உலக சித்த மருத்துவ நாள் ஏப்ரல் 14
மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் சித்த மருத்துவம் நெடுங்காலமாக அருந் தொண்டாற்றி வந்துள்ளது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் சுவடிகளிலிருந்து சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்தல், சித்த மருத்துவச் செய்திகளைத் தொகுத்து நூலாக்குதல், பொது மக்களிடையேயும் அரசிடமும் சித்த மருத்துவத்தைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பலரும் செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக 19-ம் நூற்றாண்டில் உழைத்த சிலரைப் பற்றி பார்ப்போம்:
டாக்டர் ஒயிட்லா ஐன்ஸ்லி (Whitelaw Ainslie)
சர் ஒயிட்லா ஐன்ஸ்லி (1767 - 1837) ஆங்கிலேய அறுவை சிகிச்சை நிபுணர். கிழக்கிந்திய கம்பெனி உதவி அறுவை சிகிச்சை நிபுணராக 1788-ல் பணியில் சேர்ந்தார். 1813-ல் சென்னை மாகாண அரசு சார்பில் ‘Materia Medica of Hindoostan’ என்ற பெயரில் சித்த மருத்துவ மூலிகை தாது, ஜீவ வர்க்கங்களின் தொகுப்பு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஒவ்வொரு மூலிகைத் தாது ஜீவ வர்க்கங்களுக்குப் பிற மொழியில் பெயர் குறிப்பிட்டுள்ளார். இதில் தமிழ் மொழி பெயர்கள் தமிழ் எழுத்துகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சம்.
இந்நூலில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உரித்தான மூலிகைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. உதாரணமாகத் தூத்துக்குடி மாவட்ட மூலிகையான சிலந்தியரிசி (Cyperus bulbosus) பற்றியும், அதை மக்கள் உணவாக உட்கொண்டது பற்றியும் ஆவணப்படுத்தி உள்ளார். ‘Materia Medica’ உருவாக்க எடுத்தாளப்பட்ட சித்த மருத்துவச் சுவடிகளைப் பட்டியல் இட்டுள்ளார். அவர் பட்டியல் இட்ட சுவடிகள் தற்போது கிடைக்கவில்லை. சென்னை அரசு சார்பாகச் சித்த மருத்துவ மூலிகைக் கனிமங்கள், உயிர் வர்க்கங்களின் மருத்துவப் பயன்பாட்டை ஆங்கிலத்தில் பதிவு செய்து மிகப்பெரிய சேவையாற்றியுள்ளார். சித்த மருந்தியல் வரலாற்றில் இது மிகப் பெரிய தொண்டு.
மருத்துவர் முகைதீன் ஷெரீப் கான் பகதூர்
பரம்பரை அறுவைசிகிச்சை மருத்துவராக அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் இவர். மூலிகைகளைக் கொண்டு நோய்களை இவர் குணப்படுத்தும் தன்மையை வைத்தும், இவருடைய நூல் தயாரிப்பு முறை சிறப்பாக இருந்ததாலும் ஆங்கிலேய அரசு சார்பில் ‘Materia Medica of Madras’ என்ற ஆங்கிலச் சித்த மருத்துவ மூலிகை நூலைப் பதிப்பிக்க 1891-ல் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பணி ஏழு ஆண்டுகளுக்கு நீடித்து, அவருடைய உடல்நிலையைப் பாதித்தாலும், நூலை உருவாக்கும் பணியை அவர் கைவிட வில்லை. நூலை முடித்துப் பதிப்பிப்பதற்கான அரசு ஆணை கிடைப்பதற்கு முன்பே உயிர்துறந்தார். இந்த நூல் வெளியாக டேவிட் ஹூப்பர் என்பவர் காரணமாக இருந்தார். தன் மருத்துவ அனுபவத்தை வருங்காலச் சந்ததி பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டிருந்த கான் பகதூர், தன்னுடைய நூலை அரசு சொத்தாக வழங்கிய பண்பாளர்.
ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) என்றவுடன் தமிழ் இசையை மீட்டெடுத்தவர் என்ற தகவலே நம் நினைவை முதலில் வந்தடையும். அவர் மிகச் சிறந்த சித்த வைத்தியர் என்பது பலரும் அறிந்திராத செய்தி. மகான் கருணாகர சாமிகளிடம் ஆபிர காம் பண்டிதர் சித்த மருத்துவம் கற்றார். தஞ்சாவூரில் லேடி நேப்பியர் பள்ளியில் தலைமை யாசிரியராகப் பணியாற்றியபோது, சித்த மருத்துவமும் பார்த்துவந்தார்.
தஞ்சாவூரில் கருணானந்தபுரம் என்ற மூலிகைத் தோட்டத்தை உருவாக்கினார். ஆனால், உள்ளூர் மக்கள் இதை ‘பண்டிதர் தோட்டம்’ என்று அழைக்கின்றனர்.
- ‘கருணாநிதி மருத்துவக் கூடம்’ என்ற சித்த மருத்துவ மனையைத் தொடங்கி நடத்திவந்தார்.
- இவர் கண்டறிந்த கோரோசனை மாத்திரை இலங்கை, மியான்மரில் மிகவும் பிரபலம்.
- சித்த மருத்துவக் குழந்தைப் பிரிவில் புகழ்பெற்றிருந்தார்.
இவருடைய சித்த மருத்துவச் சேவையைப் பாராட்டிச் சென்னை மாநிலக் கவர்னர் சர் ஆர்தர் லவ்லி 1909-ம் ஆண்டு ‘ராவ் சாகிப்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
ராபர்ட் எலியட்
ராபர்ட் எலியட் (1864 - 1936), இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கண் அறுவைசிகிச்சை நிபுணர். சென்னை மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத் துறை பேராசிரியர். 1904-1914 காலத்தில் தன்னுடன் பணிபுரிந்த பரம்பரை சித்த மருத்துவக் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் ஏகாம்பரம் பற்றியும், அவருடைய கண்புரை (cataract) அறுவை சிகிச்சை பற்றி ‘Indian operation of couching for cataract’ என்ற தலைப்பில் 1918-ம் ஆண்டு இங்கிலாந்து ராயல் கல்லூரி அறுவைசிகிச்சையாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்து நூலாக வெளியிட்டுள்ளார். சித்த மருத்துவக் கண்புரை அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் பதிவு செய்து அழியாமல் பாதுகாத்த பெருமை இவரையே சாரும். (Br. med 1917 March 10:1 (2932) 334-335)
மருத்துவர் அயோத்தி தாசர்
பண்டிதர் அயோத்திதாசரை (1845 1914) சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கப் போராடியவர், சாதீயக் கொடுமைகளை அகற்ற உழைத்தவர் என்றுதான் பொதுவாக அறிகிறோம். அவர் மிகச் சிறந்த சித்த வைத்தியர் என்பது பலரும் அறியாத தகவல். அவர் இயற்றிய ‘அயோத்திதாசர் பாலவாகடம்’ என்ற நூலைப் பற்றி குறிப்பு சித்த மருத்துவப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.
இவரது நினைவாகவே சென்னை தாம்பரம் தேசியச் சித்த மருத்துவ நிறுவனத்தில் செயல்பட்டுவரும் மருத்துவமனைக்கு ‘அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயரின் வருகைக்குப் பிந்தைய சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஆரம்பகால மருத்துவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மேற்கண்ட ஐவர். இன்னும் பலரும் சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இதுபோன்ற எண்ணற்ற பலரின் உழைப்பைப் போற்றும் விதத்திலேயே உலகச் சித்த மருத்துவ நாள் கொண்டாடப்படுகிறது.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago