தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பது கடந்த 16 வருடங்களில் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்திருப்பதாக வரும் தகவல் நம்மை அதிர வைக்கிறது.
சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு இருந்தும் இன்றைக்கு அநேகம் பெண்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களை அறிந்தும் பெரும்பாலான மருத்துவர்களும் அறுவைசிகிச்சை பிரசவத்தையே ஊக்கப்படுத்துகிறார்கள். தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவக் காரணங்களுக்காக 10-15 சதவீதம் அளவுக்கு அறுவைசிகிச்சைப் பிரசவங்களை அனுமதிக்கலாம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆனால், இந்திய மருத்துவர்களோ இது 15-20 சதவீதம் இருக்கலாம் என்கிறார்கள்.
எனினும் இப்போது இந்த அளவெல்லாம் கடந்துவிட்டது. தனியார் மருத்துவமனைகள்தான் பணத்துக்காக அதிக அளவில் அறுவைசிகிச்சை பிரசவங்களை ஊக்குவிப்பதாக எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அரசு மருத்துவமனைகளிலும் இப்போது அறுவைசிகிச்சை பிரசவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன என்கிறார் பெண்கள், பெண்குழந்தைகள் நலன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ‘பெண் கருக்கலைப்புக்கு எதிரான பிரசார இயக்கத்தின்’ (சி.ஏ.எஸ்.எஸ்.ஏ) ஒருங்கிணைப்பாளர் பவளம்.
நம்பிக்கைக்கு மாறாக
மத்தியக் குடும்பநலம், சுகாதார அமைச்சகத்தின் தேசியக் குடும்பநல ஆய்வறிக்கை (என்.எஃப்.ஹெச்.எஸ்) 2015-16-ன் படி, தேசிய அளவில் 17.2 சதவீதமும் தமிழகத்தில் 34.1 சதவீதமும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 2005-06-ல் முறையே 8.5 மற்றும் 20.3 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 2015-16 நிலவரப்படி தேசிய அளவில் 40.9 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் 11.9 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாக என்.எஃப்.ஹெச்.எஸ். சொல்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அறுவைசிகிச்சை பிரசவங்களில் 51.3 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் 26.3 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும் நடப்பதாக அறிக்கை சொல்கிறது. அதேநேரம், தமிழகத்தில் தற்போது 99.8 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் அரசின் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
தவறான வழிகாட்டுதல்
இதையும் கள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தும் பவளம், ’’குடும்பநலத் துறை அளிக்கும் தகவல்படி 2000-2001-ல் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அறுவைசிகிச்சை பிரசவங்களின் அளவு 14 சதவீதமாக இருந்தது. 2005-06-ல் இது 21.2 சதவீதமாகவும், 2012-13-ல் 42.5 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. இப்போதைய நிலவரப்படி கடந்த 16 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பது மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடந்த பிரசவங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் அறுவைசிகிச்சை பிரசவங்கள். மருத்துவர்களின் தவறான வழிகாட்டுதல்களே அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் அதிகரிக்கக் காரணம். இது, பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்துப் போதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
ஏன் அறுவைசிகிச்சை?
அறுவைசிகிச்சைப் பிரசவங்களின் தாக்கம் குறித்து ’’அறுவைசிகிச்சை பிரசவங்கள் இப்போது நவீன முறையில் கையாளப்படுவதால் முன்புபோல சிக்கல் எதுவும் இல்லை. சுகப்பிரசவங்களின்போது கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களால், பிறக்கும் குழந்தைக்கு மூளையில் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. இவற்றைத் தவிர்க்கத்தான் பெரும்பாலானவர்கள் அறுவைசிகிச்சையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனினும், அறுவைசிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமன், ஒவ்வாமை, டைப் 1 நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகவும் தாய்மார்களும் சில சங்கடங்களை எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் வெங்கடேசன்.
12 தமிழக மாவட்டங்களில் சிசேரியன் அதிகம்
உலகச் சுகாதார நிறுவனம் 2010-ல் 137 நாடுகளில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அவற்றில் பாதிக்கும் மேலான நாடுகள் 2008-ல் மட்டும் ரூ. 230 கோடியை அவசியமற்ற அறுவைசிகிச்சை பிரசவங்களுக்காகச் செலவழித் திருப்பது ஆய்வில் தெரிந்தது.
2014-15-ல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் 35 மாவட்டங்களில் அறுவைசிகிச்சை பிரசவங்கள் அதிக அளவில் நடப்பதாகத் தகவல் உள்ளது. இதில் 12 மாவட்டங்கள் தமிழகத்தையும் 9 மாவட்டங்கள் மேற்கு வங்கத்தையும் சேர்ந்தவை.
இந்தியாவில் 2015-16 நிலவரப்படி எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாக மத்தியக் குடும்பநல அமைச்சகம் சொல்கிறது. தேசிய அளவில் மிகக் குறைந்த அளவாகத் நாகலாந்திலும் (5.8 சதவீதம்), மிக அதிக அளவாக தெலங்கானாவிலும் (58 சதவீதம்) அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago