சந்தேகம் சரியா 42: உடல் எடையைக் குறைக்க மாத்திரை சாப்பிடலாமா?

By கு.கணேசன்

எனக்கு உடல் பருமன் உள்ளது. ஒரு விளம்பரத்தில் பார்த்த பிரபலமான மாத்திரையை ஆன்-லைனில் வாங்கி உட்கொண்டு வருகிறேன். என் மனைவி, அந்த மாத்திரையால் பக்க விளைவுகள் வரும் என்று எச்சரிக்கிறார். அவர் சொல்வது சரியா?

உங்கள் மனைவி சொல்வது சரிதான். உடல் எடையைக் குறைக்கும் மாத்திரைகளால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்மைதான். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை உட்கொள்வது தவறு.

மாத்திரை என்ன செய்கிறது?

உடல் எடையைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பொதுவாக மூன்று வழிகளில் வேலை செய்கின்றன. ஒன்று, பசியைக் குறைக்கின்றன. இதனால், நாம் சாப்பிடுவது குறைகிறது. இரண்டாவதாக, குடலில் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுவதை அவை தடுக்கின்றன. இதனால், கொழுப்பு உடலில் சேருவது குறைகிறது. மூன்றாவதாக, எந்நேரமும் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகின்றன. இதனால் அதிகம் சாப்பிட முடிவதில்லை. நாம் குறைந்த உணவை சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிவிடுகிறது. இம்மாதிரியான காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

ஒருவர் எடைக் குறைப்பு மாத்திரையை உட்கொள்வதற்கு முன்னால், அவருடைய உடல் பருமன் அடைந்திருப்பதற்கான அடிப்படைக் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் காரணத்தைக் களைவதற்கு சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக, ஒருவரின் பி.எம்.ஐ. (BMI) 30-க்கு மேல் இருந்தால்தான் உடல் எடைக் குறைப்பு மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

பக்க விளைவுகள் என்னென்ன?

இந்த மாத்திரைகள் குடலில் இயங்குவதால் வயிறு உப்புசம், வாய்வு சேருதல், வயிற்றில் இரைச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகள் ஆரம்பத்தில் தோன்றும். வாய் உலர்வது, மலச்சிக்கல், லேசான தலைவலி, கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளும் அடிக்கடி ஏற்படும். போகப்போக, கல்லீரலை இவை தாக்கும். அப்போது செரிமான நீர்கள் சுரப்பது குறையும்.

இதன் விளைவால், உணவுச் செரிமானம் ஆவது பாதிக்கப்பட்டு, கொழுப்புச் சத்து மட்டுமன்றி, மற்ற சத்துகளும் உடலுக்குக் கிடைக்காமல் போகும். இதனால், உடல் சோர்வடையும். வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாது. நீரிழிவு உள்ளவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டால், அடிக்கடி ரத்தச் சர்க்கரை குறைந்து மயக்கம் வரும்.

மேலும், இந்த மாத்திரைகளை உட்கொண்டால், இதய நோய், உயர் ரத்தஅழுத்தம், மன அழுத்தம், வலிப்பு நோய், உறக்கமின்மை போன்றவற்றுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளின் செயல்பாட்டையும் பாதிக்கும். வைட்டமின் மாத்திரையைக்கூட எடைக் குறைப்பு மாத்திரைகளை உட்கொள்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக உட்கொண்டால்தான், பலன் தரும். எடைக் குறைப்பு மாத்திரையோடு எந்த மாத்திரையையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளக் கூடாது. அப்படி உட்கொண்டால், எந்த மாத்திரையும் பலன் தராது.

யார் உட்கொள்ளக்கூடாது?

குழந்தைகள், கர்ப்பிணிகள், கர்ப்பத்துக்குத் தயாராகும் பெண்கள், பாலூட்டும் அம்மாக்கள், முதியவர்கள் ஆகியோர் எடைக் குறைப்பு மாத்திரைகளைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. ஏற்கெனவே, உயர் ரத்தஅழுத்தம், இதயநோய், வலிப்பு நோய், மன நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.

அது மட்டுமில்லாமல் எடைக் குறைப்பு மாத்திரை எதுவாக இருந்தாலும் உட்கொள்ளத் தொடங்கிய 3 மாதங்களில் 5 சதவீதம்கூட எடை குறையவில்லை என்றால், அதற்குப் பிறகு அதை உட்கொள்வது வீண். ஏனென்றால், இந்தக் காலகட்டத்துக்குள் பலன் கொடுக்காத மருந்து, அதற்குப் பிறகு கண்டிப்பாக பலன் கொடுக்காது.

இன்னொன்று, எடைக் குறைப்பு மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியின் அவசியத்தையும் கட்டாயம் கூறுவார்கள். அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். 'மந்திரம் போட்டு மாங்காய் பறிக்கலாம்' என நினைப்பது எவ்வளவு தவறோ, அந்த அளவுக்கு எடைக் குறைப்பு மாத்திரையை உட்கொண்டால் உடல் எடை குறைந்துவிடும் என்று நம்புவதும் தவறுதான். எடையைக் குறைப்பதில் மாத்திரைகளின் பங்கு 20 சதவீதம் என்றால், மீதி 80 சதவீதம் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் உண்டு. இந்த 20 சதவீதப் பலனுக்காக எடைக் குறைப்பு மாத்திரையை மட்டும் உட்கொண்டு, பக்க விளைவுகளைப் பரிசாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

தைராய்டு பிரச்சினை, இரண்டாம் வகை நீரிழிவு போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்பட்டிருக்கிறது என்றால், முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். உடல் பருமனுக்குக் காரணம் எதுவானாலும், அவரவர் உடல் எடைக்குத் தேவைப்படும் கலோரிகளைக் கணக்கிட்டு, ஆரோக்கிய உணவுத்திட்டம் ஒன்றைத் தயாரித்து, அதற்கேற்ப உணவு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமாக, கொழுப்புள்ள உணவைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பண்டங்களையும் நொறுக்குத் தீனிகளையும் ஓரங்கட்ட வேண்டும். மென்பானங்கள், குளிர்பானங்கள், மது அருந்துவதை நிறுத்த வேண்டும். பகல் தூக்கத்தைக் கைவிட வேண்டும்.

தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை முறைப்படி தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின்பற்றினால்தான் எடை குறையும். இதற்கு அதிகம் பொறுமையும் வேண்டும்.

(அடுத்த வாரம்: மாரடைப்புக்கு பயோமார்க்கர் பரிசோதனை அவசியமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்