பேலியோ டயட் சர்வ ரோக நிவாரணியா?

By வினோத் ஆறுமுகம்

“இப்போ நான் கொழுப்பு மட்டும்தான் சாப்பிடுறேன், அரிசியை விட்டாச்சு. கோதுமை கூடவே கூடாது. மூன்று வேளையும் முட்டை, கறி, மீன்தான். எனது பி.பி., சுகர் எல்லாம் போயே போச்சு. இப்ப நான் சுகருக்கு மாத்திரைகூட எடுக்கறதில்லை. இதற்கு பேலியோ டயட்டுக்குதான் நான் கடமைப்பட்டிருக்கேன்” என்று என் நணபர் உற்சாகமாகக் கூறினார்.

கொழுப்புதான் முக்கிய உணவா, கொழுப்பு கெட்டதுதானே என்று நீங்கள் நினைத்தால் சற்று நிதானியுங்கள். கொழுப்பு உடலுக்கு நல்லது. கொழுப்பை முதன்மையாகக் கொண்ட உணவு முறைதான் பேலியோ உணவு முறை. நமக்கு முந்தைய தலைமுறையில் யாருக்கோ எவருக்கோ எனக் கேள்விப்பட்ட பல நோய்கள், இன்று நம் குடும்பத்தில் இருவருக்காவது இருக்கின்றன. நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், உடல் பருமன் என்று இந்தத் தொற்றா நோய்களின் பட்டியல் நீள்கிறது.

இந்த நோய்களுக்கு என்ன காரணம்?

அடிப்படைச் சத்துக்கள்

நம் உடலுக்குத் தேவையான சக்தியை முக்கியமாக மூன்று சத்துக்களிலிருந்து நாம் பெறுகிறோம்: கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம். நம் தினசரி உணவிலிருந்து இந்தச் சத்துக்களைப் பெறுகிறோம். இவற்றுடன் நமக்கு வைட்டமின்களும் கனிமச் சத்தும் தேவை. இரும்புச் சத்து, கால்சியம் என அது ஒரு பெரிய பட்டியல். அரிசி, கிழங்கு, காய்கறிகள், கோதுமை ஆகியவை கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள். மாமிசம், மீன், முட்டை, பருப்பு போன்றவற்றிலிருந்து புரதத்தைப் பெறலாம். கொழுப்பைத் தேங்காய், மாமிசம், முட்டை, நெய், பாதம், முந்திரி விதைகள், வெண்ணெய் போன்றவற்றிலிருந்து பெறலாம்.

என்ன பிரச்சினை?

நாம் உணவை உண்டவுடன், கார்போஹைட்ரேட் சர்க்கரையாக (குளுகோஸ்) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. சர்க்கரையை நம் செல்களிடம் கொண்டுசேர்க்க இன்சுலின் தேவை. ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதோ, அதற்குத் தேவையான அளவு இன்சுலினைக் கணையம் சுரக்கிறது. நாம் இப்போது சாப்பிடும் உணவு முறை, கார்போஹைட்ரேட்டை மையமாகக் கொண்டது. நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம்வரை கார்போஹைட்ரேட்தான்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உடல் பயன்படுத்திக்கொள்ளும். தேவையைவிடக் கூடுதலாக இருக்கும் சர்க்கரையைப் பிந்தைய தேவைக்காக, கொழுப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். அதிக சர்க்கரை, குறைவான உழைப்பு போன்றவற்றால் உடலில் கொழுப்பு சேரும். இந்தச் சுழற்சியால் உடலில் ‘இன்சுலின் ரெஸிஸ்ட்’ என்கிற தன்மை ஏற்படுகிறது. அதாவது இன்சுலினை செல்கள் தவிர்க்கின்றன. இன்சுலினால் தன் வேலையை முழுமையாகச் செய்ய முடிவதில்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கிறது. இதன் முதல் விளைவு ரத்தக் கொதிப்பு, கொழுப்பாக மாறும் சர்க்கரை அதிகரிப்பதால் உடல் பருமன், பின் நீரிழிவு நோய். பெரும்பாலும் நீரிழிவு நோயும் ரத்தக் கொதிப்பும் இரட்டையர்களாகவே தாக்கும்.

பேலியோ உணவின் சிறப்பு உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டைக் குறைத்துவிட்டு, கொழுப்பையும் புரதத்தையும் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். இதுவே, பேலியோ டயட். கார்போஹைட்ரேட் குறைவது ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கிறது. அதனால் இன்சுலின் சுரப்பு குறைகிறது. இப்போது நம் உடலுக்குச் சக்தி வேண்டும். உண்ணும் கொழுப்பிலிருந்து தனக்குத் தேவையான சக்தியை உடல் முதலில் எடுத்துக்கொள்கிறது. மெல்ல மெல்ல தனக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தியை, நம் உடலில் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள கொழுப்பிலிருந்து எடுக்கத் தொடங்குகிறது. விளைவு, எடை குறைகிறது. ரத்தத்தில் சர்க்கரை குறைவதால் ரத்த அழுத்தம் குறைகிறது, மெல்ல சர்க்கரையும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

அது மட்டுமா, உடலில் சக்தியின் அளவு கூடிவிடுகிறது. சர்க்கரை கொடுத்த சோர்வு, மந்தம் விலகுகிறது. இன்சுலின் ரெஸிஸ்ட் தன்மை அதிகமான பசியை உருவாக்கும். காரணம், செல்களுக்கு சக்தி வேண்டும், நாம் இதற்குத் தீனியாகப் பழக்கிவைத்துள்ள சக்தி- சர்க்கரை. உணவின் மூலம் உடம்புக்குச் சர்க்கரை கிடைக்கும். ஆனால், இன்சுலின் ரெஸிஸ்ட் சர்க்கரையை செல்களில் கொண்டுபோய்ச் சேர்க்காது. அதனால் நம் செல்கள் சோர்வடைகின்றன; மூளை மந்தமாகிறது.

சக்தி வேண்டும் என செல்கள் மூளைக்குத் தகவல் அனுப்பிக்கொண்டே இருக்க, மூளை நமக்குப் பசியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. பேலியோ உணவு முறையில், நம் உடலில் உள்ள கொழுப்பிலிருந்தே செல்கள் சக்தியை எடுத்துக்கொள்வதால், பசி குறைகிறது. மந்தமும் குறைகிறது. நம் உடலும் விசையுறு பந்தினைப்போல உற்சாகமாகிவிடுகிறது.

கொஞ்சம் வரலாறு

பேலியோ உணவுப் பழக்கத்தை 1972-ல் அமெரிக்காவில் பிரபலபடுத்தியவர் மருத்துவர் ராபர்ட் அட்கின்ஸ். இந்த உணவுப் பழக்கம் ஆதிகால மனிதரின் உணவுப் பழக்கத்தைப் போன்று இருப்பதாகக் கருதி, இதை ‘பேலியோ டயட்’ என்று அழைக்கிறார்கள். அதேநேரம் இதற்குப் பல பெயர்கள் உள்ளன: கீட்டோ டயட், அட்கின்ஸ் டயட், லோ கார்ப் டயட், புரோபயாட்டிக் டயட் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன.

கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரையாகச் சேருவதுபோல், கொழுப்பு சக்தியாக மாறும்போது, ரத்தத்தில் கீட்டோன் சேருகிறது. இந்த முறையை கீட்டோஸிஸ் என அழைப்பார்கள். அதனால் இது ‘கீட்டோ டயட்’ எனப்பட்டது. இந்த கீட்டோன்கள் அமிலத்தன்மை கொண்டவை என்பதை மறந்துவிடலாகாது.

நீங்கள் ஒரு நாளைக்கு 100 கிராமுக்கும் குறைவாக கார்போஹைட்ரேட்டை எடுத்துக்கொண்டால், பிறகு உங்கள் உடல் கீட்டோஸிஸுக்குப் பழகிவிடும். ஆனால், பேலியோ உங்களுக்குக் கொஞ்சமாவது பயன்தர வேண்டுமென நினைத்தால், ஒரு நாளைக்கு கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவை 30 கிராமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பேலியோ: சில மூட நம்பிக்கைகள்

பேலியோ டயட்டில் இருக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை, மருத்துவர்களை மீறிச் சில நபர்கள் பேலியோவைப் பற்றி அள்ளிவிடும் தவறான தகவல்கள்தான். இவற்றில் பல விஞ்ஞானத்துக்கு முற்றிலும் புறம்பானவை. வாய்க்கு வந்ததையெல்லம் கொட்டுகிறார்கள். பேலியோ உணவு முறையில் பெரிய பிரச்சினையில்லை. ஆனால், இந்த நபர்கள்தான் பிரச்சினை. பேலியோ சில நோய்களைக் குணமாக்கும், கவனக்குறைவாக இருந்தால் சில நோய்களை உண்டாக்கவும்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

எல்லாருக்குமானதல்ல

பேலியோ உணவு முறையை எல்லாரும் கடைப்பிடிப்பது சாத்தியமல்ல. அதுதான் உண்மை. டைப் 2 (Type 2) நீரிழிவு நோயை பேலியோ குணப்படுத்தும் எனத் தவறாகக் கூறுகிறார்கள். பேலியோ உணவு முறை டைப் 2 (Type 2) சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவருகிறதே ஒழிய, குணப்படுத்துவதில்லை. டைப் 1 (Type 1) நீரிழிவு நோயாளிகள் பேலியோவைப் பற்றி நினைத்துகூடப் பார்க்க முடியாது.

அதேபோல சிறுநீரகங்களில் பிரச்சினை இருந்தாலும், கல்லீரலில் பிரச்சினை இருந்தாலும் பேலியோ உணவை உட்கொள்ள முடியாது. மிக முக்கியமாக ஒருவர் பேலியோ உணவு முறையைப் பின்பற்ற வேண்டுமா, வேண்டாமா என்பதை ஒரு மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். சுயமுடிவு முற்றிலும் தவறு.

சர்வரோக நிவாரணியல்ல

தமிழகத்தில் பேலியோவை வலியுறுத்தும் குழுவினரின் கூட்ட வீடியோக்கள் யூடியூபில் உள்ளன. இந்த வீடியோக்கள் சிலவற்றில் ‘ஆர்வக்கோளாறு நபர்கள்’ பலர் பேலியோவைப் புனிதமாக்குகிறார்கள். பேலியோ ஒரு சர்வரோக நிவாரணி என்பதாக அடித்துவிடுகிறார்கள். சர்க்கரை முதல் புற்றுநோய்வரை மருத்துவப் புத்தகத்தில் சுட்டிகாட்டியிருக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான நோய்களை பேலியோ குணப்படுத்தும் என்கிறார் ஒரு நபர். இந்தக் கருத்து முற்றிலும் தவறு.

அதிகமான சர்க்கரையைக் கொண்ட சக்கை உணவுகள் (Junk Food), துரித உணவுகள் (Fast Food), உழைப்பற்ற வாழ்வு, நார்ச்சத்து குறைந்த உணவு எனத் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல் சீர்கேட்டை பேலியோ சீரமைக்கிறது. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பேலியோ ஒரு சர்வரோக நிவாரணியல்ல. இது புற்றுநோயையெல்லாம் குணப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதுபோன்ற முற்றிலும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

கொழுப்பு முதன்மையல்ல

உண்மையில் பேலியோ உணவு முறையில் கிடைக்கும் முதன்மைச் சத்து கொழுப்பு மட்டுமல்ல; புரதமும்தான். இப்போது நாம் உட்கொள்ளும் உணவு முறையில் 60 முதல் 80 சதவீதம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். அதை மாற்றி 60 சதவீதம் புரதம், 35 சதவீதம் கொழுப்பு, 5 சதவீதம் கார்போஹைட்ரேட்டாக பேலியோவில் உண்ணப்படுகிறது. முட்டையிலும் சில வகை மீன்களிலும், பெரும்பாலும் புரதமும் கொழுப்பும் மட்டுமே உள்ளன. கார்போஹைட்ரேட் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதனால் பேலியோ உணவு முறையில் இறைச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் இறைச்சி உண்ணாதவர் என்றால், புரதச் சத்து நிறைந்த சைவ உணவு வகைகள் நிறையவே இருக்கின்றன. பயப்படத் தேவையில்லை.

கட்டுரையாளர் தொடர்புக்கு: thiruvinod4u@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்