எனக்கு 50 வயதாகிறது. கடந்த 5 வருடங்களாகக் கடுமையான முதுகுவலியால் அவதிப்படுகிறேன். என்னால் அலுவலகத்தில் அரை மணி நேரம்கூட உட்கார்ந்து வேலை செய்ய முடிவதில்லை. இதற்கு ஆயுர்வேத ரீதியாக ஏதாவது தீர்வு உண்டா? - பி.எம்.கே. ராமனாதன், மின்னஞ்சல்
பொதுவாக எல்லா மனிதரும் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் முதுகு வலியால் அவதிப்படுகிறார். அதுவும் நமது ஊர் ரோடுகளில் பயணிக்கும்போது கட்டாயம் முதுகுவலி வந்துவிடும். சில நேரங்களில் முதுகுவலிக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில் கண்டுபிடிக்கும் முன், தானாகவே முதுகுவலி குறைந்துவிடும். சில நேரங்களில் நாள்பட்டு காணப்படும்.
மனிதனின் முதுகெலும்புத் தொடர், ஒரு தனி எலும்பு அல்ல. 33 எலும்புகள், தசைகள், தசை நார்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியாக இணைந்த தொடர் சங்கிலியாகும்.
முதுகெலும்புத் தொடர், பார்ப்பதற்குக் கரும்புக் கணுக்களைப் போல இருக்கும். இது அடியில் பருமனாகவும், மேலே போகப் போக மெலிதாகவும் காணப்படும். அதாவது நமது கழுத்துப் பக்கம் உள்ள முதுகெலும்புப் பகுதி மிகச் சிறியது. ஆனால், அந்த இடத்தில் இருக்கும் தண்டுவட நரம்புப் பகுதி பெரிதாக இருக்கும். பிறகு கீழே வர வரத் தண்டுவடத்திலிருந்து நரம்புகள் மற்ற பாகங்களுக்குப் பிரியப் பிரிய, தண்டுவடம் மெலிந்து விடுகிறது.
சவ்வு விலகல்
மேலே சொன்ன Herniated disk, Slipped disk என்ற இரண்டு எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு விலகல் பிரச்சினை இன்று பலருக்கும் காணப்படுகிறது. இவ்வாறு விலகிய சவ்வானது அருகில் இருக்கும் நரம்பு அல்லது தண்டுவடத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
தண்டுவட எலும்புகளுக்கு இடையிலேயே சவ்வு போன்ற ஒரு பொருள் உண்டு. பார்ப்பதற்குப் பரோட்டா போன்று இருக்கும். இதன் காரணமாகத்தான் தண்டுவட அசைவுகள் ஏற்படுகின்றன. இது தன்னிடத்தில் இருந்து கிழியலாம். இதன் காரணமாக அடியோ, அழற்சியோ இருக்கலாம். இதற்கு வலி, மரத்துப் போதல், பலம் குறைதல் ஆகியவை குறியீடுகளாகக் காணப்படும். குறிப்பாக இடுப்புப் பகுதியில் இது அதிகம் காணப்படுகிறது. நடு முதுகுப் பகுதியில் (Thoracic) அவ்வளவாகக் காணப்படுவது இல்லை. இவ்வாறு அழுத்தப்பட்ட சவ்வானது நரம்பு மண்டலத்தில் அழுத்தம் கொடுக்கும்போது, காலில் வலி ஏற்படுகிறது. இதை radiculopathy என்று சொல்கிறார்கள்.
நடு வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும், கடுமையான வேலை செய்பவர்களுக்கும் அதிக வலி காணப்படும். குதப் பகுதியும் பின் பகுதியும் மரத்துப் போகும். இது ஆடு சதைவரை வரும். கழுத்தில் சவ்வு விலகினாலும் வலி வரும். இரவு வேளையில் தும்மினால், இருமினால், சிரித்தால் வலி அதிகரிக்கும். நடந்தாலும் வலி கூடும், தசைகள் வலுவிழக்கும். சில நேரங்களில் பொருட்களைத் தூக்குவதற்குச் சிரமமாக இருக்கும்.
எதனால் வந்தது வலி?
உணர்ச்சி இருக்கிறதா, எவ்வளவு பலம் இருக்கிறது, எப்படி நடக்கிறார்கள், நிற்க முடிகிறதா, நடக்க முடிகிறதா, உட்கார முடிகிறதா, படுத்துக்கொள்ள முடிகிறதா, நேராகப் படுத்துக்கொண்டு காலை தூக்க முடிகிறதா, முன்னோக்கி வளைய முடிகிறதா, பின்னோக்கி வளைய முடிகிறதா என்பதையெல்லாம் சிறிய பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், முதுகு சிக்கலால் வலி ஏற்பட்டால் தொடையிலிருந்து கால்வரை சுரீர் என்று இழுக்கும் உணர்வு ஏற்படும். கணுக்கால்வரை இது பரவும். முதுகைச் சற்றுத் திருப்பினாலோ, குனிந்து வேலை செய்தாலோ இது அதிகமாகும். ஸயாடிகா (Sciatica) எனும் இந்த வலி, இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டுவிட்டு எழுந்திருக்கும்போதும் இந்த வலி அதிகரிக்கும்.
பொருள்களைத் தவறாகத் தூக்கினாலோ, மாறுபட்ட நிலையில் அமர்ந்தாலோ, படுத்தாலோ முதுகுப் பிடிப்பு ஏற்படும். அல்லது வாதத்தாலும் (arthritis) முதுகு பாதிக்கப்படலாம். அதிகமாக விளையாடுதல், அடிபடுதல், அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் போன்றவற்றாலும் இப்பாதிப்பு ஏற்படலாம்.
தண்டுவடத்துக்கு இடையே அகச் சுருக்கம் ஏற்படலாம். இதை canal space என்கிறார்கள். இது சுருங்கினாலும் முதுகுவலி வரும். இம்மாதிரி முதுகுவலி வரும்போது, தசைப்பிடிப்பு ஏற்பட்டு முதுகு வளைந்து காணப்படும். இதற்கு scoliosis என்று பெயர். இதில் இடது புறமாகவோ, வலது புறமாகவோ முதுகு வளைந்து காணப்படும். இதில் ankylosis spondylitis என்று சொல்லப்படும் முதுகு எலும்பு கூன்வாதத்தில் முன்பக்கமாக வளைந்திருக்கும். இது அல்லாமல் piriformis syndrome என்று சொல்லப்படும் தசைப்பிடிப்பும் உண்டு.
ஆறு வாரச் சிகிச்சை
அதிக எடை கொண்டவர்கள், கர்ப்பிணிகள், கனமான எடையைத் தூக்குபவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், முன்னோக்கி வளைபவர்கள், துள்ளிக் குதிப்பவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் வரும். ஒரு மருத்துவரால் நோயாளி சொல்வதைக் கேட்டே இந்த நோயைப் பெருமளவு கண்டுபிடித்துவிட முடியும். சில நேரம் ESR போன்றவற்றை எடுத்துவிட்டு MRI scan lumbar spine screen sacroiliac and hip joint பரிசோதனை செய்ய வேண்டும். இதில் சவ்வு விலகுதல், நரம்பு மண்டல அழுத்தம், தண்டுவட அகச் சுருக்கம் போன்றவை தெரியும்.
இவற்றைக் கண்டுபிடித்த பிறகு ஓய்வு கொடுத்தல், சில நேரங்களில் traction போன்றவற்றைச் செய்வார்கள். ஆயுர்வேதத்தில் இதற்கு அற்புதமான சிகிச்சை உள்ளது.
ஆயுர்வேதத்தில் அபான வாயுவைச் சீர்படுத்தும் ஆமணக்கு வேர் கஷாயம், கருங்குறிஞ்சி வேர் சேர்ந்த சகசராதி கஷாயம், நொச்சியால் காய்ச்சப்பட்ட ஆமணக்கு எண்ணெய் சேர்த்து, தசமூலம், உப்பு காடி சேர்த்த எண்ணெய் குளியல், வஸ்தி எனப்படும் ஆசனவாய் மூலம் செய்யப்படும் பீச்சாங்குழல் சிகிச்சை போன்றவை செய்யும்போது, அற்புதமான பலன் கிடைக்கும். பல சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையே தேவைப்படுவதில்லை.
நவீன மருத்துவம் நல்ல மருத்துவமாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் நோய் தானாகக் குணமாவதற்கு நேரம் கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலேயே, மீண்டும் சவ்வு பிதுங்கிப் பாடாய்ப்படுத்தலாம். உடற்பயிற்சிகளும் நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். தசைகளை வலுவூட்டும் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலில் மெதுவாக வேலைகளைச் செய்து, பின்பு கடுமையான வேலைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். ஆறு வாரங்களில் இவர்களைச் சரிப்படுத்தி விடலாம். அதன் பிறகு இவர்கள் தங்கள் இயல்பான வேலைகளைச் செய்யலாம். அறுவை சிகிச்சையிலும் பின்விளைவுகள் உண்டு. வலி மாறாமல் போகலாம். Discitais ஏற்படலாம்.
அபூர்வமாக மூத்திரம் போவதையும், கால் அசைவுகளையும் இந்நோய் பாதிக்கும். வேலை செய்யும் இடத்திலும், விளையாடும் இடத்திலும், கனமான பொருட்களைத் தூக்கும் இடத்திலும் கவனமாகச் செயல்பட்டால், முதுகு காயப்படுவதைத் தவிர்க்கலாம். உட்காரும் நாற்காலி நல்ல தரமாக இருக்க வேண்டும். இவர்கள் சில சமயம் சரிந்து நடப்பார்கள். சிகிச்சை செய்யும்போது இது சரியாகிவிடும். பயப்பட வேண்டாம்.
(அடுத்த வாரம் நிறைவடையும்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago