நவ. 14 - உலக நீரிழிவு நோய் நாள்
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்ற நிலை உருவாகி வருகிறது. முதுமை அடைந்தால்தான் வரும் என்ற நிலைமை மாறி, இளம் வயதிலேயே இந்தத் தொற்றாத நோய் பெருக ஆரம்பித்துவிட்டது.
உடல் இயக்கம் இல்லாமை, கொழுப்பு-சர்க்கரை கொண்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதும், உடல் ஊதுவதும்தான் இதற்குக் காரணங்கள்.
நீரிழிவு நோயின் அடிப்படைகளை முழுமையாக அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.
தேவை மாற்றம்
இதயம், கண் சார்ந்த பிரச்சினைகள், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு என முக்கியமான நோய்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழியே நீரிழிவு நோய்தான். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு சாகசம்தான்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிப்பது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல. அதற்காகச் சிறிது மெனக்கெடல் வேண்டும். உணவு முறையில் மாற்றம், உணவு உட்கொள்வதில் மாற்றம், உடற்பயிற்சி செய்வதில் மாற்றம் எனப் பல மாற்றங்களை நீரிழிவு நோயாளிகள் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
உணவு முறை
# நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க சமச்சீரான உணவு அவசியம்.
# தினமும் வேளாவேளைக்குச் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இதுதான் மிக மிக அவசியம்.
# பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் நன்மை கிடைக்கும்.
# புரதச் சத்து உணவு வகைகளை மிதமாக உட்கொள்ள வேண்டும். மிக அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகங்களைப் பாதிக்கும்.
# மாவுச் சத்து உணவு வகை களை மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பதும் நல்லது.
# சாக்லெட், இனிப்பு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
# மது அருந்துபவர்கள், மதுவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
# உடல் நலத்தை முழுமையாகப் பாதுகாக்க உடற்பயிற்சிகள் உதவுகின்றன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும்.
# ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், டைப் 2 எனப்படும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
# டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முறை யாக உடற்பயிற்சி செய்வதன் மூலமும் அளவான சத்துணவைச் சாப்பிடுவதன் மூலமும் இன்சுலின் பயன்பாட்டையோ, வேறு மருந்துகள் சாப்பிடுவதையோ குறைத்துக்கொள்ள முடியும்.
# டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மட்டுமே ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவாது. அதேசமயம் இன்சுலின் முழுமையாகச் செயலாற்ற உடற்பயிற்சி உதவுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென மாறாமல் இருக்க, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு போதுமான அளவு சாப்பிட வேண்டும்.
முறையான சோதனை
# நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை 2-3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. டைப் 2 நோயாளிகள் ஹெச்பி.ஏ.1.சி. எனப்படும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி அளவையும் எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கும்.
# ஆண்டுக்கு எத்தனை முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது ஒருவருக்கு இருக்கும் நீரிழிவின் வகையைப் பொறுத்தும், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைப் பொறுத்தும் மாறுபடும்.
சிகிச்சை முறை -டைப் 1
# ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளலாம் அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் ஆலோசனைப்படி இதைப் பின்பற்ற வேண்டும்.
# டைப் 1 நீரிழிவு நோய் இருந்தால், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். நீரிழிவின் தன்மையைப் பொறுத்துத் தினமும் எத்தனை முறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரே முடிவு செய்வார்.
# ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால், அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.
# டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டாலும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடக் கூடாது. உணவுக் கட்டுப்பாட்டையும் கைவிடக் கூடாது.
சிகிச்சை முறை - டைப் 2
# டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முறையான உணவுப் பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும்.
# ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் வரவில்லை என்றால், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டால், உடலில் இன்சுலின் சிறப்பாகச் செயல்பட அவை உதவும்.
# ஒருவேளை மாத்திரையால் பலன் கிடைக்காவிட்டால், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.
# குளுக்கோஸ் அளவைக் கட்டுக் குள் வைப்பதன் மூலம் வேறு உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.
எச்சரிக்கை
# நீரிழிவு நோய் சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். அதிக அளவு இன்சுலின் எடுத்துக்கொள்வது அல்லது அதிக உடற்பயிற்சி காரணமாக ‘ஹைபோகிளைசிமியா’ ஏற்படலாம். அதாவது, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவது. இது நீடித்தால் வலிப்போ, சுயநினைவை இழக்கும் நிலையோ ஏற்படலாம்.
# ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதாக உணர்ந்தால், உடனடியாகச் சிறிது சர்க்கரை, சாக்லெட், பழரசம் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடலாம். பிறகு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைப் பரிசோதித்து மருத்துவர் உதவியை நாடலாம்.
# ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமாக இருந்தால் ‘டயாபெடிக் கீட்டோ அசிடோசிஸ்’என்ற பாதிப்பு வரலாம். இது பொதுவாக டைப் 1 நோயாளிகளுக்குக் காணப்படும்.
# சிலர் உடல்நலம் சரியில்லாதபோது சரியாகச் சாப்பிட மாட்டார்கள். அப்போது இன்சுலின் ஊசியையோ, மாத்திரையையோ கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிடாதபோது குளுக்கோஸ் அளவு குறைந்தே காணப்படும். சாப்பிடாமல் மேற்கொண்டு ஊசி, மருந்து எடுத்துக்கொள்ளும்போது, அது பிரச்சினையை ஏற்படுத்திவிடலாம். எனவே, அந்த நேரத்தில் குளுக்கோஸ் அளவைப் பார்ப்பது நல்லது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago