சந்தேகம் சரியா 27: இடுப்பில் பர்ஸ் வைத்தால் இடுப்பு வலி வருமா?

By கு.கணேசன்

நான் எப்போதும் பேண்ட் பாக்கெட்டில்தான் பர்ஸை வைப்பேன். இது தவறு என்கிறான் என் நண்பன். அப்படித் தொடர்ந்து வைக்கும்போது நாளடைவில் ‘சியாட்டிகா’ எனும் இடுப்பு வலி, கால் வலி என்று பல தொல்லைகள் வரும் என்று ஒரு மருத்துவப் பத்திரிகையில் படித்ததாகச் சொல்கிறான். இது உண்மையா?

இது உண்மைதான்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்சினைகளில் கீழ் முதுகு வலி (Low Back Pain) இப்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. முன்பு இது முதியோர் பிரச்சினையாக இருந்தது. இப்போது இது இளைஞர்களுக்கும் வருகிறது. இது தனிப்பட்ட ஒரு நோயல்ல; இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு.

பணி நிமித்தமாகத் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு உட்கார்ந்தே இருப்பது, கூன் விழுந்த நிலையில் உட்காருவது, தொடர்ச்சியாகக் கணினி திரை முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, கால்சியம், வைட்டமின் டி ஊட்டச்சத்துக் குறைவு, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு ஜவ்வில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.

சியாட்டிகா என்றால் என்ன?

முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதன்மையான காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, ஜவ்வு விலகுவது (Disc prolapse); மற்றொன்று, முள்ளெலும்புகளின் பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக, இடுப்பிலிருந்து காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இந்த வலிக்கு ‘சியாட்டிகா’ (Sciatica) என்று பெயர் வந்தது.

ஆரம்பத்தில் இந்த வலியானது கீழ் முதுகில் அவ்வப்போது ஏற்படும். பெரும்பாலோர் இதை வாய்வு வலி என்று தீர்மானித்துச் சிகிச்சை எடுக்காமல் இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ காலுக்கோ, மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் ஏற்படும். பலமாகத் தும்மினாலோ முக்கினாலோ வலி கடுமையாகும்.

இடுப்பில் பர்ஸ் வைத்தால்?

இன்றைக்கு ஆண்களில் பலரும் பர்ஸை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பாக்கெட் உள்ள இடுப்புப் பகுதி வழியாகத்தான், சியாட்டிகா நரம்பு காலுக்குச் செல்கிறது. கனமான பர்ஸை மட்டுமல்ல, ஸ்மார்ட் போன் போன்ற கனமான செல்போனையும் இடுப்பில் வைத்துக்கொண்டு தொடர்ந்து பல மணி நேரத்துக்கு உட்கார்ந்தே வேலை செய்யும்போதும், வாகனங்களில் உட்கார்ந்து பயணிக்கும்போதும், இவற்றின் பளுவானது சியாட்டிகா நரம்பை அழுத்துவதால், இடுப்பு வலியும் கால் வலியும் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு மருத்துவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டது. அவர் தன் இருப்பிடத்தில் உட்கார்ந்து நோயாளிகளைப் பரிசோதிக்கத் தொடங்கியதும் வலது இடுப்பிலும் வலது காலிலும் வலி ஏற்பட்டது. முதலில் அவருடைய வலிக்குக் காரணம் சரியாகத் தெரியவில்லை. பல பரிசோதனைகள் செய்தும் அனைத்தின் முடிவும் ‘நார்மல்’ என்றுதான் வந்தன. பல மாதங்களாக அவருக்குத் தரப்பட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கும் பெரிதாக எந்தப் பலனும் இல்லை.

இறுதியில், அவர் எப்போதும் வலது இடுப்பில் பாதுகாக்கும் கனமான பர்ஸை எடுத்து முன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டதும், அடுத்த சில மாதங்களில் அவருடைய இடுப்பு வலியும் கால் வலியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.

(அடுத்த வாரம்: வெறும் வயிற்றில் வெண்ணெய் சாப்பிடலாமா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்