உண்மையான சித்த மருத்துவர் யார்?

By டாக்டர் வி.விக்ரம்குமார்

நம்மைச் சுற்றி அனைத்துத் துறைகளிலும் போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். போலிகளால் விபரீதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த விபரீதங்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டால், பாதிக்கப்படுவது எளிதில் மீட்க முடியாத நம் உடலின் ஆரோக்கியம். மற்ற மருத்துவப் பிரிவுகளைப் போலவே, சித்த மருத்துவத்திலும் முறையான பயிற்சி பெறாமல், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள். இந்தப் போலி மருத்துவர்களை அடையாளம் காண்பது எப்படி?

தொலைக்காட்சியில் தோன்றி, ’நான் அனைத்து நோய்களையும் குணப்படுத்துவேன், என்னால் எல்லாமே முடியும்… சித்தர்களின் அருள் எனக்கு இருக்கிறது’ என்று கதையை அள்ளிவிடுபவர்களைப் பார்த்திருக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், மனவளம் குன்றிய குழந்தை, அவர்கள் குடும்பத்தையும் கேமரா முன் நிற்க வைத்து, உள்ளூர் கேபிள் டிவி அலைவரிசைகளில் விளம்பரம் தேடிக்கொள்ளும் மருத்துவர்களையும் பார்க்கலாம். நோய் கண்டவரின் ரகசியங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியிடக் கூடாது என்பது ’அடிப்படை மருத்துவ நெறிமுறை’. ஆனால், இவர்களோ எந்த நெறிமுறையையும் பி்ன்பற்றுவதில்லை.

பாலியல் மாஃபியா

நமக்குத் தெளிவில்லாத சாதாரண பாலியல் பிரச்சினைகளுக்கு ‘தொலைக்காட்சியில் ரொம்ப நாளா பேட்டி கொடுக்குற மருத்துவர்கிட்ட போனாதான் சரியாகும்’ என்று நம்புவது மூடத்தனம். முறையான மருத்துவத்தால் பாலியல் பிரச்சினைகளை எளிமையாக குணப்படுத்த முடியும். இரவு பத்து மணிக்கு மேல் சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுபவை மருத்துவ நிகழ்ச்சியா அல்லது ஆபாச நிகழ்ச்சியா என்று பிரித்தறிய முடியாத வகையில் உள்ளன.

நம் சமூகத்தில் இளம் வயதிலேயே மனதில் படிந்துவிடுகிற பாலியல் தொடர்பான பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் மாஃபியா கூட்டம் இது. பதின் வயதுகளில் தோன்றும் பாலியல் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வழி நம் நாட்டில் முறைப்படி இல்லாததே, இந்தக் கூட்டத்திடம் இளைஞர்கள் சிக்குவதற்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது.

விளம்பரப் போலிகள்

பள்ளி இறுதி வகுப்பைக்கூடத் தொடாமல் சுயமாக ‘மருத்துவன்' என்று அறிவித்துக்கொண்டு, போலி மருத்துவம் பார்ப்பவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள். மாதம்தோறும் குறிப்பிட்ட நாளில் லாட்ஜ், மண்டபம் என சுழற்சி முறையில் திக் விஜயம் செய்யும் ஆசாமிகளும் இதற்குக் குறைந்தவர்கள் அல்ல.

‘மூலம், பவுத்திரம், செக்ஸ் தொந்தரவுகள் குணமாக அணுகவும்’ என்ற விளம்பரத்தைக் கொண்ட பிரசுரங்கள் பேருந்து நிலையங்கள், குட்டிச் சுவர்கள், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றை ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்திருக்கலாம். இதுபோன்று விளம்பரம் செய்பவர்கள் முறைப்படி மருத்துவம் கற்றவர்கள் அல்ல.

‘பத்து மணி நேரத்தில் வெண்புள்ளி நோயைக் குணப்படுத்துவோம். உலகிலேயே எங்களிடம் மட்டும்தான் இந்த அபூர்வ மருந்து இருக்கிறது’ என்று எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத விளம்பரங்களும் ஆபத்தானவையே. முதலில் வெண்புள்ளி என்பது ஒரு நோயல்ல, ஒரு குறைபாடு.

சில வருடங்களாகக் குழந்தையின்மையைக் குறிவைத்து சில போலிகள் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு வேலைகளை கிராமங்களில் அரங்கேற்றுகின்றனர்.

போலிகளின் பரிமாணங்கள்

மருந்து விற்பனை அடிப்படையில் போலி மருத்துவர்களை சில வகைகளில் இனம் பிரிக்கலாம். நூறு ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, விவரம் அறியாத மக்களிடம் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து ஏமாற்றுபவர்கள் ஒரு வகை.

மூட்டுவலிக்கு ஆயிரம் ரூபாய் மருந்து, வயிற்றுப் புண்ணுக்கு இரண்டாயிரம் ரூபாய் மருந்து, தலைவலிக்கு மூவாயிரம் ரூபாய் மருந்து என டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொண்டு தொலைக்காட்சியில் விற்பனை செய்யும் ‘கோட்டு சூட்டு’ ஏமாற்றுக்காரர்கள் வேறொரு ரகம். சித்த மருந்துகளை 15 நாள் உட்கொள்வதற்கு ரூ. 10,000, 20,000 என விற்கும் நபர்கள் எப்படி மருத்துவர்களாக இருக்க முடியும்? வியாபாரிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இப்படி சித்த மருத்துவத்தின் மகிமையைக் கெடுப்பவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் வலம்வருகிறார்கள்.

விபரீதம் வேண்டாம்

ஒரு நோய் என எடுத்துக்கொண்டால், சித்த, ஆயுர்வேதம் என மரபு மருத்துவத்திலும் சரி, ஆங்கில மருத்துவத்திலும் சரி, நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் திட்டவட்டமாக உள்ளன. ஒரு நோயாளியை நேரில் பார்த்து, அறிகுறிகளைக் கேட்டறிந்து, அடிப்படையைத் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பதே முழுமையான தீர்வைக் கொடுக்கும். அதை விடுத்து, நோய் கண்டவரை நேரில் பார்க்காமல், பொத்தம்பொதுவாக ‘இந்த நோய்க்கு இந்த மருந்து சாப்பிடுங்க. கண்டிப்பாக குணமாயிடும்’ என்று தொலைபேசி மூலம் சிகிச்சை தரும் போலிகளை எப்படி நம்ப முடியும்?

போலி மருத்துவர்களால் பணமும் காலமும் விரயமாகும். தேவையற்ற உடல் உபாதைகள் தலைதூக்கும். குறிப்பிட்ட காலத்தில் தீர்த்திருக்க வேண்டிய நோய், பல்வேறு பரிமாணங்களை எடுப்பதற்கான சாத்தியமும் உண்டு. சமீபகாலத்தில் போலி மருத்துவர்களின் விபரீத நடவடிக்கையால் சில நோயாளிகள் மரணத்தையும் விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

யாரை நம்பலாம்?

சரி, இப்படி பல்வேறு வடிவங்களில் போலி சித்த மருத்துவர்கள் உலவுகிறார்கள். அப்படியானால், நமது மரபு மருத்துவ முறைப்படி சித்த மருத்துவம் பார்க்கும் மருத்துவரை எப்படிக் கண்டறிவது? சில எளிமையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும்.

ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவுகள் உண்டு. அங்கிருக்கும் சித்த மருத்துவர்களை அணுகலாம். இதைப் பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை.

நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே முறைப்படி படித்துப் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் இருப்பார்கள். இதுபோல சித்த மருத்துவத்தின் நுணுக்கங்களையும் தத்துவங்களையும் கற்று, சித்த மருத்துவ சிகிச்சை தரும் பட்டம் பெற்ற மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்களைப் பற்றி சுற்றுவட்டாரத் தில் விசாரித்தாலே தெரிந்துவிடும்.

ஒருவேளை ஒருவரது சிகிச்சை, அணுகுமுறை குறித்து உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அவர்களுடைய மருத்துவச் சான்றிதழையும் பதிவு எண்ணையும் கேட்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. சான்றிதழ் பற்றி விசாரிக்கும்போது, போலி மருத்துவர்களால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. இந்த இடத்தில் பாரம்பரியமாக, முறையாக சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சிலரை பிரித்துப் பார்க்க வேண்டும். மரபுத்தொடர்ச்சியும், தொடர்ச்சியான மக்கள் அங்கீகாரமும் பெற்றவர்கள் போலி மருத்துவர்கள் பட்டியலில் சேர மாட்டார்கள்.

போலி மருத்துவர்களால் நமது மரபு மருத்துவமான சித்த மருத்துவத்தின் பெருமை சிதைக்கப்படுகிறது. சித்த மருத்துவம் நெடிய மரபையும் வளத்தையும் கொண்டது. தனித்துவம் மிக்கது. அதன் சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிக்கும்போது இதை உணர முடியும்.

விளம்பரங்களையும் வெற்று அலங்காரங்களையும் நம்பி ஏமாற வேண்டாம். மருத்துவ சிகிச்சை என்பது விலைமதிப்பில்லா உயி ரைக் காப்பது, உயிரை மேம்படுத்துவது. இதை மனதில்கொண்டு செயல்பட்டால் மட்டுமே போலிகளை வளரவிடாமல் தடுக்க முடியும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்