உலகச் சுகாதார நாள் ஏப்ரல் 7: இன்று நாம் நலமாய் இருப்பதற்கு...

By மு.வீராசாமி

நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சி ஒன்றில், அவரை ஏமாற்றி ஒரு பையன் மருத்துவமனைக்குக் கூட்டிப்போய், அவருக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துவிடுவான். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் அப்படி நடைபெறுவதற்குச் சாத்தியமில்லை. உண்மையில் அந்தக் காலத்தில் ஒருவருக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யச் சம்மதிக்க வைப்பது, அவ்வளவு எளிதாக இருந்ததில்லை.

1952-ம் ஆண்டு காலகட்டத்தில், குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அனைத்து மக்களுக்கும் போதிய குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளைக்கூட அரசால் செய்து தர முடியாத நிலை இருந்தது. அப்போது காணப்பட்ட அபரிமிதமான மக்கள்தொகையே இதற்குக் காரணம் என உணர்ந்து, உலகிலேயே முதலாவதாகக் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதை நடைமுறையில் செயல்படுத்தியவர்கள் யார்? எளிய சுகாதாரப் பணியாளர்கள்தான்.

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை நிறைவேற்றுவது, அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்கவில்லை. 1970-ம் ஆண்டு இத்திட்டம் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட காலம். மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மகப்பேறு உதவியாளர்கள், குடும்பநலப் பணியாளர்கள், வட்டார விரிவாக்க அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவருக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை இலக்கை அரசு நிர்ணயித்தது. ஒரு நிலையில் பள்ளி ஆசிரியர்களையும் அரசு விட்டு வைக்கவில்லை.

பெண் குழந்தைகள் நிறைந்த வீடுகளில், எதைப் பற்றியும் யோசிக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பற்றி வலியுறுத்த வேண்டிய கட்டாயம் சுகாதாரப் பணியாளர்களுக்கு அன்றைக்கு இருந்தது. இப்படிக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு ஒருவரை சம்மதிக்க வைப்பது மிகப் பெரிய கலைதான்.

குடும்பக் கட்டுப்பாடு பணிகளை, பொதுசுகாதாரத் துறைப் பணியாளர்கள்தான் கள அளவில் செயல்படுத்தினார்கள். அதிலும் அப்போதைய சுகாதார ஆய்வாளர்கள், மகப்பேறு உதவியாளர்கள், கிராமச் சுகாதாரச் செவிலியர்கள், குடும்பநலப் பணியாளர்கள் பணியைத்தான் இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். மாதத்துக்கு மூன்று பேருக்காவது அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துச் சொல்லி வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துவந்து, அறுவைசிகிச்சை முடிந்த பின், மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விடுவதுவரை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அறுவைசிகிச்சைக்குப் பின் தொடர் மருத்துவக் கவனிப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அறுவைசிகிச்சைக்குப் பின் தலைவலியோ, கை கால் வலியோ அல்லது வேறு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்த பிறகுதான் இந்தப் பிரச்சினையே வருகிறது என்று ‘கீறல் விழுந்த ரிக்கார்டு’ போலத் திரும்பத் திரும்பப் பலரும் சொல்வார்கள். அப்போது களப்பணியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்.

அசம்பாவிதங்கள்

சில நேரம் அறுவைசிகிச்சைக்குப் பின் நோயாளிக்கு விரும்பத்தகாத பக்கவிளைவுகள் ஏற்படலாம். எதிர்பாராத மரணம்கூட ஏற்படலாம். இதுபோன்ற நிகழ்வின்போது முதல் பலிகடா களப்பணியாளரும் மருத்துவரும்தான். அறுவைசிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களுக்கு அரிதாகக் குழந்தை பிறப்பதும் உண்டு. அப்போதும் களப்பணியாளர்கள்தான் முதலில் சிக்கிக்கொள்வார்கள்.

அறுவைசிகிச்சை செய்துகொண்டவரின் குழந்தை சில நேரம் நோய் காரணமாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ இறந்துபோவதும் நடைபெறுவது உண்டு. அப்போதெல்லாம் மறுஅறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அவர்களுக்குக் குழந்தை பிறப்புக்கு வேண்டிய உதவிகளையும் சுகாதாரப் பணியாளர்கள் செய்வது உண்டு.

குடும்பநலம்

ஒருவேளை குடும்பக் கட்டுப்பாடு முறை நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கைந்து குழந்தைகளாவது இன்றைக்கும் இருந்திருப்பார்கள். ஏனென்றால், குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஒரு வீட்டில் மிகச் சாதாரணமாக ஏழெட்டு குழந்தைகள் இருந்தார்கள்.

குடும்பக் கட்டுப்பாடு என்றவுடன் அந்தக் காலத்தில், ஏதோ வேண்டாத ஒன்று என்று நினைத்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. குடும்பக் கட்டுப்பாடு என்பது நம்முடைய, நம் குடும்பநலம் சார்ந்த ஒன்று என்பதை அனைவருமே உணர்ந்துவிட்டார்கள். இப்படி நாம் இன்று சந்தோஷமாக இருப்பதற்குப் பின்னால், அன்று கடுமையாக உழைத்த அரசு, சுகாதாரப் பணியாளர்களின் கடும் உழைப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்-இதிலென்ன குற்றம்?’ என்றும், ‘இருக்கும் பிள்ளைகள் எனக்குப்போதும் அம்மா-என் கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா’ என்றும் தன் பாடல் வரிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

கட்டுரையாளர்,
மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்