புரதச்சுரங்கம் 7: தட்டைப்பயிறு- கொழுப்பைக் குறைக்கும் பயறு

By ஆதி வள்ளியப்பன்

தட்டைப்பயறு அல்லது காராமணி என்றழைக்கப்படும் பயறு வகை, நமது கிராமங்களில் மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவலாகப் பயிரிடப்படும்,அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அது அக்மார்க் உண்மை.

தட்டைப்பயறைத் தனியாகச் சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். துவர்ப்போடு இனிப்பும் கலந்த சுவையுடையது. தட்டைப்பயறு சுண்டல், தட்டைப்பயறு புளிக்குழம்பின் தனிச்சுவை மிகப் பிரபலம். தமிழகத்தில் மாசி, பங்குனி மாதங்களில் செய்யப்படும் கொழுக்கட்டைகளிலும் கேரளத்தில் சுகியன்களிலும் மசிக்கப்பட்ட தட்டைப்பயறு சேர்க்கப்படுகிறது.

கறுப்புக் கண்

தட்டைப்பயறின் அறிவியல் சிற்றினப் பெயரான unguiculata என்பதற்குச் சிறிய வளைந்த நகம் போன்றது என்று அர்த்தம். இவற்றின் மலர் இதழ்களின் காம்புப் பகுதிகள், சிறிதாக வளைந்திருப்பதே இந்தப் பெயருக்குக் காரணம். தட்டைப்பயறு நெற்றை உடைத்தால் பயறு பச்சையாக இருக்கும். காய வைத்தால் பழுப்பு நிறத்துக்கோ, மங்கலான மஞ்சள் நிறத்துக்கோ மாறும். நெற்றில் பயறு ஒட்டியுள்ள பகுதி, சிறிய கறுப்புக் கண்ணைப் போன்றிருக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள சவானா காடுகளில் வளர்ந்து, உணவாகப் பயன் தரும் முக்கியப் பயறு வகை இது. மேற்கு ஆப்பிரிக்காவில்தான் முதலில் காட்டுப் பயிர்களிலிருந்து வயல்வெளி பயிராக இது மாற்றப்பட்டது. மத்திய கானா பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்திருக்கலாம். அதன் பிறகு, இரண்டாவது முறையாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிராக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றைக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய-தெற்கு அமெரிக்கக் கண்டங்களில் அதிகம் சாப்பிடப்படும் மிகவும் முக்கியமான பயறு வகையாக உள்ளது.

வறட்சியைத் தாங்கக்கூடிய, வெப்பத்தைத் தாங்கக்கூடிய பயிர் என்பதால் வறண்ட பகுதிகள், வெப்பமண்டலப் பகுதிகளில் பயிரிட ஏற்றது. அது மட்டுமல்லாமல் சோளம், சிறுதானியங்கள், இருங்குசோளம், கரும்பு, பருத்தி ஆகியவற்றுக்கு இடையே ஊடுபயிராகவும் இதைப் பயிரிடலாம். தட்டைப்பயறின் மேலுறையை - தட்டையைக் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

பயன்பாடு

சமைப்பதற்கு முன் தட்டைப்பயறை 5-7 மணி நேரம் ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும். இதைச் சுண்டலாகவோ, மசித்தோ பயன்படுத்தலாம். நேரடியாக மட்டுமில்லாமல் முளைகட்டியும் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு உப்பு சேர்த்தால் சுவை கூடும். இதைப் பயன்படுத்தி டோஃபு, மாவு, சாலட், சூப் போன்றவையும் செய்யப்படுவது உண்டு.

உளுந்துக்கு மாற்றாக இட்லி, தோசை மாவில் தட்டைப்பயறைச் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். சுவை மிகுந்து இருக்கும்.

ஊட்டச்சத்து

1. தட்டைப்பயறில் நார்ச்சத்து அதிகம், கொலஸ்ட்ராலைக் குறைக்க இது உதவுகிறது.

2. இறைச்சிக்குப் பதிலாக இதைச் சாப்பிட்டு அதிகப் புரதத்தை உடலில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்க, ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க, இதயத் துடிப்பு சீராக இருக்கத் தட்டைப்பயறு உதவும்.

4. பெரும்பாலான பயறு வகைகளைப் போலவே, மண்ணில் நைட்ரஜன் வளம் அதிகரிக்கத் தட்டைப்பயறு பயிர் உதவுகிறது. அதன்காரணமாக ஊட்டச்சத்தும் இதில் அதிகம். கால்சியம் 41 மி.கி., ஃபோலேட் 356 மைக்ரோ கிராம், புரதம் 13 கிராம், நார்ச்சத்து 11 கிராம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

5. தட்டைப்பயறு தாவரத்தின் இலை மிக அதிகப் புரதச்சத்தையும் ஊட்டச்சத்தையும் கொண்டது. அதனால் தட்டைப்பயறைப் பச்சையாகப் பயன்படுத்துவதைப் போலவே, தட்டைப்பயறு இலையையும் சமைத்துச் சாப்பிடலாம்.

தெரியுமா?

இன்றளவும் முதலில் பயிராக்கப்பட்ட தாய்மண்ணான ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான், உலகின் 66 சதவீதத் தட்டைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரேசில்தான், உலகில் தட்டைப்பயறு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இரண்டாவது நாடு. அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் புத்தாண்டு நாளில் தட்டைப்பயறைச் சாப்பிடுவது, அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.

தட்டைப்பயறு / காராமணி

ஆங்கிலத்தில்: Cowpea/ Black-eyed Beans (சில நாடுகளில்)

தாவரவியல் பெயர்: Vigna unguiculata

மருந்தாக…

தட்டைப்பயறைக் காய வைத்துப் பொடி செய்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்றுப் புண்கள் ஆறும். கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. வீரிய விருத்திக்கு முளைகட்டிய தட்டைப்பயறு சுண்டலை ஆண்கள் சாப்பிடலாம்.

தட்டைப்பயறுக்குப் பூஞ்சைத் தொற்றை அழிக்கும் தன்மை (Anti-fungal) இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர் ஆக்ஸிகரணச் செய்கையும் (Anti-oxidant) இதற்கு உண்டு. சிக்கில் செல் அனீமியா எனும் நோயில் இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

முக்கியமான வாயுப் பதார்த்தம் என்பதால் மிளகு/சீரகம் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வயிற்று மந்தத்தை உருவாக்கும். முறையாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கக் கூடியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்