மனமே நலமா? - கனவு: புதிரா, தொந்தரவா?

By டாக்டர் ஆ.காட்சன்

‘கனவு, ஆழ்மனதுக்கு நம்மை இட்டுச் செல்ல உதவும் ராஜபாதை’ என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறிய ‘கனவுகளின் விளக்கம்’ (The Interpretation of Dreams) என்ற புத்தகம் 1900-ல் வெளியானாலும், இன்றுவரையிலும் உலகை உலுக்கிய முக்கியப் புத்தகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கனவுத் தொழிற்சாலை

கனவுகள் என்பது மும்முரமான மனத் தொழிற்சாலையின் தயாரிப்புதான். நம் தூக்கத்தில் மாறிமாறி வரும் NREM (Non-rapid eye movement),REM (Rapid eye movement) என்ற இரண்டு தூக்க நிலைகளில் வரும் கனவுகள் வெவ்வேறு தன்மையைக் கொண்டவை.

முதல் வகைத் தூக்கத்தில் வரும் கனவுகளை நம்மால் திரும்பவும் நினைவுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனால், இரண்டாம் வகை தூக்க நிலையில் வரும் கனவுகளைக் காலையில் நினைவுபடுத்திப் பார்க்க முடியும். ஆனால், அப்படி நினைவில் இருக்கும் கனவுக் காட்சிகளின் படிமங்கள் சூரியனைக் கண்ட பனி போல மெல்ல மெல்ல நம் நினைவு அடுக்குகளிலிருந்து மறைந்துவிடும். எனவேதான் காலையில் ஒரு கனவை ஞாபகப்படுத்தி எழுதி வைக்காவிட்டால், மாலையில் அதன் ஒரு துளியைக்கூட மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது.

எப்படி உருவாகிறது?

கனவில் வரும் காட்சிகள், சம்பவங்கள் பெரும்பாலும் நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் படிமங்களிலிருந்தே உருவாகின்றன. இல்லையென்றால் நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள், வெளிப்படுத்த முடியாத எண்ணங்கள், அப்படியே வெளிப்படாமல் வேறு உருவத்தைப் பெற்றுக் கனவாக வெளிப்படுகின்றன. இப்படி உருமாறி வருவதால்தான் அதன் நேரடி அர்த்தத்தை எளிதில் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

மூல வியாதியால் அவதிப்படும் ஒருவர், குதிரைப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிபெறுவது போலக் கனவு காணலாம். உட்காரும்போது வலிக்கவே கூடாது என்ற அவருடைய ஆழ்மனதின் ஆசை கனவின் மூலமாக நிறைவேறுவதாக இதைப் புரிந்துகொள்ளலாம்.

நமக்கு முக்கியமில்லாத, என்றோ நடந்த சில சம்பவங்கள், நம் கவனத்தில்கூட வராமல் போன அனுபவங்கள்கூடக் கனவில் முக்கியத்துவம் பெற்றவையாக வெளிப்படுவதுதான் ஆச்சரியமான ஒன்று. என்றோ ஒரு நாள் பேருந்தில் செல்லும்போது கடந்து சென்ற கட்டிடம்கூட, கனவில் முக்கியப் களமாகத் தோன்றலாம்.

எப்படி வெளிப்படுகிறது?

கனவுகள் வெளிப்படும் தன்மைகள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சில வேளைகளில் பல நிகழ்வுகளின் ஒரு சில காட்சி படிமங்கள் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒரு கனவு நிகழ்வாக வெளிப்படலாம். ஒரு இயக்குநர் எடுத்த பல படங்களிலிருந்து ஆங்காங்கே சில காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து ஒன்றாகக் கோத்து வெளியிட்டால் எப்படி இருக்குமோ, அதுபோன்றது இந்த வகை.

சில நேரங்களில் ஒரே கருத்து அல்லது ஆழ்மனதின் விருப்பம், ஒரே கர்ப்பத்திலிருந்து மூன்று ஆட்டுக்குட்டிகள் வெளிவருவது போலப் பல வகைகளில் வெளிப்படவும் செய்யலாம். ஒரு மரத்தில் ஏறுவது போலவோ, ஆழமான படிக்குள் இறங்கிச் சென்றுகொண்டே இருப்பது போலவோ கனவு வருவது ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்ட பாலியல் விருப்பங்களின் அடையாளக் குறியீடாகவும் (Symbolic) இருக்கலாம்.

சில நேரம் உடலின் வெளிப்புறத்திலோ, உள் உறுப்புகளிலோ ஏற்படும் மாற்றங்கள் கனவில் அடையாளமாக வெளிப்படும். தூக்கத்தில் சிறுநீர் முட்டிக்கொண்டு நிற்பது பெரிய நீர்த்தொட்டி நிரம்பி உடையும் தறுவாயில் இருப்பது போலவும், அதிகாலையில் அடிக்கும் அலாரம், ஊட்டி மலை ரயிலில் செல்லும்போது குழல் ஊதிக்கொண்டு செல்வதைப் போலவும் கனவில் வரலாம்.

கனவுகளும் மனநலமும்

கனவு தூக்கத்தைப் பாதுகாக்கிறது என்ற வாதம் ஒருபுறம் இருக்க, ‘மனநோய் என்பது விழிப்புநிலையில் ஏற்படும் கனவு’ அல்லது ‘கனவு ஒரு குறுகிய கால மனநோய்’ என்று க்ராஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறினார், பல கனவுகள் மனநோய்களின் அறிகுறிகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மனப் பதற்ற நோய், மன அழுத்தங்கள், பாலியல் பிரச்சினைகள், தூக்கத்தின் தரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் கனவுகள் போன்றவை சம்பந்தப்பட்டவருடைய பிரச்சினையை அதிகரிப்பதுடன், மனநோய்களின் அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன.

இயற்கைச் சீற்றங்கள், விபத்துகளில் குடும்ப நபர்களைப் பறிகொடுத்தவர்களுக்கு அந்தக் காட்சிகள் கனவில் ஃபிளாஷ்பேக் போலத் திரும்பத் திரும்ப வரலாம். ரத்த அழுத்த நோய், அலர்ஜிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள்கூடத் திகிலூட்டும் கனவுகளை உண்டாக்க வல்லவை. தூக்கத்தில் அதிக அசைவு, உதைத்தல், வீறிட்டு அலறுதல் போன்றவற்றுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு உண்டு.

தூக்கத்தைப் பாதுகாக்குமா?

பொதுவாகக் கனவுகள் நம் தூக்கத்தைக் கெடுப்பதாகவே நம்புகிறோம். ஆனால், அணைத்து வைக்கப்பட்டிருக்கும் மனசாட்சியால் தடுக்க இயலாத ஆழ்மனத் தொந்தரவுகள், தூக்கத்திலிருந்து ஒருவரை எழுப்பாமல் பாதுகாக்கவே கனவுகள் உதவுகின்றன என்பது ஃபிராய்டின் கருத்து. மனதில் தேவையில்லாமல் சேர்ந்துகொண்டிருக்கும் கழிவை அகற்றும் வடிகாலாகவும் கனவு உதவலாம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள் கனவில் வருவதும், அதன் கோர்வையையும் அர்த்தத்தையும் பிரித்து அறிவதில் அதிகச் சிக்கலை ஏற்படுத்துவதுமே பலருக்கும் கனவுகள் புரியாத புதிராக உள்ளதற்கான அடிப்படைக் காரணம். இதை மீறிக் கனவை ரசிக்க ஆரம்பியுங்கள். கனவுகளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்