டொனால்ட் டிரம்புக்கு மனநிலை பாதிப்பா?

அரசியல்வாதிகளின் அதிரடி நடவடிக்கைகள் தமிழகத் துக்கும் இந்தியாவுக்கும் புதியவை அல்ல. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், “அமெரிக்காவை மீண்டும் பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்” என்ற முழக்கத் துடன் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அத்துடன் பதவியேற்பதற்கு முன்னாலும் பின்னாலும் தனது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதிரடி அதிபர்

அமெரிக்காவில் வாழும் மற்ற நாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவது தொடர்பான அறிவிப்பு, ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகள் மீது அவர் விதித்த பயணத் தடை, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டம், தீவிரவாதிகளை விசாரிக்க வாட்டர்போர்டிங் என்ற கொடூர விசாரணை முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பு போன்றவை அவற்றுள் சில.

கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் இந்த அரசியல் நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, அவரது நடத்தையும் பேச்சும் தொலைக்காட்சி பேட்டிகளும் டொனால்ட் டிரம்பின் மனநிலை பற்றி பலருடைய மனதில் கேள்விகள் எழுப்பியுள்ளன. பத்திரிகைகளும் இணையத் தளங்களும் இதை அலசி ஆராய்ந்து டொனால்ட் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அவருக்கு ஆளுமைப் பிறழ்வு (Personality disorder) உண்டா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளன.

ஆளுமைப் பிறழ்வாளர்?

அவரைப் பற்றி சில அடிப்படைத் தகவல்களை முதலில் பார்ப்போம். அமெரிக்காவின் 45-வது அதிபர்; அவருக்கு இப்போது வயது 70; மூன்று முறை திருமணமானவர்; பெருவணிகர்; ஃபோர்ப்ஸ் வணிக இதழின் ஆய்வின்படி 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகளுக்கு உரிமையாளர், அமெரிக்காவின் 113-வது பணக்காரர் (அமெரிக்காவில் ஒரு கோடீஸ்வரர்தான் அதிபராக முடியும், இந்தியாவில் அமைச்சரான பிறகே அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்); அவர் மீது வணிகம் சார்ந்த 350 வழக்கு கள் இருந்துள்ளன… நேற்று வரை அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை.

ஆனால், அவரது சமீபத்திய நடத்தையும் பேச்சுகளும் தொலைக்காட்சிப் பேட்டிகளும் அவரின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. பெரும் ஆணவம் மிக்கவராக, திமிர் பிடித்தவராக, தற்பெருமை பேசுபவராக, எப்போதும் தன்னையே முதன்மைப்படுத்துபவராக இருக்கிறார் என்பதைப் பலர் சுட்டிக்காட்டி வருகிறார்கள். எனவே, சில உளவியலாளர்கள் அவரை ஆளுமைப் பிறழ்வு (Personality disorder) கொண்டவர் என்று வர்ணிக்கிறார்கள்.

சைகோபதி

சரி, ஆளுமைப் பிறழ்வு என்றால் என்ன?

பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் தோற்றம், நடை உடை பாவனைகளைக் குறிப்பதாக இருக்கும்போதிலும், உளவியலில் இது, ‘ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகிய அனைத்தும் சேர்ந்தது’ என்று வரையறுக்கப்படுகிறது. இந்த ஆளுமைக் கூறுகள் வரம்பு மீறிய அளவில் இருக்கும்போதும் ஒருவரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்குப் போதும், அது ‘ஆளுமை பிறழ்வு’ என்று அழைக்கப்படுகிறது. பல வகையான ஆளுமைப் பிறழ்வுகள் உள்ளன.

1960-ல் வெளிவந்த ‘சைக்கோ’ என்ற ஹாலிவுட் படம் , ‘சைகோபதி’ (Psychopathy) என்ற ஒரு வகை ஆளுமைப் பிறழ்வை அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தது. இதன் ‘நாயகன்’ ஒரு கொலைகாரன். அடுத்தடுத்துப் பல பெண்களைக் கொலை செய்கிறவன். தன் தாயைக் கொலை செய்து, அவள் உடம்பை வீட்டில் வைத்திருக்கிறான். சில நேரம் அவள் உடையை உடுத்துக்கொண்டு பெண்களைக் கொலை செய்கிறான். மனசாட்சியும் குற்ற உணர்வும் அற்ற இந்தக் குணக்கேடு, சைகோபதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், டொனால்ட் டிரம்ப் ஒரு சைக்கோ அல்ல. அவருக்கு உள்ளது தன்மோக ஆளுமைப் பிறழ்வு (Narcissistic Personality Disorder) என்பது சில உளவியலாளர்களின் கருத்து.

நார்சிசியஸ்

தன்மோகம் பற்றி 1914-ல் சிக்மண்ட் ஃபிராய்ட் ஒரு தனி நூலே எழுதியுள்ளார். கிரேக்கத் தொன்மக் கதை ஒன்றில் ‘நார்சிசியஸ்’ என்ற அழகான ஒரு வாலிபன், அவன் மீது காதல் கொண்ட பெண்களை நிராகரித்துவிட்டு ஆற்றங்கரையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறான். நீரில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்து, ‘என்னைவிட அழகாக இருக்கும் இவன் யார்?’ என்று திகைத்து நிற்பான். தன் அழகில் மோகம் கொண்டு தன் பிம்பத்தைக் காதலிப்பான். தன் பிம்பத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தபடி ஆற்றங்கரையிலேயே உயிரை விடுவான். ஃபிராய்ட் குறிப்பிடும் தன்மோக மனோபாவம் இதுதான்.




நார்சிசியஸ்

இந்தத் தன்மோகப் பண்புக் கூறு, எல்லோருக்கும் ஓரளவு உண்டு. தன்மதிப்பும் தன்னம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் உண்டு, அது அவசியமும்கூட. இதன் அளவு ஆளுக்கு ஆள் வேறுபடும். காந்தி போன்றவர்களுக்குத் தன்மோகம் குறைவாகவும் சில அரசியல் வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.

பிறழ்வா? நோயா?

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் சில சிறந்த பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து, நாஜி ஜெர்மனியின் பிரசார அமைச்சராக இருந்த ஜோசஃப் கோயபல்ஸ் இரவில் ஹிட்லருக்கு அவற்றைப் போட்டுக் காட்டுவாராம். ஹிட்லர் ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தனது பேச்சுகளை ரசித்து மூழ்கியவாறே உறங்கிப் போவாராம்.

தன்மோகம் என்பது அதீதத் தற்பெருமை, அகங்காரம், தன்னைப் பற்றி வானளாவ உயர்வான எண்ணம், மற்றவர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு, பச்சாதாபம் அற்ற நிலை, தன்னை முதன்மைப்படுத்தும் சுயநலம், தன் நலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தும் பண்பு போன்ற ஆளுமைக் கூறுகளை உள்ளடக்கியது.

தற்பெருமைகளைப் பறை சாற்றுவதும், உயர்பதவியில் உள்ள அதிகாரிகளின் மீது அதிகாரம் செலுத்துவதில் இன்பம் காண்பதும், மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. இதேபோல, துதி பாடும் கூட்டம் ஒன்றைத் தன்னைச் சுற்றி வைத்துக்கொள்வது, ‘ஆமாம் சாமி' போடும் நபர்களுக்குப் பதவிகள் அளிப்பது (கூழைக் கும்பிடு போடும் அவர்கள் தம் வன்மத்தைப் பிறர் மீது காட்டுவார்கள். சில வேளைகளில் சாது மிரள்வதும்கூட நடக்கும்!) - இவை எல்லாம் நாம் கண்ட, கண்டு வரும் தன்மோக ஆளுமையின் வெளிப்பாடுகள். இந்த ஊதிப் பெருத்த ஈகோவைத்தான் நாம் டிரம்பிடம் காண்கிறோம். ஆளுமைப் பிறழ்வையோ மனநோயையோ அல்ல.

தன்மோக நீட்சி

தன்மோகத்துக்கான உதாரணங்களை நம்மைச் சுற்றியே ஏராளமாகக் காணலாம். இந்தியப் பிரதமர் மோடி தன் உடைகளுக்காகப் பெரும் பணம் செலவிடுவதாகப் பல ஆண்டுகளாகவே ஊடகங்கள் முணுமுணுத்து வருகின்றன. அவர் உலகை வலம் வரும்போது, விலை உயர்ந்த விதவிதமான ஆடைகள் அணிவதை ஒளிப்படங்களில் காணலாம். இதற்குச் சிகரம் வைத்தால் போல ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது தங்க நிறத்தில் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்று வரிசையாகப் பெயர் பொறித்து நெய்யப்பட்டிருந்த உடை அணிந்திருந்ததை ‘தன்மோகம்’ என்பதல்லாமல் வேறு எப்படிக் கூற முடியும்?

இதேபோல, எல்லோரும் தன்னைப் போற்றும் விதமாக அரசாங்கப் பணத்தில் அரசு நலத் திட்டங்களுக்கு ‘அம்மா' என்று பெயர் சூட்டியது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் என்று சொல்ல முடியுமா? இதுவும் தன்மோகம்தான். தங்களுக்குத் தாங்களே பட்டங்கள் கொடுத்துக்கொள்வதும், இந்தியாவில் அரசியல்வாதிகள் நடத்தும் ஆடம்பரமான திருமணங்களையும் பிறந்த நாள் விழாக்களையும் தன்மோகத்தின் நீட்சியாகவே பார்க்க வேண்டும்.

சரி, டொனால்ட் டிரம்ப் தன்மோகம் பிடித்தவரா? இதைப் பற்றி நம் உள்ளூர் அறிஞர் ஒருவரையே கேட்டுவிடலாம். அவர் என்ன கூறுகிறார்? “அட, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!”

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்