மரபு மருத்துவம்: காலை நேரம் நம் கையில் இருக்கிறதா?

By டாக்டர் வி.விக்ரம்குமார்

யாருடைய ஒத்துழைப்பும் இன்றித் தினமும் அதிகாலையில் உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்துகொண்டிருந்த மனித உடலின் உட்கடிகாரம் (Biological clock) இன்றைக்குப் பழுதடைந்து கிடக்கிறது. அன்றைய ‘டைம்-பீஸ்’ தொடங்கி இன்றைய செல்போன் அலாரம்வரை சூரிய உதயத்துக்கு முன் மனிதர்களை எழுப்பச் சப்தத்துடன் முயற்சித்துத் தோற்றுப் போகின்றன. கடைசியில் அலாரங்கள் மெளனித்துவிடுன்றன!

அதிகாலையிலேயே விழித்து நலமுடன் வாழ்ந்துவந்த நம் முன்னோரின் பழக்கத்தைக் கைவிட்டு, பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்துக் கொடுத்துவிட்டோம். அதிகாலை விழிப்பின் பின்னணியில், நோய்களைப் போக்கும் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது.

’வைகறை யாமம் துயிலெழுந்து’ எனத் தொடங்கும் ஆசாரக்கோவை பாடலும், ‘வைகறை துயிலெழு’ என்ற ஆத்திச்சூடியும் அதிகாலையில் விழிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இரவை பகலாக மாற்றி பின்னர் அதிகாலையில் உறக்கத்தைத் தழுவத் துடிக்கும் இன்றைய நவீன சமுதாயத்துக்கு ஆரம்பத்தில் இது சற்றே கடினமாக இருந்தாலும், பழகிவிட்டால் கிடைக்கும் பலன்களோ ஏராளம்.

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் (சூரிய உதயத்துக்கு முன்) தூக்கத்திலிருந்து எழுவதால், உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும். தினமும் கண்விழிக்கும் நேரத்தை, பிரம்ம முகூர்த்தமான விடியற்காலையில் தொடங்கினால், அந்த நாள் முழுவதுமே சிறப்பாக அமையும்.

“புத்தி யதற்குப் பொருந்து தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் பித்தொழியும்

தாலவழி வாதவித்தந் தந்தநிலை மன்னுமதி

காலைவிழிப் பின்குணத்தைக் காண்”

என விடியற்காலையில் விழிப்பதன் நன்மைகளை விளக்கும் சித்தர் தேரையரின் பாடல், பல்வேறு அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கிறது.

காலையில் அதிகச் சப்தமின்றிக் காணப்படும் சூழலும், இனிமையான காற்றும், ரம்மியமான இயற்கையின் அழகு உறக்கம் கலையும் விந்தையும் மனதுக்கு ஆத்மச் சந்தோஷத்தைத் தரும். இதனால் குழப்பங்கள் இல்லாத தெளிவான மனநிலை உண்டாகும். புத்திக்குத் தெளிவை உணர்த்தும் சுத்தமான நரம்பின் துவாரத்தில் இருக்கும் நீர், கலக்கமில்லாமல் பரிசுத்தமாக இருக்கும் என்று சித்த மருத்துவ உடலியலைத் தேரையர் விளக்குகிறார். உரோதர நரம்பு (Vagus nerve) என்னும் பத்தாவது கபால நரம்பின் செயல்பாட்டை (Tenth Cranial nerve) அன்றே அவர் சுட்டிக்காட்டி இருப்பதாகக் கொள்ளலாம். உரோதர நரம்பானது, நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்பதற்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

நிலவின் தன்மையால் அதிகாலையில் பூமி குளிர்ந்திருக்கும். வளர்சிதை மாற்றங்கள், பல்வேறு செயல்பாடுகள் காரணமாக உடலில் அதிகரித்த பித்தம் இதன்மூலம் குறையும். உடலுக்கு ஆதாரமாக விளங்கும் வாத, பித்த, கபமாகிய உயிர்தாதுகள் தங்களுடைய நிலையிலிருந்து மாறும்போது நோய் உண்டாகும் என்கிறது சித்த மருத்துவத் தத்துவம். அதிகாலையில் விழிப்பதால், வாத, பித்த, கபமாகிய மூன்று உயிர்தாதுகளும் திடமாக நிலைபெற்று, நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது தேரையரின் வலியுறுத்தல்.

ஆராய்ச்சி முடிவு சொல்லும் உண்மை

அதிகாலையில் விழிப்பவர்களிடம் நேர்மறை எண்ணங்கள், எளிதாகத் திருப்தியடையும் மனப்பான்மை, வாழ்வின் மீது அதிக நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதிகாலையில் எழுந்து படித்த குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிடுகிறது. இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்களுக்கு ‘சோர்வுற்ற மனநிலை’ (Depression) எனும் மனநோய் வருவதற்கான சாத்தியம், அதிகாலையில் துயில் எழுபவர்களைவிட மூன்று மடங்கு அதிகம் என ‘The Psychiatry and Clinical Neurosciences’ எனும் நூலில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அசதியைத் தவிர்க்க

சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுவதால், நம் அன்றாட பணிகளைக் கவனிக்கக் கூடுதல் அவகாசம் கிடைக்கும். உடற்பயிற்சிகள் செய்யத் தகுந்த காலமாகக் காலை வேளை அமைவதால், உடல் உறுப்புகளும் உற்சாகம் பெறும். சூரிய நமஸ்காரம் போன்ற யோகப் பயிற்சிகள் செய்ய அதிகாலை வேளையே சிறந்தது. மேலும் உடலுக்குச் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் உண்டாகும்.

தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் அதிகாலையில் விழிக்கும் முறையைப் பின்பற்றிவந்தால், இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். அதிகாலையில் எழுவதற்கு, இரவு ஒன்பது முதல் பத்து மணிக்குள் உறங்கச் செல்வதும் அவசியம்.

கதிரவன் உதித்த பின் எழுவதால் உடலுக்கு அசதியும், சோம்பலும், மயக்கமும் ஏற்படும். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் பகலுறக்கமும் உண்டாகும். எனவே, நம் மரபணுக்களில் பதிந்திருக்கும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மீட்டெடுத்து உற்சாகமான சமூகத்தை உருவாக்குவோம்!



காலை கண் விழித்தால் கிடைக்கும் பலன்கள்

# நள்ளிரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணிக்கு உறங்கிவிட்டு, அதிகாலையில் கண்விழிக்க முயற்சி செய்தால் கண் எரிச்சல், தலைபாரம், சுறுசுறுப்பின்மை போன்றவை உண்டாகும். வயதைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேர இரவு உறக்கத்துக்குப் பிறகு, அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

# தினமும் அதிகாலையில் எழுந்து மலம், சலம் கழிக்கும் பழக்கத்தை முறைப்படுத்திக்கொண்டால், ‘அபான வாயுவின்’ செயல்பாடு சீரடைந்து உடல் உபாதைகள் வராமல் தடுக்கப்படும்.

# காலையில் தாமதமாகக் கண் விழிப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி, பீனிசம் (சைனசைடிஸ்) போன்ற நோய்கள் அதிகளவில் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால், தேவையான அளவுக்கு இளம் வெயிலை உடல் கிரகித்துக்கொள்ளும்.

# குழந்தைகளுக்குத் தொடக்கம் முதலே விடியற்காலையில் எழும் பழக்கத்தைப் பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பிற்காலத்திலும் மேம்படும்.

# பேசாத குழந்தைகளை விரைவாகப் பேச வைக்க, அதிகாலையில் பயிற்சி கொடுப்பது கிராமங்களில் நடைமுறையிலுள்ள மரபு வைத்தியம்.

# நினைவாற்றலை அதிகரிக்க மருந்துகளைத் தேடி அலைவதற்குப் பதிலாகத் தினசரி அதிகாலையில் கண் விழித்தால் போதும். மூளை அணுக்கள் சுறுசுறுப்படையும், நினைவுத் திறன் அதிகரிக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்