உயிர் வளர்த்தேனே 27: வேனிற் காலத்துக்கு ருசி கூட்டும் உணவு

By போப்பு

இளவேனிற் காலம் புறச் சூழலில் வெப்பத்தை உண்டாக்கினாலும், அதை எதிர்கொள்வதற்குத் தேவையான குளுமையையும் இயற்கை நமக்குச் சேர்த்தே அளிக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு கோலங்களில் எழிலூட்டி, அழகு காட்டும் இயற்கை அன்னை, தன் பிள்ளைகளாகிய நமக்குத் தேவையானவற்றையும் கொடுக்கத் தவறுவதில்லை.

இளவேனிலின் தொடக்கத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டாலும் வெப்பத்தின் தாக்கம் உயருகிற நாட்களில், ஒரு கோடை மழைக்குப் பின்னர்க் குழந்தைகளின் மென்விரல்களைப் போன்ற இளந்தளிர்களைத் துளிர்க்கின்றன. பொங்கிச் சுட்டெரிக்கும் வெயிலை மரங்களின் தளிர்கள் தணிக்கின்றன.

இயற்கைக்கு இசைவோமா?

நாம் உண்பதற்கு ஏராளமான கனி வகைகளை அதுபோலவே வேனிற் காலத்தில் வழங்குகிறது இயற்கை. தென்னை இளநீரை அளிக்க, பனை பதனியும் நுங்கையும் வழங்கும். அனைத்துப் பழங்களும் விளைச்சலின் உச்சத்தில் இருக்கும் காலம் வேனிற் காலம். சாறு பொங்கும் கனிகள், உயிர்களுக்கு ஆற்றலை வழங்குகின்றன.

இயற்கையோடு இணக்கமாக இருந்தவரை, மனித இனம் உயிர்த்திருக்கத் தேவையான அனைத்தையும் இயற்கை அன்னை வழங்கிவந்தாள். மனித இனம் இன்று பேராசையால் தன்னிலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டதால், தானும் துன்பப்பட்டு, மற்ற உயிர்களையும் துன்புறுத்துகிறது. இதைக் கண்டு பொறுக்க முடியாத இயற்கை அன்னையும் அவ்வப்போதுச் சீற்றம் கொள்கிறாள். செவ்வாய்க்கும் புதனுக்கும் ஆய்வுக் கலங்களை அனுப்பிக்கொண்டிருந்தாலும்கூட, இறுதியில் நாம் இயற்கையின் பிள்ளைகள்தான். அவளுடன் இசைவாக இருப்பதே நாம் வாழ்வதற்கான நெறி. சரி, உணவுக் கதைக்குத் திரும்புவோம்.

வெயிலுக்கேற்ற நீராகாரம்

புறச் சூழலில் வெப்பம் நிலவும் இந்த மாதங்களில் உடல் எரிப்பதற்கு ஊக்கம் அளிக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த உணவைத் தவிர்ப்பதே ஏற்றது. அந்த வகையில் முந்நாள் இரவில் வடித்த சோற்றில், வடிகஞ்சி ஊற்றி ஊற வைத்து, மறுநாள் காலையில் சோற்றை நீருடன் விரல்களால் மையப் பிசைந்து கரைத்து அருந்தினால், அந்த நீராகாரத்தின் மென்புளிப்பும் உப்பும் தொண்டையில் இதமாக இறங்கும். வயிறு நிறைவதற்கு முன்பே மனம் நிறையும். குளிர்ந்த சோற்றுடன் நீராகாரம் பருகும்போது, நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புத்துணர்வு பெருகுவதைத் துல்லியமாக உணர முடியும். இந்த உணர்வை அறிவதற்கு ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் நிதானமாகப் பற்களால் மென்று உணவைச் சாறாக்கி உள்ளிறக்குவதும், உள்ளே சென்ற சாறு அடுத்து என்ன ஆகிறது என்று கவனிப்பதும் அவசியம்.

மரியாதை கொடுக்கிறோமா?

தற்காலத்தில் அநேக வீடுகளில் தொலைக்காட்சி ஓடினால் ஒழியக் குழந்தைகள் உண்ண மறுக்கின்றனர். இதற்குக் காரணம், ‘தொலைக்காட்சி நம்மை அடிமைப்படுத்துகிறதா? அல்லது உணவின் சுவையின்மையா?’ என்று தனியாகப் பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

எது எப்படியானாலும் நம் உயிருக் கும் உடலுக்கும், ஊட்டமளிக்கும் உணவுக்குப் போதிய மரியாதை கொடுத்து உண்பதை முதல் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். உணவுக்குத் தனித்த மரியாதையைத் தராமல் அதனின்று உயிர்ச் சத்தைப் பெற முடியாது. நல்லது. நீர்த்த பழங்கஞ்சி காலை வேளைக்குப் பொருத்தமாக இருக்கும். மதிய வேளைக்கு? அதைத்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

முக்கனிச் சோறு தேவாமிர்தம்

ஒரு புறம் இளங்குழைவாக வடித்த பச்சரிசிச் சோற்றைச் சூடு முற்றாக நீங்கும்வரை ஆற விட வேண்டும். மறுபுறம் பலாச் சுளை, மாம்பழம், தேன் வாழை அல்லது கற்பூரவல்லி வாழை ஆகிய மூன்று கனி வகைகளையும் பொடித் துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்துப் பால் எடுத்துச் சோற்றில் ரசம் போல ஊற்றி, அதன் மேல் அரிந்து வைத்த பழத்துண்டுகளை பொலபொலவென்று உதிர்த்துவிட வேண்டும். அதற்கு மேல் பொடித்து வைத்த பனங்கருப்பட்டியைப் பட்டும் படாமல் தூவ வேண்டும்.

அடுத்து, சோற்றுக்கும் வலிக்காமல், பழங்களுக்கும் வலிக்காமல் மென்மையாகப் பிசைய வேண்டும். சிறுசிறு கவளமாகத் திரட்ட, விரல்கள் வழியாகத் தேனும் பாலும், சோறும், பழங்களும், கருப்பட்டியும் இணைந்த பாகு வடியும் பாருங்கள்.

‘தேவாமிர்தம்’, ‘தேவாமிர்தம்’ என்று ரொம்ப காலமாக வாயால் சொல்லிக் கொண்டிருந்தார்களே… அது இப்போது உங்களது உள்ளங்கையில் மெய்யாகவே திரண்டு கனிவு காட்டும். உண்ணும்போது நாவை வருடும் மென்மையான இனிப்பு சுவை, இதுவரை நீங்கள் உண்டு களித்த அத்தனை இனிப்புகளையும் ஏளனம் செய்துவிட்டு, உடலெங்கும் பரவும்.

நீர்த்தன்மையுள்ள உணவு

கோடைக் காலத்தில் புறச் சூழலில் நிலவும் வெப்பத்தை எதிர்கொள்ள நம் உடலின் உள்ளே இருக்கிற நீர், தோலின் மேலடுக்குக்கு வந்துவிடும். எனவே அதை ஈடு செய்து, அடுத்தடுத்து வெப்பத்தை எதிர்கொள்ள உடலுக்கு ஊக்கம் அளிக்கும் நீர்த்தன்மையுள்ள உணவையே அதிகம் உண்ண வேண்டும். அதற்கு மேற்சொன்ன முக்கனிச் சோறு பொருத்தமான ஒன்று.

கடைத் தயிரா?

பால் பொருட்கள் எந்தளவுக்கு ரசாயனக் கலப்பாகி விட்டது என்பதை முன்னரே பார்த்தோம். அதிலும் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் டப்பா தயிர் வந்துவிட்டன. அடுப்பு மூட்டி, சூடாகக் குழம்பு வைப்பதற்குப் பதிலாக வெயிலுக்கு இதமாக ஒரு டப்பாத் தயிரை வாங்கி, கெட்டியாகப் பிசைந்து உண்டால் சுகம் என்று பலரும் சோம்பல் கணக்கு ஒன்றைப் போடுகிறார்கள்.

நாவின் சுவை மொட்டுகளை வழித்து எடுக்கும் வன்மம் மிக்க, இந்தப் பால் அல்லாத ஆலைப் பண்டமான டப்பா தயிரைக் கொண்டு சுவற்றுக்கு வெள்ளையடிக்கலாம். அவ்வளவு வெளுப்பான அவை, பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று பாலே சத்தியம் செய்தாலும் நம்ப முடியுமா?

இந்தத் தயிர் எந்தளவுக்கு நம் உடலின் பித்தப் பையிலும் சிறுநீரகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டு வருகிறோம். இதுபோன்ற பண்டங்களைத் தொடர்ந்து உண்ண நேர்கிற சிலர், மிகவும் இளம் வயதிலேயே டயாலிசிஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நாட்டுப் பசும்பாலைக் காய்ச்சி, உறை ஊற்றி அதில் உறைந்த தயிரை நீரூற்றிக் கடைந்த மோராக இருந்தால் பாதகம் இல்லை. அதற்கு வழியில்லாத இடத்தில் தேங்காய்ப் பாலை எடுத்து, அதில் நான்கு துளிகள் எலுமிச்சை சாறு விட்டுக் கலக்கினால், அது மோராகி விடும். இந்த மோரைக் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டுத் தாளித்துச் சோற்றுடன் பிசைந்து உண்டால் முழுமையான உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவை உண்ட நிறைவை நாம் பெறலாம்.

கொதிக்காத இயற்கை ரசம்

புறச் சூழலில் வெப்பம் நிறைந்திருக்கும் இந்த மாதங்களில், இயல்பாகவே உடல் வியர்த்து வடிந்து கொண்டிருக்கும்போது, நாம் உண்ணும் உணவு மேலும் வியர்வையைப் பிழிந்து எடுப்பதாக இருக்கக் கூடாது.

தக்காளி, வெங்காயம் (சின்ன வெங்காயம் நலம்) இரண்டையும் பொடியாக அரிந்து, அடுப்பில் ஏற்றாமல் மையப் பிசைய வேண்டும். அதனுடன் கறிவேப்பிலையையும் கொத்துமல்லித் தழையையும் அரிந்து போட்டு, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ரசத்துக்குப் போடுவதில் பாதியளவே மிளகு சீரகம் பொடித்துப் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நீர் விட்டுக் கலக்கினால் குளுமையான, சத்துகள் சிதையாத இயற்கை ரசம் ஐந்தே நிமிடங்களில் தயார்.

அடுப்பைப் பற்ற வைக்க வேண்டியதில்லை; எண்ணெய்ச் செலவு இல்லை; பாத்திரம் துலக்க வேண்டியதில்லை. ஆறின சோற்றில் இந்த ரசத்தைப் பிசைந்து உண்டால் ஆயிரத்தெட்டு பக்குவத்துடன் பார்த்துப் பார்த்துச் சமைக்கும் ரசத்தைக் காட்டிலும், இயற்கை ரசம் சுவைமிக்கதாக இருக்கும். இயற்கையான சுவையைத் தருபவை சத்துகள் மிகுந்தவையாகவும் இருக்கும் என்பது நாம் முன்னரே அறிந்த ஒன்றுதான். என்னதான் இயற்கை சுவை இருந்தாலும், அவ்வப்போதுப் பிரியாணியை உண்டால் தானே வாழ்க்கை சுற்று முழுமையடைகிறது.

பிரியாணி ஏன் நம்மை அப்படி ஈர்க்கிறது? எப்போதுமே பிரியாணி என்றால் வெளியில் உண்பது மட்டும் தானா? வீட்டில் சமைக்கும் எளிய முறை கிடையாதா? உண்டு. அதை அடுத்த வாரம் பார்த்து விடுவோம்.

(அடுத்த வாரம்: பாதகமில்லாத பிரியாணி)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்