“என் குழந்தைக்கு எம்.எம்.ஆர். தடுப்பூசி போடலாமா? வேண்டாமா?” இன்றைக்கு 1.8 கோடி தமிழகக் குழந்தைகளின் பெற்றோர்கள் முன் நிற்கும் மிக கவலையான, குழப்பமான கேள்வி இதுதான். இந்தியா முழுக்க பெரியம்மையையும் (Small pox) போலியோவையையும் அறவே ஒழித்ததுபோல அம்மை நோய் வகைகளான ‘Measles, Mumps, Rubella’ ஆகிய வைரஸ் நோய் தாக்குதல்களைத் தடுக்கவே இந்த முயற்சி என அறைகூவல் விடுகின்றன தேசிய, மாநில நலவாழ்வுத் துறைகள்.
ஆனால், தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களோ, ‘அய்யோ! தடுப்பூசியா? இது அமெரிக்காவின் சதி வேலை; நம் உடம்புக்கு எந்தத் தடுப்பூசியும் தேவையில்லை. தடுப்பூசி மூலமாகத் தமிழ்க் குழந்தைகளின் அறிவாற்றலை, நோய் எதிர்ப்பாற்றலைச் சிதைக்கும் முயற்சி’ என கூக்குரலிடுகின்றனர். அதுவும் சமூக அக்கறையுடன், சூழலியல் பாதுகாப்புக்கும் மரபுப் பாதுகாப்புக்கும் முன்னிற்கும் சிலரும் இந்த வாதத்தை முன்வைப்பது, பெருவாரியான தமிழ் மக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரக் கிருமி
“எது மாற்று? எது மாற்று அரசியல்? எது மாற்று அறிவியல்? எது மரபு? எதுவரை நம் மரபு?” என்ற கேள்விகளுக்கான பதில், சில நேரங்களில் தெளிவற்றுச் செல்கிறதோ என்று ஐயம் தடுப்பூசியைத் தவிர்க்கச் சொல்லி வாதிடுவோரைப் பார்க்கும்போது தெரிகிறது. பன்னாட்டுக் குளிர்பானங்களை தடை செய்யச் சொல்லி நாம் நடத்தும் போராட்டம் போன்றதல்ல இந்த வாதம்; இத்தடுப்பூசியைத் தவிர்க்கச் சொல்வது, காற்றில் பரவி உயிரைப் பறிக்கவோ அல்லது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தவோகூடிய கிருமிகளை அப்படியே உலவவிடலாம் என்று அனுமதிப்பதற்கு ஒப்பானது. இன்னும் சொல்லப்போனால், ‘பொன்னுக்குவீங்கி எனும் மம்ப்ஸ் வைரஸ்’ நிரந்தர ஆண்மைக் குறைவையும் சினைப்பை அழிவையும் ஏற்படுத்தி, இனவிருத்திக்குச் சவால் விடும் நிலையை ஏற்படுத்தக்கூடிய கிருமி என்பதை மறந்துவிடக் கூடாது.
‘ஜல்லிக்கட்டு தடை’க்கு எதிராக நாமெல்லாம் கொதித்தெழுந்து போராடிய சூழலில் மாற்று அறிவியலும் அரசியலும் பேசும் பலரிடமிருந்து வெளிப்படும் ‘எல்லா தடுப்பூசியையும் தவிர்க்கலாம்’ என்ற குரல், படுவேகமாக வெகுமக்களைச் சென்று சேர்ந்துவிடுகிறது. ‘அறப்போராட்டத்தை முன்னெடுத்த பலரிடம் இருந்து வரும் தடுப்பூசி தவிர்ப்புக் குரல் உண்மையாகத்தானே இருக்கும்?’ என்ற நிலைப்பாட்டை நோக்கி மக்கள் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், “இதுவா மாற்று அறிவியல்?” என்பதுதான் இங்கே நாம் அவசியம் கேட்க வேண்டிய கேள்வி.
தடுப்பூசிகள் தந்த பலன்
எந்தக் கருத்தையும் முன்வைக்கும் முன்னர், நாம் வரலாற்றையும் அறிவியலையும் சமூகச் சூழ்நிலையையும் ஆராய்வது மிக முக்கியம். என் வயதை ஒத்தவர்கள் பள்ளியில் படிக்கும் போதெல்லாம், வகுப்புக்கு குறைந்தபட்சம் ஓரிருவராவது இளம்பிள்ளை வாதத்தால் மாற்றுத்திறனாளியாக இருப்பார். இப்போது நம் குழந்தைகளின் வகுப்பில் எத்தனை பேரை அப்படி பார்க்கிறோம்? நம் தலைமுறையில் முகத்தில் அழிக்க முடியாத அம்மை வடுக்களுடன் சிலரையேனும் பார்த்திருப்போம். இன்று நம் குழந்தைகளின் வகுப்பறையில் அப்படி ஒருவராவது உண்டா?
1947-இல் நாடு விடுதலை பெற்றபோது ஒரு இந்தியரின் சராசரி ஆயுட்காலம் வெறும் 37. இப்போது அது கிட்டத்தட்ட 65. இதையெல்லாம் எப்படிப் பெற்றோம்? இந்த ஆயுள்கால அதிகரிப்பிலும் உடல்நலப் பாதுகாப்பிலும் நவீன மருத்துவத்தின் பங்களிப்பை நிச்சயம் மறுக்க முடியாது.
அதற்கு முன் வரலாற்றில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 45 கோடியாகத்தான் இருந்தது. அதில் 7.5 கோடி சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அது ‘கறுப்பு மரணம்’ எனப்படுகிறது. அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். இன்றைக்கு பிளேக்கை நாம் கூகுளில்தான் தேடிக்கொண்டிருக்கிறோம். இப்படி உலகில் ஏராளமான குழந்தைகளின் மரணத்தைத் தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தி யுள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
உண்மை பிரச்சினை என்ன?
அதேநேரம் இதே நவீன மருத்துவத்துக்குள் புகுந்திருக்கும் அறமற்ற வணிகத்தையும் ஆதிக்க அரசியலையும் உதாசீனப்படுத்திவிட முடியாது. புதிது புதிதாக, அதிகம் ஆராயப்படாமல் பல நோய்த்தடுப்புத் தடுப்பூசிகளும் (Preventive), நோய் தீவிரம் குறைப்பு (Therapeutic) ஊசிகளும் இன்று சந்தைப்படுத்தப்படும் சூழல் இருப்பது உண்மைதான். அப்படிப்பட்ட தடுப்பூசிகளும் நம் குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பாரபட்சமில்லாத, காய்ப்பு உவப்பில்லாத தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னரே நம் மருத்துவ சிகிச்சையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
‘பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் முதலான காய்ச்சல் தரும் வைரஸ் தானாக உருவானவை அல்ல; ஆய்வகங்களில் படைக்கப்பட்டவை’ என ஆதாரங்களுடன் கூறும் அறிவியலாளர்களும் இருக்கிறார்கள். அப்படி கிருமிகளை உருவாக்கும் குரூர எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும் அது சார்ந்த வணிகத்திலிருந்தும் அறிவியலை பிரிப்பதை விட்டுவிட்டு, ‘அறிவியலே குரூரமானது’ என வாதிடுவதும் முடிவுக்கு வருவதும் மேம்போக்கான, ஆழமற்ற பார்வைதான்.
தடுப்பூசி வந்தது எப்படி?
தற்போது விவாதிக்கப்படும் மூன்று அம்மை நோய்களும் சரி, அதற்கான எம்.எம்.ஆர். தடுப்பூசியும் சரி புதிதாகப் படைக்கப்பட்ட ஒன்றல்ல. கி.பி. 1545-ல் தென்தமிழகத்தில் பெரியம்மை (Small pox) வராமல் தடுக்க, ஏற்கெனவே பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் கட்டியில் ஊசியில் குத்தி நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு, நோய் வராமல் தடுக்கும் (Inoculation) வழக்கம் இருந்தது. பிலடெல்பியா பல்கலைக்கழகத்து ‘வாக்சின் வரலாற்று இணைய தளத்தில்’ இது ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (நூல் ஆதாரம் :- The History of inoculation and vaccination XVIIth international congress of medicine, London 1913 Page 18-24) இப்படி தற்கால தடுப்பூசிமுறை பிறக்க நம் மரபும்கூட வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது.
பாதரசம் இல்லை
எம்.எம்.ஆரின் மீது ஏன் இத்தனை அதீத பயம்? பல ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வகைத் தடுப்பூசிகளில் செயல்வீரியம் ஒடுக்கப்பட்ட வைரஸ் இயங்காது இருப்பதற்கு பாதரசக் கூறுகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது சில சர்ச்சைகள், இவ்வகை தடுப்பூசிகளால் ஆட்டிச பாதிப்பு வரக்கூடுமோ என்று எழுந்தது. பின்னர் நடந்த ஆய்வுகளில் ஆட்டிச பாதிப்புக்கும் இந்தத் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதிப்படுத்திவிட்டது. அது மட்டுமல்லாமல், தற்போது தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் பாதரசக் கூறு எதுவுமே இல்லை.
இணையத்தில் பரவும் இன்னொரு சேதி. ’இது அமெரிக்காவின் திட்டமிட்ட சதி’ என்பது. தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லா வில்லன்களையும் ஒரு குறிப்பிட்ட நாட்டை, குறிப்பிட்ட மதத்தினராகச் சுட்டுவதற்கு ஒப்பான கற்பனை இது. இந்தத் தடுப்பூசி இந்தியாவில் புனேயில் தான் தயாராகிறது. அமெரிக்காவில் அல்ல.
அறம் சார்ந்த வெள்ளையர்
எல்லா மருத்துவத்துக்கும் எதிர்பாராத சில பக்கவிளைவுகள் உண்டு. அதுபோல தடுப்பூசிகளுக்கும் உண்டு என்கிறது, இதை கண்டறிந்த நவீன அறிவியல். தடுப்பூசியால் 10 லட்சத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படலாம் என அது சுட்டிக்காட்டுகிறது. தடுப்பூசியில் இருப்பது செயல்வீரியம் ஒடுக்கப்பட்ட வைரஸ் என்றாலும், அது அந்நியப் பொருள் என்பதால் நம் உடல் ஒருவேளை சிறிதளவு ஒவ்வாமையை ஏற்படுத்தவும் கூடும். ஒரு தராசில் இந்த ஒவ்வாமையை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் அந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பையும் வைத்துப் பார்த்தால், வைரசால் ஏற்படும் பாதிப்பிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நன்மைகள் உள்ளன என்பதுதான் நிதர்சன உண்மை.
போலியோ தடுப்பூசியைக் கண்டறிந்த ஜோனஸ் சால்க், தான் கண்டறிந்த தடுப்பூசியை முதலில் தான் உட்கொண்டார். பிறகு தன் குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதித்துப் பார்த்துவிட்டுத்தான் உலகுக்கு அதை அறிவித்தார். அன்றைய அறிவியலாளர்களில் இவரைப் போன்று அறம் சார்ந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். மேற்கத்திய உலகில் இருந்துவந்த அத்தனைக்கும் பின்னால் வணிகக் கண்ணியோ, வாரிச்சுருட்டும் சூழ்ச்சியோ இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை. அந்த அறிவியலுக்குள் இடையில் நுழைந்து தரகு வேலை செய்யும் நிறுவனங்களை இனம் கண்டு எதிர்க்க வேண்டுமே ஒழிய, அறம்சார்ந்த ஒட்டுமொத்த அறிவியலை அல்ல.
எதை எதிர்க்க வேண்டும்?
அறிவியலில் புகுந்து, காப்புரிமைக் கவசம் பெற்று, பல நோய்களுக்கும் நம் விளிம்புநிலைச் சாமானியர்கள் மருந்து பெற முடியாமல் தடுக்கும், மருந்து நிறுவன அரசியலை நிச்சயமாக நாம் எதிர்த்துப் போராட வேண்டும். உயிரித் தொழில்நுட்பத்தின் உதவியால் பயிரின் மரபணு நுணுக்கங்களைச் சிதைத்து, அவசரமாகவும் அரைகுறை அறிவியலாலும் நம் மரபு வேளாண்மைக்கும், நம் பயிர் பன்மைத்தன்மைக்கும், நம் உடல் நலனுக்கும், நம் தேசத்தின் இறையாண்மைக்கும் சவால் விடும் அறிவியல் தரகர்களை எதிர்த்துத்தான் ஆக வேண்டும்.
மற்றொருபுறம் ஏற்கெனவே வேகம் பெற்றுவிட்ட ‘வளர்ச்சி’ என்ற காட்டாற்று வெள்ளத்தில், நாமும் ஒரு கண்ணியாக உயிரினப் பன்மையை உலகின் ஒவ்வொரு மூலையிலும் சிதைத்துவருகிறோம். அதன் விளைவாக, உறங்கிக்கொண்டிருக்கும் நுண்ணுயிரிகள், வீறுகொண்டு எழுந்து காற்றில் பரவி சாமானியர் வீட்டுக் குழந்தையின் உயிரையும் சேர்த்தே பறிக்கும் நிலைதான் உள்ளது. அதைத் தடுத்து உயிரைக் காக்கும் தடுப்பு மருந்து நம் கையிலேயே உள்ளபோது, அதைத் தவிர்க்கச் சொல்வதும் எதிர்ப்பதும் எந்த வகையில் மாற்றுச் சிந்தனையாகும்?
அரசின் அணுகுமுறைக் கோளாறு
தமிழக மக்கள்தொகையில் கால்வாசிப் பேருக்கு, நம் பச்சிளம் குழந்தைகள் அனைவருக்கும் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வளவு மிகப்பெரிய திட்டத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன? தடுப்பூசி மருந்து சர்வதேச தரத்தில் எப்படித் தயாரிக்கப்படுகிறது? அது நமக்கு எப்படிப் பயனளிக்கும்? தடுப்பூசியைத் தவிர்த்தால் என்ன பாதிப்பு வரும்? ஏதாவது ஒரு மூலையில் பாதிப்பு ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன என்பதை ஊடகங்களிலும், பொதுவெளியிலும் இத்துறை சார்ந்த வல்லுநர்களால், அனைவருக்கும் புரியும் தாய்மொழியில் அரசு விளக்கியிருந்தால் தற்போதைய குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக பரீட்சை மதிப்பீட்டுத் தாளைப் போல், பள்ளி வழியாக பெற்றோரிடம் ஒப்புதல் பெற அரசு கடிதம் அனுப்பியது ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை.
அதேபோல ஒரு மாபெரும் மருத்துவ முன்னெடுப்புக்கு தேசிய தடுப்பூசிகளுக்கான ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunization), இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ICMR), இந்திய குழந்தை மருத்துவர்களின் அகாடமி (Indian Academy of Pediatrics) - என்னவிதமான வழிகாட்டுதல்களை வைத்திருக்கின்றன? அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை அனைவருக்கும் புரியும் தாய்மொழியில் விவரித்திருக்க வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதில் இப்போதாவது தெளிவு தேவை.
அந்த வகையில் இந்த முன்னெடுப்பை அரசு சற்று நிதானமாகவும் சரியாகவும் அணுகவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. தற்போது தேவையற்றுப் பெருகியிருக்கும் குழப்பத்துக்கும் பயத்துக்கும் இதுவே அடிப்படை. அதேநேரம், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே தடுப்பூசி போடுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago