மனித இனத்தின் முதல் சேமிப்பு உணவு பால்தான். கனி, காய், கிழங்கு, இறைச்சி ஆகியவற்றைப் பசிக்கிறபோது தேடி உண்ட ஆதித் தாய், தனது குழந்தை அழுகிற நொடியில் மார்பிலிருந்து பாலை ‘ஜஸ்ட் 2 மினிட்ஸ்'கூட காத்திருக்க வைக்காமல், அமுதமாகச் சுரந்து அளித்தாள்.
அதுபோலவே மற்ற பாலூட்டிகளும் தனது குட்டிகளுக்குப் பால் அளிப்பதை நமது மூதாதையர்கள் கவனித்துவந்தார்கள். சாதுப் பிராணியாக மாற்றப்பட்டிருந்த மாடு, ஆடு போன்றவற்றைத் தங்களுக்கு அருகில் வைத்திருந்து, பசிக்கிறபோது வேறு உணவு கிடைக்காத சூழலில் மாட்டின் மடிக் காம்பை உறிஞ்சிப் பால் அருந்தவும் கற்றுக்கொண்டார்கள்.
அந்த வகையில் பால்தான் மனித இனம் சேமித்த முதல் உணவு (Preserved food). இந்தச் சேமிக்கப்பட்ட உணவு உயிர்ச்சத்துகளும் உயிர்த்தன்மையும் நிரம்பியது. பாலுக்கு அடுத்தபடியாகத்தான் நமது மூதாதையர்கள் தானியங்களைச் சேமிக்கக் கற்றுக்கொண்டார்கள்.
தானியக் கண்டுபிடிப்பும் உற்பத்தியும் சேமிப்பும் பாதுகாப்பும் மனிதகுல வரலாற்றில் பல முக்கிய மாற்றங்களை நிகழ்த்தின. சொல்லப்போனால் அரசு என்ற நிர்வாக அமைப்பு தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததே, தானியம்தான். தானியம் குறித்துப் பிறகு பார்ப்போம். இப்போது விட்ட இடத்தில் தொடருவோம்.
இன்றியமையாத உணவு
ஒருபுறம் ‘வெள்ளை விஷம்’ என்று இயற்கை உணவு ஆதரவாளர்கள் பாலை வன்மையாக மறுக்கிறார்கள். மற்றொரு புறம் பாலூட்டிகளின் பாலை உலகின் பெரும்பாலான நாடுகளும், அனைத்து மனிதக் கூட்டங்களும் காலங்காலமாக நுகர்ந்துகொண்டே வந்திருக்கின்றன.
செங்கிஸ்கானின் படை கிளம்புகிறதென்றால் ஆயுதங்களைப் பட்டறையில் அடிக்கத் தொடங்குகிறபோதே, குதிரைப் பண்ணையில் குதிரைப் பாலாடைக் கட்டி சேமிப்பும் தொடங்கிவிடும். இறுகின பாலாடைக் கட்டிகளைச் சவைத்துக்கொண்டே குதிரையில் விரைந்து பறந்த செங்கிஸ்கானின் படை ஆசியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்ததை மறந்துவிட முடியாது.
நம் காலத்தில் அதிகம் புழங்கும் பதப்படுத்திய கெட்டிப்பாலும், பால் மாவும் ராணுவப் பயன்பாட்டுக்காக முதலில் உருவாக்கப்பட்டவைதான். பின்னர்தான் அது பொதுச் சமூக நுகர்வுக்குத் திறந்துவிடப்பட்டது. பாலும், பால் பொருட்களான பாலாடை கட்டி, வெண்ணெய், நெய் போன்றவையும் அனைத்துச் சமூகத்தினருக்கும் எப்போதும் இன்றியமையாத உணவுகளாகவே நீடித்துவந்துள்ளன.
மாடுகள் கால்நடைகளாக மாற்றப்பட்டது தொடர்பான பண்டைய எகிப்து ஓவியம்
எது வில்லன்?
பல் முளைக்கத் தொடங்கிய பிறகு பாலைச் செரிக்கும் திறன் குறைந்துவிடுகிறது என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. என்றாலும் காலங்காலமாக பாலைத் தொடர்ந்து பயன்படுத்திவருவதால், அதிலிருக்கும் சத்துகளை ஈர்க்க நம் உடல் தகவமைத்துக்கொண்டுவிட்டது. பசும் புல்லை மேய்ந்து ஒரு நேரத்துக்கு மூன்று, நான்கு லிட்டர்கள் மட்டுமே கறக்கும் நமது நாட்டுப் பசும்பாலும் அது சார்ந்த பொருட்களும் நம் உடலுக்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடியவையல்ல.
ஆனால், இன்றைய ‘பாக்கெட் யுக'த்தில் பிளாஸ்டிக் கிரேடுகளுடன் வீட்டுக் கிரில் கதவுப் பைகளில் வந்து விழுகிற பால்… நாம் எழும் முன்னே நமக்காகக் குளுமைத் தவம் கிடக்கிற பால்… சுண்டக் காய்ச்சியதைப் போன்ற அடர்த்தியான பால்… மினிஸ்டர் ஒயிட்டைக் காட்டிலும் பளீர் வெண்மையில் டாலடிக்கிற பால்... எடுத்துக் காய்ச்சினால் பாத்திரத்தில் பழுப்பு நிறத்தில் அடி பிடிக்கிற பால்… எத்தனை வேதிக்கலப்பு மிக்கது என்பதைப் பலரும் பல இடங்களில் எச்சரித்துவிட்டார்கள். பெட்ரோலியக் கழிவை நீர்க்கச் செய்து, அதனுடன் பால் போன்ற மாவை பிளண்ட் செய்து கலப்பதற்கு டிடர்ஜெண்ட் சேர்ப்பது உட்பட பல ஆபத்தான அம்சங்கள் பற்றி ஏற்கெனவே நிறைய பேசப்பட்டுவிட்டது.
‘’அதோ கூரையிலே கொள்ளி வைக்கிறானே, அதுதான் எம் பிள்ளைகளிலேயே உத்தமமான பிள்ளை’’ என்பது போல இன்றைய பாக்கெட் பாலில் மிகச் சிறப்பானதுகூட 40 சதவீதம் பாலையும் 60 சதவீதம் மற்றக் கூறுகளையும் உள்ளடக்கி உள்ளது என்பதே நாம் அறியாத உண்மை. பாக்கெட் தயிர், டப்பித் தயிர் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நெய்யில் பாமாயிலும், செயற்கை நறுமணங்களும், கவர்ச்சியான நிறமியும் சேர்க்கப்படுவது ஓரளவு அறியப்பட்ட ஒன்றுதான்.
சுவை சுரண்டல்
நம் காலத்தின் மிகப் பெரிய கேடு என்னவென்றால் வேதிக் கலப்புடைய பாலையும், பால் பொருட்களையும் பத்து வயதுக் குழந்தைகள்கூடச் சுவைத்துப் பழகிவிட்டதுதான். மெல்லிய கவிச்சை வாசமடிக்கும் மெய்யான மாட்டுப் பாலையும், ஜல்லிகளாக உடைந்து புளித்த நீரில் மிதக்கும் தயிரையும், உருக்கினால் நிறமிழந்து, உணவுடன் இரண்டறக் கலந்து நாவுக்கு மிதமான சுவையையும், செரிமான மண்டலத்துக்கு இதமான உணர்வையும் தருகிற மெய்யான நெய்யையும் தரங்கெட்டது என நிராகரித்துவிடுகிறார்கள் நம் குழந்தைகள். அவர்களது நாவின் சுவை மொட்டுகளைச் சுளீரென்று தாக்காத பண்டங்களை, தரங்கெட்டது என்று புறக்கணிக்கும் நிலை அதிவேகமாக வளர்ந்துவருகிறது.
நமது நாவின் சுவை மொட்டுகளைச் சுரண்டும் அனைத்துப் பண்டங்களும் நம் உள்ளுறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அதனால்தான் 20 வயதில் வாயுப் பிடிப்பு, 30 வயதில் நீரிழிவு, 40 வயதில் முட்டித் தேய்மானம் என்று உடல் உபாதைகள் அதிவேகமாக நம்மைச் சூழ்ந்துவருகின்றன. 2025-ல் இந்தியர்கள் பாதிப் பேருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கும் என இலக்கு வைத்து இயங்கிக்கொண்டிருக்கிறது வணிக மருத்துவம்.
நம்மைப் பொறுத்தவரை நாட்டுப் பசும்பால் அத்தனை தீங்கு விளைவிப்ப தில்லை. ஆனால், இன்றைய ஆலை உற்பத்திக்கு உள்ளாகிவிட்ட பாலும், பால் பொருட்களும் நம்பகத்தன்மை அற்றவை. அப்படியானால் பாலுக்கு என்னதான் மாற்று?
குழந்தைகளிலிருந்து நோயுற்ற முதியவர்கள்வரை அத்தனை பேருக்கும் உகந்த மிகச் சிறப்பான பால், நம் கைக்கு எட்டும் தொலைவிலேயே இருக்கிறது.
அதை அடுத்த வாரம் பார்த்துவிடுவோம்.
(அடுத்த வாரம்: டி.எம்.டி. கம்பிகளாக எலும்புகள் உறுதிபெற...)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com )
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago