உயிர் வளர்த்தேனே 37: கோதுமைப் பண்டங்கள் வெறும் நொறுவை அல்ல

By போப்பு

அரிசியைக் காட்டிலும் கோதுமையில் எரிமச்சத்து சுமார் பத்து சதவீதம் குறைவு, புரதம் சற்று அதிகம். எனவே நீரிழிவுத் தொல்லையை ‘எதிர்கொள்வோர்’ (‘நீரிழிவு நோயாளி’ என்ற சொல்லில் நிரந்தரப் புறக்கணிப்பு மறைந்திருக்கிறது) தங்களது உணவில் அரிசியைக் குறைத்து, கோதுமையை அதிகரித்தால் மேற்படி நோயால் ஏற்படும் தொல்லை மட்டுப்படும் என்றொரு கருத்து நிலவுகிறது.

தற்காப்பு நடவடிக்கை

நீரிழிவால் கோதுமையை உண்போருக்கு நீரிழிவு குறைவதற்குப் பதிலாக அதிகரித்துவருவதாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலான ஆய்வுகள் முன்முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தம் முடிவுகளுக்கு ஏற்ற ஆதாரங்களைக் கண்டடைவதே ஆய்வின் நோக்கம் என்ற உண்மை ஒருபுறம் இருக்கட்டும். போதிய உடலுழைப்பு இல்லாத ஒருவர் தொடர்ந்து ஒரே சத்தைக் கொண்ட உணவை எடுத்து வருவாரானால், அந்த உணவை ஏற்கும் திறனை அவரது உடல் இழந்துவிடும். எனவே உபரியான சத்தை ஏற்க மறுத்து, சர்க்கரை வடிவில் வெளியேற்றுவது உடலின் தற்காப்பு நடவடிக்கை. இதை நாம் நிரந்தர நோயாகக் கருத வேண்டியதில்லை.

மாவு அரைக்கும் முறை

அது போகக் கோதுமையை மாவாக அரைக்கும் முறையால் அதிலுள்ள சத்துகள் அனைத்தும் சிதைந்து, வெறும் சக்கையாகி விடுகிறது. எனவே அது நீரிழிவைக் கட்டுப்படுத்தாது என்பது மட்டுமல்ல, வேறுபல நோய்களுக்கும் கோதுமை மாவு காரணியாக அமைந்துவிடக்கூடும்.

கோதுமை மாவைக் கடையிலும் வாங்கக் கூடாது. நமக்கும் சொந்தமாக அரைக்கத் தெரியாது. அப்போது என்னதான் செய்வது? சற்றுக் கவனமாக அரைக்க வேண்டும்.

மூன்று கிலோ அல்லது ஐந்து கிலோ கோதுமையை வாங்கிச் சுத்தம் செய்து பெரிய பாத்திரத்தில் போட்டு, கோதுமை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்ற வேண்டும். அது பன்னிரண்டு மணி நேரம் ஊறிய பின் நீரை வடித்து எடுத்துத் தொட்டிச் செடிக்கு அல்லது தோட்டத்து மரங்களுக்கு `ஸ்பான்சர்’ செய்து விடுங்கள். நல்ல ஊட்டமளிக்கும் நீராக இருக்கும். நாம் அரைக்கப் போகும் கோதுமையில் மிகுந்துள்ள ரசாயனமும் பெருமளவு வெளியேறிவிடும்.

நீரை வடித்த பின் மேற்படி பாத்திரத்தின் மீது கெட்டியான ஈரத்துணியைப் போட்டு மூடிவிட வேண்டும். இருபத்தி நான்கு அல்லது முப்பது மணி நேரம் கழித்துப் பார்த்தால் எலிக்குஞ்சுகள் கண் திறப்பதுபோலக் கோதுமை முளைவிட்டிருக்கும். கவித்துவமான மனம் உடையவர்களுக்கு அதை அப்படியே முளைக்க விடலாமா என்றுகூடத் தோன்றும். அவ்வளவு அழகாக இருக்கும் கோதுமை முளை.

நாம் இங்கே மாவு தயாரிப்பு பற்றி பேசுவதால், அதை இப்போது காயப்போடுவதுதான் அடுத்த படிநிலை. முளைகட்டிய கோதுமையை விரித்த துணியில் பரப்பி வெயிலில் காய வைக்க வேண்டும். ‘வெயிலுக்கு உகந்த அம்மன்’ அருள் பாலிக்கும் நம்மூரில் வெயிலுக்கா பஞ்சம். இயற்கையின் மூலச் சக்தியான வெயிலைப் பழிக்காமல், நமக்கு இசைவாக்கிக்கொண்டால் வெயில் நிறைய பலன்களைத் தரும்.

நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்க…

சுக்காகக் காய்ந்த கோதுமையை இயந்திரத்தில் கொடுத்துச் சூடு ஏறாமல் இரண்டுக்குப் பதிலாக மூன்று அல்லது நான்கு முறை போட்டு அரைக்கச் சொல்ல வேண்டும். கூடுதல் காசு கேட்பார்கள். ஆரோக்கியத்துக்கான விலையை அங்குக் கொடுப்பதில் தவறில்லை. சூடு ஏறாமல் அரைக்கும்போது அதன் நுண்சத்துகளும் நார்ச்சத்தும் சிதையாமல் கிடைக்கும்.

அரைத்த மாவை வீட்டுக்குக் கொண்டு வந்த பின் செய்தித்தாளில் பரப்பி நன்றாக ஆறவிட்டு எடுத்து மூடி வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது பிளாஸ்டிக் கவரில் போட்டு அதன் உயிர்ப்பண்பு கெடாத வண்ணம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். (கவனிக்க: ஈர மாவைத்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டாம் என்று முன்னர்க் கூறியுள்ளோம்).

இரண்டு மூன்று பேர் மட்டுமே உள்ள குடும்பத்தில் கோதுமை மாவுக்கு இத்தனை பண்டித வேலைகள் செய்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழலாம். இதைப் பெரிய வேலையாகக் கருதினால் நிச்சயமாகச் செய்ய முடியாது.

இது வேலையல்ல. நம் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுக்கு, நாம் செய்யும் மரியாதை. நாம் உணவுக்கும் உடலுக்கும் மரியாதை செய்யவில்லையானால், நம் உடல் நமக்கு மரியாதை செய்யாது. சரியான நேரம் பார்த்துப் போட்டு எடுத்து விடும்.

குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்

மாவு அரைத்தல் என்பது நமது செக்குமாட்டுத்தனமான நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு அளிக்கும் ஒரு சின்ன பிரேக். ஒரு `ரிலாக்சேஷன்’ என்று புரிந்துகொண்டால், விளையாட்டாகச் செய்ய முடியும். குழந்தைகளும் இதில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள். கம்ப்யூட்டரிலும் போனிலும் விளையாடும் பிள்ளைகள் எதிரில் மாவைக் கொட்டிப் பரப்பிவிடச் சொல்லுங்கள். இதுவரை காணாத ஆர்வத்துடன் கார்ட்டூன் சித்திரம் வரைந்தபடி மாவை ஆற விடுவார்கள். அவர்களுடைய படைப்புத் திறன் கிளர்ச்சியடையும். அக்கம்பக்க இரண்டு மூன்று சின்னக் குடும்பங்கள் கூட்டாகக் கோதுமை மாவை அரைத்துக்கொள்ளலாம். கோதுமையில் உள்ள குளூட்டன் பசை உறவுகளைப் பிணைக்கும்.

கோதுமை மாவில் எப்போதும் சப்பாத்தி மட்டுமே தானா? ஏன் அந்த மாவைக் கலக்கி தோசை சுடலாமே என்கிறீர்களா?

கோதுமைத் தோசை, ரவா உப்புமாவைக் காட்டிலும் கொடிய தண்டனை. பல நீரிழிவுத் தொல்லையினருக்கு நீரிழிவைக் காட்டிலும் பெருந்தொல்லை ‘நெளுக்கு முழுக்கு’ என்று விரல்களுக்குள்ளேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கோதுமைத் தோசை. கோதுமைத் தோசையை எப்படிச் சுவையாகவும் சத்து கெடாமலும் சமைக்க முடியும் என்பதைப் பின்னர் பார்க்கலாம்.

கோதுமைப் பண்டங்கள்

கோதுமை மாவுடன் சிறிதளவு அரிசி மாவு அல்லது ராகி மாவு கலந்து இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்ற பண்டங்களைச் சமைக்கலாம். சப்பாத்தி தவிர மற்றப் பண்டங்கள் சமைப்பதற்கு மாவை மையாக அரைக்க வேண்டியதில்லை.

கோதுமை மாவு இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் காலை உணவாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப் பொருமல், அடிக்கடி ஏப்பம், காலையில் தோன்றும் மந்த உணர்வு போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

கொழுக்கட்டை, பணியாரம் போன்ற பலகாரங்களை உணவுக்கு இடையிலான வெறும் நொறுவையாகக் கருதாமல் மாலை உணவாக எடுத்துக்கொண்டு இரவில் பழம் அல்லது பழச்சாறு போன்றவற்றை அருந்தினால் வயிறும் உடலும் இலகுவாகவும் சுகமாகவும் இருக்கும்.

கோதுமைப் பணியாரம்

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - சுமார் 200 கிராம்

அரிசிமாவு அல்லது வெள்ளை ரவை - ஒரு குழம்பு கரண்டியளவு

தேங்காய் - அரை மூடி

வெல்லம் - குழம்பு கரண்டியளவு.

சுக்கு பொடி - இரண்டு சிட்டிகை

ஏலக்காய்ப் பொடி இரண்டு சிட்டிகை

நெய் - இரண்டு டீ ஸ்பூன்

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நெய்விட்டுக் கிளற வேண்டும். பின்னர்த் தோசை மாவுப் பதத்தைக் காட்டிலும் சற்றே கெட்டியாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். கரைசலைப் பத்திருபது நிமிடங்கள் ஊறவிட்டுப் பின்னர் பணியாரக் கல்லை நிதானமாகச் சூடேற்றி மாவை ஊற்றி எடுத்தால் அழகாகக் கிரிக்கெட் பந்துபோல உப்பி எழும்.

இதே மாவில் வெல்லம் ஏலக்காயைத் தவிர்த்துவிட்டு வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கடலைப்பருப்பு, காரட் துருவல் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டிக் காரப் பணியாரமும் செய்யலாம்.

(அடுத்த வாரம்: கோதுமைப் பாலும் கோதுமை தோசையும்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்