ஆரோக்கிய நொறுவை: சேலத்து ‘செட்’ தின்பண்டம் - பீட்ஸா, பர்கருக்கு மாற்று

By டாக்டர் வி.விக்ரம்குமார்

அந்நிய மோகத்தால் இடைச்செருகல் களாக நுழைந்து, இன்றைக்கு நம் உணவுப் பட்டியலில் நிரந்தர இடம்பிடிக்க முயற்சிக்கும் பீட்ஸா, பர்கருக்கு மாற்று நம்மூரிலேயே இருக்கிறது.

இந்தக் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்கள், சேலம் பக்கம் சென்றால் புதிய வகை உணவொன்றை ருசிக்கலாம். சேலம் மாநகரம் முழுவதும் ‘செட் வகை’ தின்பண்டங்கள் கிடைக்கின்றன. சேலத்துக்கு மாம்பழம், இரும்பாலை, ஏற்காடு, மேட்டூர் அணை எனப் பல பெருமைகள் உண்டு. இந்தப் பட்டியலில் அதிகம் அறியப்படாத, உடலுக்குக் கேடு விளைவிக்காத ‘செட் வகை’ உணவும் அடக்கம்.

‘செட் வகை’ உணவு

மாலை வேலையில் சேலம் மாநகரின் பல இடங்களில் தட்டுவடை (நம்ம தட்டைதான்) செட், முறுக்கு செட், தக்காளி செட் எனப் பல வகைகளில் ஆரோக்கியமான தின்பண்ட விற்பனை களைகட்டுகிறது. அடியில் ஒரு தட்டுவடை, அதற்கு மேல் துருவிய கேரட், பீட்ரூட், வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்களை வைத்து, பின்னர் தக்காளி சட்னி, பூண்டுச் சட்னி, வெங்காயச் சட்னி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சிறிதளவு இட்டு, மிளகுத் தூள், சீரகத் தூளைச் சற்றுத் தூவி, நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு, மீண்டும் மேலே ஒரு தட்டுவடையை வைத்து மூடி ‘தட்டுவடை செட்’ என்று செய்து தருகிறார்கள். சில கடைகளில் பத்து முதல் பதினைந்து வகையான சட்னி/துவையல் வகைகள் சுவைக்கேற்ப கலக்கப்படுகின்றன.

நலம் பயக்கும் நொறுவை

பார்ப்பதற்கு ‘பர்கர்’ சாயலில் காட்சி அளித்தாலும் நிச்சயம் நோய் உண்டாக்காது. பர்கரில் இருப்பதுபோல உடலுக்குக் கேடு விளைவிக்கும் வேதியியல் பொடி களோ, செயற்கைக் கலவைகளோ இதில் சேர்க்கப்படுவதில்லை. கலோரியை அதிகப்படுத்தி உடல் பருமன், அவற்றின் துணை நோய்களை இந்த ‘செட்’ உணவு ஏற்படுத்துவதில்லை.

‘செட்’ தின்பண்டங்களில் கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகள் நிறைந்திருப்பதால் ஊட்டச்சத்துக்குப் பஞ்சமில்லை. இஞ்சி, சீரகம், மிளகின் சாரம் நிறைந்திருப்பதால் செரிமானத் தொந்தரவு குறித்துக் கவலைப்பட வேண்டியதும் இல்லை. நல்ல பசி உணர்வு உண்டாகும். பீட்ஸா, பர்கரை அதிக அளவில் சாப்பிடும்போது உண்டாகும் மலக்கட்டு பிரச்சினை இதில் ஏற்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்வதால் உடலுக்குத் தேவையான நெய்ப்புத்தன்மை கிடைக்கும். அத்துடன் தட்டுவடை, முறுக்கு போன்றவை நெடுங்காலமாக நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் நொறுவைகள் என்பதால் பயம் வேண்டியதில்லை.

‘முறுக்கு தக்காளி செட்’

தட்டுவடைக்கு பதிலாக முறுக்கு, தக்காளித் துண்டுகளை மேலும் கீழும் வைத்துத் தயாரிக்கப்பட்ட செட் வகைகளுக்கு முறையே ‘முறுக்கு, தக்காளி செட்’ என்று பெயர். இவை தவிர செட் பொரி, மசாலா பொரி, ‘நொறுக்கல்’ போன்றவையும் ‘செட்’ உணவுப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. பருவ நிலைக்கு ஏற்ப மாங்காய் துருவல், வெள்ளரி சீவல்களையும் செட் வகைகளுடன் சேர்க்கிறார்கள்.

காரத்தை விரும்புபவர்களுக்கு மிளகுத் தூளை அதிகமாகத் தூவிக் காரம் தூக்கலான செட்களும், இனிப்புப் பிரியர்களுக்கு வெல்லப்பாகு கலந்து இனிப்பு செட்களும் கொடுக்கிறார்கள். சமீபகாலமாக முட்டை செட்களும் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன.

துணை நொறுவைகள்

‘செட்’ வகையறாக்களுக்குத் துணை நொறுவைகளாக வெல்லம் சேர்த்து இடித்த கடலை உருண்டை, கடலை மிட்டாய், கறுப்பு மற்றும் வெள்ளை எள்ளு உருண்டைகளும் அனைத்துக் கடைகளிலும் பாரம்பரியத்துடன் மிளிர்கின்றன. காரமாக செட் வகைத் தின்பண்டங்களை ருசித்துவிட்டு, இனிப்பான கடலை அல்லது எள்ளு உருண்டைகளைச் சுவைப்பது பெரும்பாலோரின் வழக்கம். இவற்றில் இரும்புச் சத்து அதிகம்.

‘சிறுதானிய செட்’

சிறுதானிய உணவு வகைக்குக் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, சில கடைகளில் அரிசி மாவுக்குப் பதிலாகத் தினை அரிசி மாவு, சோள மாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட முறுக்கு, தட்டுவடைகள், செட் வகைகளுக்கு ஆதாரமாக உள்ளன. இவற்றைக் கொண்டு செய்யப்படும் செட் வகைகளை ‘சிறுதானிய செட்’ என்று அழைக்கின்றனர். சிறுதானிய செட் வகைகளை உட்கொள்வதன் மூலம் ‘செட் உணவு’ தரும் பயன்களோடு தினை, சோளம், கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களின் மருத்துவப் பயன்களும் கூடுதலாகக் கிடைக்கும்.

மலிவான விலை

‘செட் வகை’ நொறுவையின் விலை மிகவும் குறைவே. சாமானிய மக்கள் வாங்கிச் சுவைக்கும் அளவில் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஐந்து செட் விலை இருபது முதல் முப்பது ரூபாய் மட்டுமே. ‘செட் வகை’ பண்டங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஆனால் கடைகளில் கிடைப்பதுபோலப் பல வகைச் சட்னி, துவையல் ரகங்களை ஒரே நேரத்தில் தயார் செய்வது சற்று சிரமம். ஒரு வகை சட்னி/துவையல் கொண்டு தயார் செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விருப்பமான நொறுவைப் பண்டமாக இந்த ‘செட் வகை’ நொறுவை உருவெடுத்துவருகிறது. சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த ‘செட்’ தின்பண்டங்களைச் சுவைத்துவிட்டு அதற்கு அடிமையாகாமல் இருக்கமுடியாது.

நோய் விளைவிக்கும் நவீன துரித உணவைப் புறந்தள்ளிவிட்டு, இதுபோல ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் பாரம்பரிய உணவை ருசிக்கத் தொடங்கினாலே நம் உடல்நலத்தை எளிதாக மீட்டெடுக்கலாம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்