தமிழனாக இருந்தால் ஷேர் செய்யணுமா?

By பிருந்தா சீனிவாசன்

ஒவ்வொரு நாளும் 'கண்டிப்பாக இதை ஷேர் செய்யுங்கள், இல்லையென்றால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்' என்கிற ரீதியில் நம் மொபைல் போன்களுக்குள் வந்து விழுகின்ற தகவல்கள் ஏராளம். சிரிக்கவும், சிந்திப்பதற்குமான தகவல்களைப் பகிர்வதில் தவறில்லை. ஆனால் உடல்நலம், சிகிச்சை முறை, நோய் தொற்று, மருத்துவ உதவி போன்றவை தொடர்பான தகவல்களைக் கண்ணை மூடிக்கொண்டு பகிர்வது எத்தனை நல்லது?

உண்மையின் சதவீதம் என்ன?

“எட்டு மாதக் குழந்தைக்கு இருதய ஆபரேஷன். இந்த மெசேஜை நீங்கள் ஃபார்வர்டு செய்தால், வாட்ஸ் அப் நிறுவனம் அவர்களுக்கு ஐம்பது பைசா கொடுக்கும். இப்படிச் சேர்கிற பணத்தை வைத்து அந்தக் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யலாம். உங்களுடைய உதவி, ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும். தயவு செய்து ஷேர் செய்யுங்கள்” – மனதை உருக்கும் இப்படியொரு தகவல் வரும்போது தமிழர்களாக இல்லையென்றாலும் ஷேர் செய்துவிடுவார்கள். இதைப் போலவே ரத்தத் தானம் வேண்டியோ, அடிபட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை என்றோ ஒரே தகவல்கள் ஆண்டுக்கணக்கில் வாட்ஸ் அப்பில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தம் குளிர்பானத்தில் கலந்துவிட்டது. அதனால் சம்பந்தப்பட்ட குளிர்பானத்தை ஆறு மாதங்களுக்குக் குடிக்க வேண்டாம் என்ற தகவல் பல ஆண்டுகளுக்கு முன் காட்டுத்தீ போலப் பரவியது. ஆனால், அது இன்னும் அணையாமல் வாட்ஸ் அப் வழி எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற செய்திகள்கூடப் பரவாயில்லை. 'வெளிநாட்டினரின் சதி அம்பலமானது', 'சர்வதேச மருத்துவர்களின் புதிய கண்டுபிடிப்பு', 'ஒரு ரூபாயில் உலக நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தலாம்' என்கிற ரீதியில் உலவும் தகவல்கள் அபத்தத்தின் உச்சம். எந்தவிதமான ஆதாரமும் உண்மைத்தன்மையும் இல்லாத இதுபோன்ற ஏராளமான மருத்துவச் செய்திகள், நாள்தோறும் வாட்ஸ் அப் மூலம் மக்களிடம் பரப்பப்பட்டுத் தவறான புரிதலையும் மூடநம்பிக்கைகளையும் அதிகரிக்கின்றன.

படிப்பதற்கு ஒவ்வொரு தகவலும் தேர்ந்த மருத்துவ வல்லுநர்களால் எழுதப்பட்டதைப் போலவே இருக்கும். நம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட யாரோ ஒரு கண்ணியவான்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில், முதல் நாலு வரி படித்த உடனேயே தங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும், தாங்கள் இணைந்திருக்கும் அனைத்துக் குழுக்களிலும் பகிர்ந்துவிட்டுத்தான் பலரும் மறுவேலை பார்க்கிறார்கள்.

இது நல்ல முடிவா?

இதில் என்ன தவறு இருக்கிறது என்கிற கேள்வி தோன்றலாம். நம் மக்களில் பெரும்பாலானோருக்கு, வரும்முன் காப்பதில் அக்கறை இல்லை. நோய் அதுவாகவே வந்து வீட்டுக் கதவை வேகமாகத் தட்டும்வரை காத்திருப்பார்கள். நோய் வந்த பிறகும் அதற்கான சிகிச்சையைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை. நோய் குறித்த அடிப்படை விழிப்புணர்வைக்கூடப் பெறுவதும் இல்லை. மருத்துவர் சொல்வதைவிட அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் சொல்வதைக் கேட்டு, அதன்படிதான் நடப்பார்கள்.

யாருக்காவது மன அழுத்தம் வந்து அவதிப்பட்டாலோ, வலிப்பு ஏற்பட்டாலோ மருத்துவரிடம் செல்வதைவிட, மந்திரித்துக் கயிறு கட்டிக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறவர்களால் நிறைந்தது நம் சமூகம். இப்படியொரு சமூகத்துக்குத்தான் நாம் நாளொன்றுக்குப் பத்துக்கும் குறையாத தவறான மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

நீரிழிவு சதி

எனக்குத் தெரிந்த ஒருவர், அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டவர். தன் குடும்பத்தில் யாருக்கும் எந்த வியாதியும் இல்லை என்பதால், தனக்கும் எதுவும் நேராது என்று அடிக்கடி சொல்வார். காய்ச்சல் என்று மருத்துவமனைக்குச் சென்றார். ரத்தப் பரிசோதனையில் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது.

அதற்கான மருந்துகளைச் சாப்பிட்டுவந்தவர், திடீரென ஒருநாள் மாத்திரைகளைச் சாப்பிடுவதைச் சட்டென்று நிறுத்திவிட்டார். காரணம் கேட்டபோது, “சர்க்கரை நோய்ங்கறது வியாதியே இல்லையாம். எல்லாம் வெளிநாட்டுக்காரன் சதியாம். அவன் ஊரு மாத்திரைய விற்க, நாமதான் கிடைச்சோமா?” என்று பொரிந்து தள்ளினார். என்னவென்று விசாரித்ததில் வாட்ஸ் அப் தகவல் உபயம்!

ரத்தச் சர்க்கரை அதிகரிப்பு என்பது ஒரு நோயே இல்லை என்று சொன்னவர் யார் என்று இவருக்குத் தெரியாது. இவருக்கு எந்த அளவுக்கு ரத்தச் சர்க்கரை இருக்கிறது என்பது, தகவலைப் பரிமாறியவருக்கும் தெரியாது. கண்ணைக் கட்டிக்கொண்டு அடுத்தவருக்கு வழிகாட்டுவது போலத்தான், இதுபோன்ற எந்த அடிப்படையும் இல்லாத மருத்துவத் தகவல்களைப் பரிமாறுவதும்.

மருந்தில்லா மருத்துவம்?

நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு வகைப் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்று மத்திய அரசின் மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஆனால், ‘செலவே இல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்,’ என்ற அறிவிப்போடு உலாவரும் வாட்ஸ் அப் தகவல், ஏதோ ஒரு பழத்தின் பெயரையோ, அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் பெயரையோ பரிந்துரைக்கும்.

தொடர்ச்சியான சிகிச்சையிலும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டிய புற்றுநோய் போன்ற தீவிர நோய்க்கு இப்படிப் பத்தாம்பசலித்தனமாக ஒரு பரிந்துரையை முன்வைக்கிறோமே என்று பலரும் யோசிப்பதில்லை. அடுத்தவருக்குப் பயன்படட்டுமே என்ற ‘நல்ல எண்ண’த்தில் அந்தச் செய்தியைப் பகிரும் பலர், அது உண்மையாக இருக்குமா என்ற கேள்வியை முதலில் தங்களுக்குள் கேட்டுக்கொள்வதும் இல்லை. குறைந்தபட்சம் தங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களை அணுகி உறுதிசெய்துகொள்வதுகூட இல்லை.

‘ஒரு நாளுக்கு இரண்டு கப் ஜூஸ் குடித்தால் ஒரே மாதத்தில் பத்து கிலோ எடையைக் குறைக்கலாம்’, ‘இந்த விழுதை முகத்தில் பூசினால் பேரெழில் பெறலாம்’, ‘வெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டுவந்தால் ஆண் குழந்தை பிறக்கும்’ என்கிற ரீதியில் பகிரப்படும் செய்திகளும் கணக்கில் அடங்காதவை. இப்படிப் பரிந்துரைக்கப்படுகிறவை எல்லாமே, அதிகபட்சம் இரண்டு பேருக்குக்கூட ஒத்துவராதவை. சிகிச்சை முறைகளே ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறபோது, எந்தவித ஆதாரமும் இல்லாத இதுபோன்ற பொத்தாம்பொதுவான பரிந்துரைகளை வைத்து என்ன செய்வது? இவற்றைப் படித்துவிட்டு, மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் தாங்களாகவே களத்தில் இறங்கி அவதிப்படுகிற செயல்வீரர்கள் பலர்.

வதந்தியைப் பரப்பாதீர்கள்

பெரும்பாலோர் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உட்கொள்ளும் ஒரு மாத்திரையை, இனிமேல் தயவு செய்து உட்கொள்ள வேண்டாம் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் பரப்பப்பட்டது. அந்த மாத்திரை மினுமினுப்புடன் இருக்குமாம், அதில் ஒரு வகை வைரஸை வைத்து அனுப்பியிருக்கிறார்களாம். அதனால் அதைத் தவிர்க்க வேண்டுமாம். ‘சொல்வது என் கடமை, அதுக்கு மேல உங்க இஷ்டம்’ என்று முடிகிற அந்தச் செய்தியைப் படித்த பிறகு காய்ச்சலுக்கு அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள நம்மில் எத்தனை பேர் விரும்புவோம்?

நம் முன்னோர்களைப்போல் அல்ல, நம் வாழ்க்கை. அவர்களின் சராசரி ஆயுட்காலம் குறைவு என்றாலும், இறுதிவரை வைரம் பாய்ந்த கட்டையாக வாழ்ந்து மறைந்தார்கள். ஆனால், இன்று பலருக்கும் 'என்பு தோல் போர்த்திய உடம்பாக' இருக்கிறதே தவிர, நோய்களை எதிர்த்துப் போரிடும் உடல் ஆற்றலின் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. ரசாயனங்களில் விளையும் உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற சூழல், கட்டுக்கடங்காத மாசு, கதிர்வீச்சு, ஒழுங்கற்ற வாழ்வியல் முறை என்று ஏராளமான அச்சுறுத்தல்களைத் தாண்டித்தான், நாம் உயிர்பிழைத்திருக்கவே செய்கிறோம்.

இப்படியொரு சூழலில் நோய்களின் தாக்கம் என்பது இயல்பானது. அதைக் களையவும் குறைக்கவும் மருத்துவத்தின் உதவி தவிர்க்க முடியாதது. அதனால் நோய், மருத்துவ உதவி தொடர்பான செய்திகளின் நம்பகத்தன்மையை அறிந்த பிறகு அவற்றைப் பகிருங்கள். அதுவே நாம் இன்னொரு உயிருக்குச் செய்யும் பேருதவி.

முகமூடி அறிவாளிகள்

“தங்களுக்கு இல்லாத அடையாளத்தை உருவாக்க நினைக்கிறவர்களே வாட்ஸ் அப்பில் தகவல்களை அதிகமாகப் பகிர்வார்கள்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டி.வி.அசோகன். “தங்களோட கருத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறவர்கள், கூச்சப்படுகிறவர்களுக்குக் கிடைத்திருக்கும் கச்சிதமான முகமூடி, இந்த வாட்ஸ் அப். இதன் மூலம் அவர்கள் தங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஒரு நாளைக்குப் பத்துத் தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரிமாறிவிட்டு, தன்னைச் சிறந்த ஆளுமையாகவும் அறிவாளியாகவும் காட்டிக்கொள்ள நினைப்பார்கள்.

தவிர, வாட்ஸ் அப் என்பது குப்பை குவிந்து கிடக்கும் பெரிய கிடங்கு போல. அதில் வருகிற எதுவுமே ஆதாரப்பூர்வமானவையோ, அங்கீகரிக்கப்பட்டவையோ அல்ல. அதனால் எந்தச் செய்தியைப் படித்தாலும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு” என்கிறார் அவர்.

ஆரோக்கியம் முக்கியமில்லையா?

சில நாட்களுக்கு முன் ரூபெல்லா/தட்டம்மை தடுப்பூசி தொடர்பாகப் பரவிய வதந்தி இதுபோன்ற வாட்ஸ் அப் தகவல்களின் நம்பகத்தன்மை இல்லாமைக்குச் சிறந்த உதாரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் சிவராமக் கண்ணன். “வாட்ஸ் அப்பில் வருகிற 99 % மருத்துவத் தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவை, போலியானவை. வித்தியாசமா எதையாவது செய்யணும், பரபரப்பை ஏற்படுத்தணும் என்கிற நோக்கில், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒரு மருத்துவத் தகவல் வந்ததுமே, அதன் நம்பகத்தன்மையை அறியாமல் அதை அடுத்தவருக்கு ஃபார்வர்டு செய்யக் கூடாது. எந்தத் தகவலாக இருந்தாலும் அதை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். காரணம் இது நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது,” என்கிறார் சிவராம் கண்ணன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்