளில் தேசிய அளவிலும், தமிழக அளவிலும் பல்வேறு சாதனைகளைச் செய்த முன்னோடி மருத்துவர்கள் 10 பேரைப் பார்ப்போம்:
இந்திய அளவில்…
பி.சி. ராய்
பிதான் சந்திர ராய் என்ற பெயரின் சுருக்கம்தான் பி.சி.ராய். 1882 ஜூலை 1 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்த இவர், அம்மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக 14 ஆண்டுகள் பதவி வகித்து பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
முன்னதாக, பெரிய பொருளாதார வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் வெறும் ரூ.1,200 உடன் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அங்கு புனித பார்த்தலோமோவ் மருத்துவமனையில் உயர்கல்வி கற்கவே சென்றிருந்தார். அந்த மருத்துவமனையின் தலைவரோ ஆசியாவிலிருந்து வந்த ஒருவரை, மாணவராகச் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ராயின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சுமார் 30 முறை அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டும், ராயின் மன உறுதி குலையவில்லை. கடைசியில் மாணவராகச் சேர்ந்து இரண்டு ஆண்டு மூன்று மாதங்களில் எம்.ஆர்.சி.எஸ்., எஃப்.ஆர்.சி.எஸ். பட்டங்களைப் பெற்றார். 1911-ம் ஆண்டு தாயகம் திரும்பி தன் சேவையைத் தொடங்கினார். அவரின் பிறப்பும் இறப்பும் ஒரே தேதியில் நிகழ்ந்தன. ஆம், 1962 ஜூலை 1 அன்று காலமானார். அவர் பிறந்த நாளே ‘தேசிய மருத்துவர்கள் நாள்’.
மதுசூதன் குப்தா
1800-ம் ஆண்டு பிறந்த இவர், இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையை முதலில் கற்றவர்களில் ஒருவர். ஆங்கில மருத்துவ முறையைக் கற்க பிரேதப் பரிசோதனை முக்கியமானது. அது சார்ந்த இந்திய வரலாறு இவரிடமிருந்துதான் தொடங்குகிறது. பிரேத பரிசோதனை செய்வதற்குப் பயிற்சி பெற்ற முதல் இந்திய மருத்துவர் இவர். 1836 அக்டோபர் 28 அன்று இது நிகழ்ந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையைப் பின்பற்றிய வைத்தியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஆங்கில மருத்துவ முறைப்படி பிரேதப் பரிசோதனை செய்தது 180 ஆண்டுகளுக்கு முன் நிச்சயமாக இமாலய சாதனைதான். அவருடைய அந்தச் சாதனையைப் பாராட்டி, அன்றைய பிரிட்டிஷ் அரசு வானை நோக்கி 50 குண்டுகள் முழங்கி கவுரவித்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவராக மட்டுமல்லாமல், ‘அனாட்டமிஸ்ட்ஸ் வதி மேகம்’ எனும் மருத்துவ நூலை வடமொழியிலும், ‘லண்டன் பார்மகோபியா’ எனும் நூலை வங்க மொழியிலும் மொழிபெயர்த்து, சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்திருக்கிறார் இவர்.
மேரி பூனென் லூகோஸ்
1886 ஆகஸ்ட் 2 அன்று கேரளத்தில் பிறந்தவர் மேரி பூனென் லூகோஸ். மகப்பேறியல் மருத்துவரான இவர், இந்தியாவின் முதல் ‘சர்ஜன் ஜெனரலும்’கூட. திருவனந்தபுரத்தில் இருந்த மகாராஜா கல்லூரியில் அறிவியல் பாடப் பிரிவுகளில் படிக்க பெண்கள் அந்தக் காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதனால் வரலாற்றுத் துறையில் இளங்கலை படித்தார். அந்தக் கல்லூரியில் படித்த முதல் பெண் என்பது மட்டுமல்லாமல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து மருத்துவம் படிக்கும் விருப்பம் அவருக்கு உண்டானது. லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்ததன் மூலம், மருத்துவப் பட்டம் பெற்ற முதல் கேரளப் பெண் என்ற புகழைப் பெற்றார். சர்ஜன் ஜெனரலாகப் பதவியேற்றவுடன், நாகர்கோயிலில் காசநோய் மையத்தை அவர் உருவாக்கினார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் காசநோய் மையங்களில் இதுவும் ஒன்று. இந்த மையம்தான் பிற்காலத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியாக வளர்ந்தது.
சுபாஷ் முகோபாத்யாய
அன்றைய பிஹார் மாநிலம் ஹசாரிபாக் எனும் இடத்தில் 1931 ஜனவரி 16 அன்று பிறந்தார் சுபாஷ் முகோபாத்யாய். உலகின் இரண்டாவது, இந்தியாவின் முதலாவது ‘சோதனைக் குழாய் குழந்தை’ துர்காவை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். ‘இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன்’ (ஐ.வி.எஃப்.) எனும் ஆய்வுக்கூடச் சோதனை முறை கருக்கட்டல் அடிப்படையில் செயற்கைக் கருவை அவர் உருவாக்கினார். இந்தியாவில் இப்படி ஒரு ஆய்வைச் செய்வதற்கான வசதிகள் இல்லாததால், இங்கிலாந்தில் இந்தச் சோதனையை மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக அவருடைய இந்தச் சாதனையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. தன்னுடைய ஆய்வு முடிவுகளை இதர மேலை நாட்டு விஞ்ஞானிகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவாறு, பிற நாடுகளுக்குச் செல்ல அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால் 1981 ஜூன் 19 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ஏக் டாக்டர் கி மவுத்’ எனும் பாலிவுட் படமொன்று வெளியாகியுள்ளது.
விநாயக் சென்
1950 ஜனவரி 4 அன்று பிறந்த இவர், குழந்தைகள் நல மருத்துவர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்.) துணைத் தலைவராக இருக்கிறார். நக்ஸலைட்டுகள் அதிகமாக உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி, அரசை விமர்சித்தார். அதன் பலனாக, 2007-ம் ஆண்டு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டார். பின்னர் ராய்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில், 2011-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் விநாயக் சென் செய்த மேல்முறையீடு, இன்னமும் நிலுவையில் உள்ளது. அவருடைய பணிகளுக்காக ‘காந்தி சர்வதேச அமைதி விருது’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழக அளவில்…
டாக்டர் ரங்காச்சாரி
ரங்காச்சாரி என்று பொதுவாகச் சொன்னால் யாருக்கும் தெரியாது. டாக்டர் ரங்காச்சாரி என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு அவர் நேசித்த தொழில், அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது. கும்பகோணத்தில் உள்ள சருக்கை என்ற கிராமத்தில் 1882 ஏப்ரல் 28 அன்று பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். அன்றைய சென்னை மாகாணம் பரந்து விரிந்திருந்த நிலையில் நிறைய நோயாளிகளைப் பார்த்துத் தன்னுடைய கடமையைச் செய்ய நினைத்தார். அதற்காக ஒரு சிறிய விமானத்தை வாங்கிப் பறந்து சென்று, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். இதனால் அவருக்கு ‘பறக்கும் டாக்டர்’ என்று பெயர் வந்தது. இவரின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ‘டாக்டர் ரங்காச்சாரி’ என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதியுள்ளார்.
முத்துலட்சுமி ரெட்டி
தமிழகத்தில் தேவதாசி முறை ஒழியக் காரணமாக இருந்ததற்காக அறியப்படும் முத்துலட்சுமி ரெட்டி, அடிப்படையில் ஒரு மருத்துவர். 1886 ஜூலை 30 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். அந்தக் காலத்தில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட மிகச் சில பெண்களுள் ஒருவர். இன்று சென்னை அடையாறில் உள்ள புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனை உருவாகக் காரணமாக இருந்தவர். மருத்துவத் தொழிலோடு சட்டப்பேரவைத் துணைத் தலைவராகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
ஏ.எல். முதலியார்
ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் என்ற பெயரின் சுருக்கமே ஏ.எல். முதலியார். 1887 அக்டோபர் 14 அன்று கர்னூலில் பிறந்த இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். ‘கிளினிக்கல் ஆப்ஸ்டெட்ரிக்ஸ்’ என்ற தலைப்பில் மகப்பேறு மருத்துவம் குறித்து இவர் எழுதி 1938-ம் ஆண்டு வெளியான புத்தகத்தை, இன்றுவரையிலும் மருத்துவ மாணவர்கள் படித்துப் பின்பற்றி வருகிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நீண்ட காலத் துணைவேந்தராகவும் (சுமார் 27 ஆண்டுகள்) சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றிய இவர், உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
செ.நெ.தெய்வநாயகம்
அலோபதி மருத்துவர்கள் நோயாளிகள் மீது ஆதிக்கத்தை கொண்டிருந்த வேளையில், அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவத்தை இணைத்துப் பலரை நோயிலிருந்து விடுவித்தவர் செ.நெ.தெய்வநாயகம். 1942 நவம்பர் 15 அன்று பிறந்த இவர், சென்னை மருத்துவக் கல்லூரியிலும் ஸ்காட்லாந்திலும் படித்தவர். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சக நோய்த் துறையை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. படித்தது அலோபதியாக இருந்தாலும், பின்னாட்களில் ஆர்வம் காரணமாக சித்த மருத்துவத்திலும் ஹெச்.ஐ.வி. சிகிச்சையிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அமையக் காரணமாக இருந்தார். அரசு மருத்துவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, ‘இந்திய நலவாழ்வு நல்லறம்’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் சித்த, ஆங்கில மருத்துவங்களின் கூட்டு மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடர்ந்தவர்.
பெ. நம்பெருமாள்சாமி
நம்பெருமாள்சாமி, நாட்டின் மிக முக்கியமான கண் மருத்துவர். நீரிழிவு விழித்திரையில் நிபுணத்துவம் பெற்றவர். 1971-ம் ஆண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக குறைப்பார்வை உதவி மையத்தைத் தொடங்கினார். 2010-ம் ஆண்டில் ‘டைம்’ இதழின் உலகின் செல்வாக்குப் பெற்ற 100 பேர் பட்டியலில் இடம்பெற்றவர். தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவராக இருக்கிறார். கண் மருத்துவத்தை எளியோரும் அணுகும் வகையில் மாற்றியதற்காகவும், விரைவாக மருத்துவ சேவை தருவதற்காகவும் இவருடைய பணிகள் அறியப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago