இருமல் மருந்துகளைக் கடைகளில் சுயமாக வாங்கிக் குடிக்கும் பழக்கம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இது சரியா?
இது சரியில்லை.
இருமல் என்பது நம் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்துவதற்காக உடல் ஏற்படுத்திக்கொண்ட இயற்கையான ஒரு செயல்பாடு. இருமல் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. காற்றில் கலந்து வரும் தூசி, புகை, வாசனை, வேதிப்பொருட்கள் எனப் பலவும் இருமலைத் தூண்டலாம். மூக்கு, தொண்டையில் தொடங்கி நுரையீரலின் மூச்சு சிறுகுழல்கள்வரை எந்த இடத்திலும் கிருமிகள் தாக்கி, சளி பிடித்து இருமல் வரலாம்.
தடுமம், தொண்டைப் புண், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, சிஓபிடி (COPD), புற்றுநோய் ஆகியவை இருமலை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. இதயம் செயலிழக்கும்போது நுரையீரலில் நீர் கோத்து இருமல் வருவதுண்டு. ஒவ்வாமையும், புகைபிடித்தலும் இருமலை வரவேற்பவை. சுவாசப் பாதைக்குத் தொடர்பில்லாத அல்சர், நெஞ்செரிச்சல், குடல்புழு காரணமாகவும் இருமல் வரலாம். உணவு புரை யேறினால்கூட இருமல் வரும்.
இப்படியான காரணங்களைக் கொண்டு, இருமலைப் பல வகைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். திடீர் இருமல், நாட்பட்ட இருமல், வறட்டு இருமல், சளி இருமல், ஒவ்வாமை இருமல், ஆஸ்துமா இருமல், இரவு நேர இருமல் என்பன முக்கியமான வகைகள்.
எந்த இருமலுக்கு என்ன மருந்து?
இருமலானது சுவாசப் பாதையில் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்தும், சளி அல்லது நீர் கோத்திருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தும், வீசிங் இருப்பதைப் பொறுத்தும் இருமலின் சத்தம் வேறுபடும். அதை வைத்தே நோய் பாதிக்கப்பட்டுள்ள இடத்தை மருத்துவரால் தெரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்டமாக, ஸ்டெதாஸ்கோப்பைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் மார்பை முறையாகப் பரிசோதிக்கும்போது, இருமலுக்குக் காரணமும் வகையும் தெரிந்துவிடும். அதற்கேற்பத்தான் அவர் இருமல் மருந்தை எழுதிக் கொடுப்பார்.
உதாரணமாகச் சளி இருமல் என்றால் சளியைக் குறைக்க மருந்து, ஆஸ்துமா என்றால் மூச்சுக் குழாயை விரிக்கிற மருந்து, ஒவ்வாமை என்றால், அதைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தருவது, இதயச் செயலிழப்பு காரணம் என்றால் சிறுநீரைப் பிரிக்கும் மருந்து கொடுப்பது எனக் காரணத்தைக் களையும்போதுதான் நோய் குணமாகும்.
சரியான காரணத்தைக் களைய…
எந்த வகை இருமல், என்ன காரணம் எனத் தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்தால், இருமலுக்கான அடிப்படைக் காரணத்தைக் களைய முடியாது. அதனால் இருமல் குறையாது. வீண் செலவுதான் ஏற்படும். மருத்துவரிடம் போவதைத் தள்ளிப்போடுவதால், நோய் அதிகப்படவும் வாய்ப்பிருக்கிறது.
இருமல் மருந்துகளில் சளியை வெளியேற்றும் மருந்துகள், வீசிங் பிரச்னையைக் குறைக்கும் மருந்துகள், மூளையில் இருமல் மையத்தைக் கட்டுப்படுத்தி இருமலை மட்டுப்படுத்தும் மருந்துகள், தூக்கம் வரச்செய்யும் மருந்துகள் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றைச் சுயமாக வாங்கி உட்கொள்ளும்போது, அவற்றின் அளவு அதிகமாகி ஆரோக்கியம் கெடலாம்.
உதாரணமாக, ஆஸ்துமாவுக்குத் தரப்படும் ஒருவகை மருந்து அளவுக்கு மீறினால் விரல் நடுக்கத்தைக் கொடுக்கும்; நெஞ்சு படபடக்கும். தூக்கம் தரும் இருமல் மருந்துகளுக்குப் பல பேர் அடிமையாவதும் உண்டு. வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரத்தை இயக்குபவர்கள், இரவு நேரப் பணியாளர்கள் இம்மாதிரியான இருமல் மருந்துக்கு அடிமையாகி, விபத்துகளைச் சந்திக்கின்றனர்.
வித்தியாச மருத்துவம்
சாதாரண இருமலுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கை மூலிகை மருந்துகளைச் சாப்பிட்டுப் பார்க்கலாம். இருமல் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தால் அல்லது இருமலுடன் காய்ச்சல், சளி, உடல் மெலிவது, குரல் மாறுவது போன்ற துணை அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரைச் சந்திக்க வேண்டியது அவசியம்.
இருமல் மருந்தைக் குடிக்காமலும் ஒரு வகை இருமல் குணமாகும். எப்படியென்றால், மற்ற நோய்களுக்காகச் சாப்பிடும் சில மாத்திரைகளாலும் இருமல் வரும். அதை மாற்றினால், அளவை குறைத்தாலும் இருமல் மட்டுப்படும்.
(அடுத்த வாரம்: வீட்டு நாய் கடித்தாலும் தடுப்பூசி போட வேண்டுமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago